பாடல் #217: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)
போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகியே வெறிக்கின்ற வாறே.
விளக்கம்:
காலை மாலை இரு வேளையிலும் வேத முறைப்படி மந்திரங்கள் ஓதி அந்தணர்கள் ஹோமம் செய்து வந்தால் அந்த ஹோமத்தில் இருக்கும் இறை சக்தியானது ஹோமத்தினால் மகிழ்ந்து உயிர்களுக்கு அருள் வழங்கிவிட்டு உயிர்களின் கூடவே காத்துக் கொண்டு துணையாக நிற்கும். அப்படி செய்யாமல் இருந்தால் ஆண் பெண் இருவரால் உருவாகும் உயிர் காட்டுப் பறவைகளைப் போல தமது விருப்பப்படி அலைந்து திரிந்து மனதில் நிம்மதி இல்லாமலும் செல்வம் இல்லாமலும் துன்பப்பட்டுக் கொண்டு ஆசைகளிலேயே மயங்கிக் கிடக்கும்.
கருத்து: ஒரு நாட்டில் வாழும் உயிர்கள் தமது உலகப் பற்றுக்களை அறுத்து முக்தி பெற வேண்டுமெனில், வேத முறைப்படி தினமும் காலையும் மாலையும் யாகம் செய்யும், பாடல் #215ல் உள்ளபடி பெற்றதை பிறருக்கும் கொடுத்து மிஞ்சியதை மட்டுமே உண்டு வாழும் அந்தணர்கள் அந்த நாட்டில் இருக்க வேண்டும்.