பாடல் #546: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)
தார்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழாவெந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறியைக் கூடலு மாமே.
விளக்கம்:
இறைவனின் அடியவர்கள் உலகத்தில் இருக்கும் மன்னர்களை பொய்யாக புகழாமல் கயிறு போல திரித்து விரிந்த சடையைக் கொண்டு வீற்றிருக்கும் எம் தந்தையான இறைவனை உண்மையான பக்தியோடு புகழ்ந்து அவரின் பொன்னான திருவடிகளை சேருவார்கள். இறைவனை வெறும் வார்த்தைகளால் போற்றி வணங்காமல் உண்மையான பக்தியோடு உள்ளம் உருக வேண்டினால் அந்த இறைவனின் அடியவர்களின் துணையைப்பெற்று அவர்களின் வழிசென்று இறைவனை அடையலாம்.