பாடல் #786 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே.
விளக்கம் :
உயிர் வாழ்தற்கும் வாழ்நாளை அளந்து அறிதற்கும் காரணமான கருவிகள் மூலாக்கினி பிராணவாயு இவற்றின் பெருமைகளை அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. அதனால் அவற்றை யோகத்தின் மூலம் ஒழுங்குபட நிறுத்தாத காரணத்தில் விரைவில் உடலை விட்டு நீங்குகின்ற உயிரின் பெருமையையும் அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. யாம் இறைவனின் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.
