பாடல் #324

பாடல் #324: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

கழுநீர்ப் பசுப்பெறிற் பின் கயந்தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் ஆனந்தத் தேறலே.

விளக்கம்:

அரிசி கழுவிய நீரை பசுவுக்குக் கொடுத்தால் அதைக் குடித்துப் பழகிய பசு அதற்குப் பிறகு குளங்களைத் தேடிச் சென்று நல்ல நீரைப் பருகாது. தாகம் எடுத்தாலும் எளிதாக கிடைக்கும் நல்லநீரை குடிக்காமல் அரிசி கழுவிய கழுநீருக்காக காத்திருந்து அந்தப் பசுக்கள் தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். அதுபோலவே போதை தரக்கூடிய மதுவைக் குடித்துப் பழகிய மனிதர்கள் ஒழுக்கத்திலிருந்து விலகி எளிதாக கிடைக்கும் செழுமையான நீரான சிவானந்தத் தேனான அமிர்தத்தைப் பருகாமல் போதைதரும் மதுவை பருகி தங்களின் வாழ்க்கையை வீணாகக் கழிக்கின்றனர்.

பாடல் #325

பாடல் #325: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டு
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்மைக் காலே.

விளக்கம்:

உயிர்கள் வெளியுலக எண்ணங்களை முழுமையாக நீக்கிவிட்டு இறைவனின் மேல் சிந்தனையை வைத்து யோகத்தில் சிவமாக இருக்கும் சமாதி நிலையில் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரரதளத்தில் சேர்த்தால் அங்கே ஊறும் மிகவும் தூய்மையான அமிர்தத்தைப் பருகி பேரானந்தத்திலேயே இருப்பதை விட்டுவிட்டு புத்தியை மயக்கும் உலக மதுவை பருகி அந்த மயக்கத்தில் இருப்பதும் சுய நினைவின்றி மயங்கிக் கிடப்பதும் உயிர்களை இழிவு நிலைக்கு அழைத்துச் செல்லும்.

பாடல் #326

பாடல் #326: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

விளக்கம்:

காமமும் போதை தரும் மதுவும் கீழ்த்தரமான மனிதர்களுக்கே உரியது. மதுவினால் மிகப்பெரிய அழுக்காகிய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால் நம்மையே உணர முடியாத அளவுக்கு அறிவு எல்லா நேரத்திலும் மயங்கி கிடக்கும். நாளடைவில் அறிவு அழிந்தே போகும். எப்போதும் பேரானந்த உணர்வைத் தரும் இறைவனின் திருவடிகள் போலவே பேரானந்தத்தைத் தரும் அமிர்தத்தைப் பெற்று அருந்துவது மேன்மையான மனிதர்கள் செய்யும் செயலாகும்.

பாடல் #327

பாடல் #327: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே மயங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அண்ணலை நணுகுவர் தாமே.

விளக்கம்:

தீவினையைச் செய்பவர்கள் தமக்கும் தீயதாகிய மதுவைக் குடித்து குடித்து அழிந்து போவார்கள். காம எண்ணம் கொண்டவர்கள் அந்தக் காமத்தையே மதுவாகக் குடித்து அதிலேயே மயங்கிக் கிடப்பார்கள். அப்படி இல்லாமல் தவ வழியில் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபடுபவர்கள் தமக்குள்ளேயே பேரொளியாக இறைவனின் பேரானந்தத்தை உணர்வார்கள். இறைவனது திருநாமத்தை மட்டுமே எப்போதும் சிந்தித்து ஓதிக்கொண்டே இருப்பவர்கள் இறைவனோடு பேரானந்தத்தில் கலந்துவிடுவார்கள்.

பாடல் #328

பாடல் #328: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்துஅறி யாரே.

விளக்கம்:

புத்தியை மயக்கும் மதுவை அருந்தி அதில் மயங்கிக் கிடப்பவர்கள் இறைவனை அடையும் வழிகளைச் சொல்லும் வேதங்களின் கருத்தை அறிய மாட்டார்கள். பதி, பசு, பாசம் என்பவற்றில் உள்ள உட்பொருளை அவர்கள் உணர்வதில்லை. உயிர்களுக்கு பெருங்கருணையோடு அருளை வாரி வழங்கும் வள்ளலாகிய இறைவனின் அருள் பெற்று வாழும் பேரானந்த வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள், அறிவிற்கு தெளிவைக் கொடுக்கும் உண்மையான ஞானத்தைத் தரும் சிவயோகம் செய்பவர்களுடன் சேரவும் மாட்டார்கள் தானும் சிவயோகம் செய்ய மாட்டார்கள். மதுவை அருந்துபவர்கள் உண்மை கருத்துக்கள் எதையும் அறிந்து கொள்ளும் தகுதி இல்லாதவர்கள் ஆகின்றனர்.

குறிப்பு : பேரொளியாக இருக்கும் பதி என்ற இறைவனிடம் இருந்து வந்த ஆத்மா தான் பசு இந்த பசு மீண்டும் பதியாகிய இறைவனிடம் சென்று சேர்ந்து பிறவி இல்லா முக்தி அடைய வேண்டும். ஆனால் பதியிடம் இந்த பசு சென்று சேரவிடாமல் தடுப்பது பாசம் எண்ணும் கயிறு. சிவயோகம் செய்து உண்மை ஞானத்தை அடைந்தால் பாசம் என்னும் கயிற்றை அறுத்து பதியிடம் சென்று சேர்ந்து விடலாம். இந்த உண்மை ஞானத்தை அறிந்து கொள்ளும் அறிவை மது அழித்துவிடும்.

பாடல் #329

பாடல் #329: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

மயக்குஞ் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணு மாமூடர் தேரார்
மயக்குறு மாயையின் மாமாயை வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

விளக்கம்:

மனதை மயக்கும் மதுவை சமயத்தின் பெயரால் அருந்தி சமயத்தை அழுக்காக்கின்றனர் மூடர்கள். மயக்கம் தரும் மதுவை அருந்தும் மூடர்கள் சமயத்தை ஆராய்ந்து அறியும் திறன் இல்லாதவர்களாக மாபெரும் மூடர்களாகின்றனர். உலகப்பற்று என்னும் பெரும் மயக்கத்திலுருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்ற தெளிவு இருப்பவர்கள் கூட சமயவழியில் சென்று மது அருந்தி வழிபட்டால் உலக மயக்கம் தெளிந்து இறைவனை அடையலாம் என்று எண்ணி மது அருந்துபவர்களை மது அன்றே மயக்கமடையச்செய்யும்.

குறிப்பு : மது கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களை இறைவனை அடைய வேண்டும் என்று எண்ணி சமயத்தின் பெயரால் அருந்தினாலும் அந்த போதை மயக்கம் மேலும் அவர்களை மூடர்களாக்கி மயக்கத்திலேயே வைத்திருக்கும்.

பாடல் #330

பாடல் #330: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

மயக்கும் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தி
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்தே.

விளக்கம்:

மதுவானது குடிப்பவரின் புத்தியில் தடுமாற்றத்தையும் மனச்சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். உண்மை பேசுவதை தடுத்து பொய் பேச வைக்கும். மது அருந்துபவர்கள் இன்பத்துக்காக பொதுமகளிரை நாடி அவர்களிடம் மயங்கி இருப்பார்கள். இவர்களுக்கு நல்லறிவைக் கொடுக்கும் உண்மை ஞானத்தினால் கிடைக்கும் பேரானந்தம் ஒரு போதும் கிடைக்காது.

பாடல் #331

பாடல் #331: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்
திராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

விளக்கம்:

இரவு பகல் என்று தெரியாமல் எந்த சிந்தனையும் எண்ணங்கள் அற்று உடலாலும் உள்ளத்தாலும் மற்றும் உலக பந்தங்கள் என்று எதனாலும் பாதிக்காமல் தன்னை மறந்த நிலையில் இருந்தால் தனக்குள் உண்டாகும் பேரானந்த சிவானந்ததேனை உலகத்தார் அருந்தாலாம். ஆனால் உயிர்கள் மதுவை குடித்து வீணாக அழிகின்றனர். எதனாலும் பாதிக்காத இறைவனின் திருவடிகளைப் பற்றினால் இறைவனே கொடுக்கும் சுத்த மாயையும் பந்த பாச ஆசைகளினால் வரும் அசுத்த மாயையையும் அறுந்து தனக்குள் உண்டாகும் பேரானந்த சிவானந்ததேனை அருந்தலாம்.

பாடல் #332

பாடல் #332: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானவா னந்தத்திற் சார்தலே.

விளக்கம்:

தேவியை வணங்குபவர்களில் சிலர் அவள் அருளைப்பெற்று மந்திர தந்திரசக்தி அடைய வேண்டும் என்று மதுவைப்படைத்து பின்பு அருந்துகின்றனர். மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள். தம்மை மறந்ததால் அவர்களுடைய ஆற்றல் அழியும். அருள் சக்தி என்பது இறைவன் மேல் எண்ணத்தை வைத்து சிவஞானத்தை அறிந்து அதில் நிலைபெற்று உண்மை ஞானத்தை அடைவதே ஆகும்.

பாடல் #333

பாடல் #333: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.

விளக்கம்:

சிவம் அருள் பெற்றால் அதில் சக்தியின் அருளும் இருக்கும். அதுபோலவே சக்தி அருள் பெற்றால் அதில் சிவத்தின் அருளும் இருக்கும். இரண்டும் கலந்து தமக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணரந்து அடைந்தால் உண்மையான சக்தியின் தன்மையாகிய எட்டுவித சித்திகளும் (அட்டமா சித்திகள்) கிடைக்கும்.