பாடல் #514: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)
கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பிற் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.
விளக்கம்:
உயிர்கள் பிறக்கும் போது உள்ளத்தில் பலவகை குணங்கள் உள்ளது. அவை தாமசம், இராசதம், சாத்வீகம் என்ற 3 வகை குணங்களுக்கு உட்பட்டவை. தாமச குணங்கள் இருக்கும் போது குண்டலினி சக்தியாக இருக்கும் தீர்த்தமானது கறுப்பாக இருக்கும். இந்த தாமச குணம் இராசத குணங்களாக மேலோங்கும் போது அந்த தீர்த்தமானது சிவப்பாக மாறும். இந்த இராசத குணம் சாத்வீக குணங்களாக மேலோங்கும் போது அந்த தீர்த்தமானது வெளுப்பாகி மேலே சென்று சகஸ்ரதளத்தை அடையும். அவ்வாறு சகஸ்ரதளத்தை அடைந்ததும் தமது உடலாகவும் உடலுக்குள் உயிராகவும் இறைவனே இருப்பதை உயிர்கள் உணரலாம்.
குணங்களின் விளக்கம்:
தாமச குணம் (தாமசம்) – காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களுக்கு ஆசைப்படுதல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வது, பகட்டுக்காக செயல்கள் செய்வது.
இராசத குணம் (இராட்சதம்) – ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.
சத்துவ குணம் (சாத்விகம்) – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம், புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு கூச்சப்படுதல், தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், தானம், பணிவு மற்றும் எளிமை.
குறிப்பு: இப்படாலில் 4வது வரியில் குறிப்பிட்டுள்ள நீர் அமிர்தத்தையும் நிலம் மண்ணாகிய உடம்பையும் காற்று மூச்சுக்காற்றாகிய உயிரையும் குறிக்கும்.