பாடல் #1761

பாடல் #1761: ஏழாம் தந்திரம் – 5. ஆத்மலிங்கம்

பிரானல்ல னாமெனிற் பேதை உலகர்
குரானென்று மென்மனங் கோயில் கொண்டீச
னராநின்ற செஞ்சடை யங்கியு நீரும்
பொராநின் றவர்செய்யப் புண்ணியன் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிரானலல னாமெனிற பெதை யுலகர
குரானெனறு மெனமனங கொயில கொணடீச
னராநினற செஞசடை யஙகியு நீரும
பொராநின றவரசெயயப புணணியன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிரான் அல்ல நாம் எனில் பேதை உலகர்
குரான் என்றும் என் மனம் கோயில் கொண்டு ஈசன்
அரா நின்ற செம் சடை அங்கியும் நீரும்
பொரா நின்று அவர் செய்ய புண்ணியன் தானே.

பதப்பொருள்:

பிரான் (தலைவனாக இருந்து செயல் பட வைக்கின்ற இறைவன்) அல்ல (இல்லை) நாம் (நமக்குள்) எனில் (என்று சொல்லுபவர்கள்) பேதை (அறிவில்லாத) உலகர் (உலகத்தவர் ஆவார்கள்)
குரான் (உள்ளுக்குள் இருந்து ஓதுபவனாக) என்றும் (எப்போதும்) என் (எனது) மனம் (மனதையே) கோயில் (கோயிலாக) கொண்டு (கொண்டு நிற்கின்ற) ஈசன் (இறைவன்)
அரா (பாம்பு) நின்ற (அணிந்த) செம் (செழுமையான) சடை (சடையோடு) அங்கியும் (நெருப்பையும்) நீரும் (நீரையும் ஏந்திக் கொண்டு)
பொரா (தனக்கு ஒப்பு உவமை எதுவும் இல்லாதவனாக) நின்று (தனித்து நின்று) அவர் (அவன்) செய்ய (எம்மை நன்மைகளை செய்ய வைத்து) புண்ணியன் (அதன் புண்ணியங்களை) தானே (தானே ஏற்றுக் கொள்கின்றான்).

விளக்கம்:

தனக்குள் தலைவனாக இருந்து செயல் பட வைக்கின்றவன் இறைவன் இல்லை என்று உலகத்தவர்கள் யாராவது சொன்னால் அவர்கள் அறிவில்லாதவர்களே. ஏன் என்றால் அனைவருக்கும் உள்ளுக்குள் இருந்து ஓதுபவனாகிய இறைவன் அடியவரது மனதையே கோயிலாக கொண்டு தலையில் பாம்பை அணிந்த சடையுடன் கையில் நெருப்பும் நீரும் ஏந்திக் கொண்டு நிற்கின்றான். அவன் அடியவரை நன்மைகள் செய்ய வைத்து அதன் புண்ணியங்களை தானே ஏற்றுக் கொள்கின்றான்.

One thought on “பாடல் #1761

  1. Meenakshi Muthia Reply

    குரான் என்றால் உள்ளுக்குள் இருந்து ஓதுபவன் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். நமது திருமூலர் சுவாமிகள் காலத்தில் இந்த வார்த்தை புழக்கத்தில் தமிழகத்தில் இருந்துள்ளது. இதுவரை குரான் என்றால் இஸ்லாமிய வேத புத்தகத்தின் பெயர் என்று தான் நினைத்திருந்தால். மிக வியப்பாக உள்ளது !
    மிக்க நன்றி ஐயா !

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.