பாடல் #365: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்
சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.
விளக்கம்:
பிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவர் திகைத்துப் போனார்கள். அங்கு பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தியை அனைத்தையும் படைத்து சுயம்புவாய் தோன்றியவனே என்று இறைவனை மனதில் வைத்து வழிபட்ட உலகத்தில் உள்ள உயிர்களுக்காக கடல்நீர் வெள்ளம் கடலோசை மேலும் அதிகரிக்காமல் இருக்க அந்த நீரில் அக்னியை உண்டாக்கினார் இறைவன்.
உட்கருத்து: பிரளயத்தை ஏற்படுத்தி அனைத்தையும் அழித்த இறைவன் தன்னை வழிபட்டு சரணடைந்த உயிர்களை காப்பாற்றினார்.