பாடல் #172: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்காலில் குதிக்கலு மாமே.
விளக்கம்:
உலகில் நிலையான செல்வம் எது என்று தெளிவான அறிவு இல்லாதவர்கள் யாம் கூறுவதைக் கேட்டுத் தெளிவடையுங்கள். அவ்வாறு தெளிவடைந்துவிட்டால் உங்களுக்குத் துன்பங்கள் இருக்காது. ஆற்றுப் பெருக்குப் போல திரண்டு வரும் பெருஞ் செல்வங்களைக் கண்டு மதிமயங்கி நிற்காதீர்கள். அந்தச் செல்வங்கள் எதுவும் நிலையானது அல்ல. அந்தச் செல்வங்களை உங்களது சேமிப்பிலிருந்து மாற்றிப் பிறருக்குக் கொடுத்துத் தீர்த்துவிடுங்கள். ஏனெனில் நீங்கள் இறக்கும் தறுவாயில் எம்பெருமான் வரும்பொழுது இந்தச் செல்வங்கள் எதையும் காட்டி அவனைத் தடுக்கவும் முடியாது. இந்தச் செல்வங்கள் எதையும் விட்டுவிட்டு வரமாட்டேன் என்று கூறவும் முடியாது. நீங்கள் பிறருக்குக் கொடுத்து உதவிய தருமங்களே உங்களோடு நிலைத்து நிற்கும்.