பாடல் #1754: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)
ஆதார மாதெய்வ மாகின்ற விந்துவு
மேதாதி நாதமு மீதே விரிந்தன
வாதார விந்து வதிபீட நாதமே
போதா விலிங்கப் புணர்ச்சியது ஆமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆதார மாதெயவ மாகினற விநதுவு
மெதாதி நாதமு மீதெ விரிநதன
வாதார விநது வதிபீட நாதமெ
பொதா விலிஙகப புணரசசியது ஆமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆதார மா தெய்வம் ஆகின்ற விந்துவும்
மேத ஆதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே.
பதப்பொருள்:
ஆதார (அனைத்திற்கும் ஆதாரமாகிய) மா (மாபெரும்) தெய்வம் (தெய்வமாக) ஆகின்ற (ஆகின்ற) விந்துவும் (விந்து சக்தியும்)
மேத (அதற்கு மேலாக) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) நாதமும் (நாத சக்தியும்) மீதே (ஒன்றன் மீது ஒன்றாகவே) விரிந்தன (அனைத்திலும் விரிந்து பரந்து இருக்கின்றது)
ஆதார (இதில் ஆதாரமாகிய) விந்து (விந்து சக்திக்கு) அதி (மேன்மை தருகின்ற) பீட (பீடமே) நாதமே (நாத சக்தியாகும்)
போதா (எப்போதுமே பிரிந்து போகாத இந்த இரண்டு சக்திகள்) இலிங்க (இலிங்க வடிவத்தில்) புணர்ச்சி (கலந்து) அது (இருக்கின்ற நிலையே) ஆமே (ஆத்ம இலிங்கமாகும்).
விளக்கம்:
அனைத்திற்கும் ஆதாரமாகிய மாபெரும் தெய்வமாக இருக்கின்ற விந்து (வெளிச்சம்) சக்தியும் அதற்கு மேலாக ஆதியிலிருந்தே இருக்கின்ற நாத (சத்தம்) சக்தியும் ஒன்றன் மீது ஒன்றாகவே அனைத்திலும் விரிந்து பரந்து இருக்கின்றது. இதில் ஆதாரமாகிய விந்து சக்திக்கு மேன்மை தருகின்ற பீடமே நாத சக்தியாகும். எப்போதுமே பிரிந்து போகாத இந்த இரண்டு சக்திகள் இலிங்க வடிவத்தில் கலந்து இருக்கின்ற நிலையே ஆத்ம இலிங்கமாகும்.