பாடல் #218: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)
நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரும் அத்தினம் ஆமென்றும்
செய்நின்ற செல்வமும் தீயுமது வாமே.
விளக்கம்:
யாகத்தில் இடும் நெய்யில் பற்றிக் கொண்டு எரியும் பெரிய நெருப்பின் உள்ளிருக்கும் இறைவன் அருளைக் கொண்டு தமது ஆன்ம இருளான மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) எரித்து முக்தி பெறும் விதத்தை அறிந்து கொண்டவர்களுக்கு இருளை நீக்கும் இரத்தினம் போல வேள்வி செய்பவர்களின் உள்ளிருந்து மும்மல இருளை நீக்கி அவர்களை முக்திபெறுபடி செய்யும் மாபெரும் செல்வம் அவர்கள் வளர்த்த ஹோமத் தீயே.
கருத்து: முறையாக வளர்த்த வேள்வித் தீயில் வெளிவரும் இறைஜோதி உயிர்களின் உள்ளே இருந்து அவர்களின் மும்மல இருள்களை நீக்கி முக்திபெற செய்யும் என்பதை அறிந்தவர்கள் வேள்வித் தீயை தினமும் வளர்ப்பார்கள்.