பாடல் #548: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (ஞானம் பெற்ற பெரியவர்களின் துணையைப் பெறுதல்)
அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந் தூழி யிருக்குந்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.
விளக்கம்:
கலை ஞானத்தில் சிறந்து இறைவனை அடையக்கூடிய அருமையை உணர்ந்தவர்கள் ஒரு நொடிப் பொழுதும் இறைவனை மறக்காமல் இருப்பதின் பயனால் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரைசேரும் பெருமையை உடையவர்கள், இறைவனைத் தனக்குள்ளே உணர்ந்து அதிலேயே ஆழ்ந்து அவனது திருவருளைப் பெற்றவர்கள் ஆகியவர்களோடு யாமும் சேர்ந்து இருக்கின்றோம்.
உள்கருத்து: 64 கலைகள் உள்ளது. அதில் ஏதேனும் ஒன்றோ பலவோ கற்று அதில் ஞானம் அடைந்தவர்கள். பக்தி மார்கத்தின் மூலமாக இறைவனை ஒரு நொடிப்பொழுதும் மறக்காமல் இருப்பவர்கள். யோக மார்கத்தின் மூலமாக இறைவனை தனக்குள் உணர்ந்தவர்களுடன் யாம் துணையாக இருக்கன்றோம் என்று அருளுகின்றார்.