பாடல் #422: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)
இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றிழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலம் தான்வெந் ததுவே.
விளக்கம்:
இறைவன் வினையின்படி அனைத்தையும் அழிக்கும் மூன்று விதமான பிரளய வகைகளில் கற்பாந்தப் பிரளயத்தில் நிலையில்லாத இந்த உலகம் இழிவு நிலை பெற்று அழிந்து போனதை யானும் இறைவனின் திருவருளால் அவனோடு நின்று கண்டு உணர்ந்தேன். உலையில் இடப்பட்ட அரிசி நெருப்பினால் சூடு பெற்று கொதித்து வெந்து சாதமாகிறதோ அதுபோல மலைகளால் சூழப்பட்ட மாபெரும் நிலப்பரப்பான இந்த உலகமும் இறைவன் தந்த நெருப்பினால் வெந்து அழிந்தது.
மூன்று வகை பிரளயங்கள்:
- தினப் பிரளயம் – ஒவ்வொரு உயிரும் தினமும் தூங்கி எழும் இடைவெளியில் நிகழும் அழிவுகள்
- கற்பாந்தப் பிரளயம் – வினை முடிந்தபின் வரும் அழிவுகள் (உயிர்களோடு உலகமும் அழிவது)
- மகாப் பிரளயம் – ஊழிக்காலத்தில் வரும் பேரழிவு (அண்டங்களையே அழிக்கக் கூடியது)