பாடல் #1729: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
கோயில்கொண் டானடி கொல்லைப் பெருமுறை
வாயில்கொண் டானடி நாடிகள் பத்துள
பூசைகொண் டானடி புனைந்தும் புற்கிட்டு
வாயில்கொண் டானெங்கள் மாநந்தி தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கொயிலகொண டானடி கொலலைப பெருமுறை
வாயிலகொண டானடி நாடிகள பததுள
பூசைகொண டானடி புனைநதும புறகிடடு
வாயிலகொண டானெஙகள மாநநதி தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கோ இல் கொண்டான் அடி கொல்லை பெரும் உறை
வா இல் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் அடி புனைந்தும் புற்கு இட்டு
வா இல் கொண்டான் எங்கள் மா நந்தி தானே.
பதப்பொருள்:
கோ (தாம் வீற்றிருக்கும் கோயில்) இல் (இடமாக) கொண்டான் (உயிர்களின் உடலை ஆட்கொண்ட இறைவன்) அடி (தமது திருவடிகளால்) கொல்லை (அழுக்குகளை மட்டுமே கொண்ட) பெரும் (பெரிய) உறை (உறை போல் தசைகளால் மூடி இருக்கும் உடலையே)
வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டான் (ஏற்றுக் கொண்டு) அடி (தமது திருவடிகளால்) நாடிகள் (உடலுக்குள் இருக்கின்ற நாடிகள்) பத்து (பத்தும்) உள (இயங்குகின்ற இயக்கத்தையே)
பூசை (தமக்கு செய்யும் பூசையாக) கொண்டான் (ஏற்றுக் கொண்டு) அடி (தமது திருவடிகளால்) புனைந்தும் (அடியவரின் உடலை ஒழுங்கு செய்து) புற்கு (அனைத்து அழுக்குகளையும்) இட்டு (அவரை விட்டு நீக்கி விட்டு சுத்தம் செய்து)
வா (தாம் வாசம் செய்கின்ற) இல் (இடமாக) கொண்டான் (அந்த சுத்தப் படுத்திய உடலை ஏற்றுக் கொண்டான்) எங்கள் (எங்களை வழிநடத்துகின்ற) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய) தானே (இறைவன்).
விளக்கம்:
அழுக்குகளை மட்டுமே கொண்டு தசைகளால் மூடப்பட்டு இருக்கின்ற உயிர்களின் உடலையே தாம் வீற்றிருக்கும் கோயிலாக ஆட்கொண்ட இறைவன் தமது திருவடிகளால் அந்த உடலில் இருக்கின்ற பத்து விதமான நாடிகளின் இயக்கத்தையே தமக்கு செய்கின்ற பூசையாக ஏற்றுக் கொண்டு தமது திருவடிகளின் அருளாலேயே அந்த உடலில் இருக்கின்ற அனைத்து அழுக்குகளையும் நீக்கி, ஒழுங்கு படுத்தி, சுத்தம் செய்து, அந்த உடலைக் கொண்ட அடியவரை தம்மை நோக்கி வழி நடத்திச் செல்கின்ற மாபெரும் குருநாதனாக அவரின் உடலுக்குள் வீற்றிருக்கின்றான்.
பத்து நாடிகள் – வியாபித்து இருக்கும் இடங்கள்
- இடகலை – இடது நாசி
- பிங்கலை – வலது நாசி
- சுழிமுனை – நடு முதுகெலும்பு
- புருஷன் – பிறப்பு உறுப்பு
- காந்தாரி – இடது கண்
- அத்தி – வலது கண்
- அலம்புடை – நாக்கு
- சங்கினி – தலை
- சிங்குவை – இடது கை
- குரு – வலது கை
ஓம் நமசிவாய
ஐயா அவர்களுக்கு
தினம் ஒரு மந்திரமாக வழங்கி வந்த இந்த பதிவு பாடல் 1729 உடன் நின்று விட்டது.
தயவுசெய்து மேற்கொண்டு தொடர்ந்து கிடைக்கும் படி பதிவுகளை upload செய்ய வேண்டும்.
மிகவும் நன்றி ஐயா
திருச்சிற்றம்பலம்