பாடல் #215: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமுமறி வாலே தலைப்பட்ட வாறே.
விளக்கம்:
அரிய பொக்கிஷமான வேதங்களை முறையாக மந்திரங்கள் ஓதி ஹோமத் தீயை வளர்க்கும் அந்தணர்கள் தமது முக்திக்கு வழி தேடி ஹோமம் செய்து பெற்றதை பிறருக்கும் கொடுத்து மிஞ்சியதை மட்டுமே உண்டு வாழ்வார்கள். அப்படி வாழும் அந்தணர்கள் இறைவனை அடையக்கூடிய வாழ்க்கை முறையை உண்மை நெறிப் பாதையை அவர்கள் தவறாமல் செய்த ஹோமத்தின் பயனால் அறிந்து கொண்டு அதன் படியே வாழ்ந்து முக்தி அடைவார்கள்.
கருத்து: வேத முறைப்படி யாகங்கள் தவறாமல் செய்து அதில் கிடைக்கும் பொருட்களைப் பிறருக்கும் கொடுத்து மீதி இருப்பதை உண்டு நெறி தவறாமல் வாழும் அந்தணர்கள் முக்தி அடைவார்கள்.