பாடல் #366: இரண்டாம் தந்திரம் – 5. பிரளயம்
பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்தியைக்கொண் டானே.
விளக்கம்:
இறைவனை ஏற்காமல் அவரை குற்றப்படுத்தும் வழிகளைப் பின்பற்றி நடக்கும் உயிர்களை பிரளய காலத்தில் மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்ற தன் மேல் உண்மையான அன்பை வைக்க முடியாதபடி அந்த உயிர்களின் தலையின் உச்சியில் இருந்து ஆட்சி செய்யும் ஆணவத்தை அழித்து அவர்களையும் ஆட்கொண்டு விண்ணுலகத் தேவர்களும் குற்றம் கூற முடியாதபடி புதிய உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கினான்.
உட்கருத்து: பிரளய காலத்தில் தம் மீது அன்புகொண்ட அடியவர்களை மட்டுமே காப்பாற்றுவான் என்று இல்லாமல் தம்மை பழிக்கும் உயிர்களையும் காப்பாற்றும் பெரும் கருணை கொண்டவன் இறைவன். பிரளய காலத்தில் தம் மீது அன்பு கொள்ளாத பிற உயிர்களின் தலையில் இருக்கும் அகங்காரம் ஆணவத்தை அழித்து அந்த உயிர்களையும் ஆட்கொண்டு அருளும் இறைவன் பிறகு புதியதாக உலகங்களையும் உயிர்களையும் உருவாக்கி அருளுகின்றான்.