பாடல் # 812 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே.
விளக்கம் :
தன்னை வழிபடும் நல்வினை இல்லாதவர்க்கும் அவர் தலையில் மறைந்தே இறைவன் இருக்கின்றான். தன்னை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்பக்கமாக வைத்து வழிபடுகின்றவர்களுக்கும் அவ்வழியாய் நின்று இறைவன் அருள் செய்கின்றான். தன்னை மானசீகமாய் ஆதாரங்களில் வைத்து பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே இறைவன் விளங்குகின்றான். யோகத்தைச் செய்கின்றவர்களுக்கு அவர்களது உணர்வு வடிவாய் இறைவன் நிற்கின்றான்.