பாடல் #1703: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
சற்குணம் வாய்மை தயாவிவேகந் தண்மை
சற்குரு பாதமே சாயைபோ னீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புதமே தோன்ற லாகுஞ்சற் சீடனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சறகுணம வாயமை தயாவிவெகந தணமை
சறகுரு பாதமெ சாயைபொ னீஙகாமெ
சிறபர ஞானந தெளியத தெளிவொரதல
அறபுதமெ தொனற லாகுஞசற சீடனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சற் குணம் வாய்மை தயா விவேகம் தண்மை
சற் குரு பாதமே சாயை போல் நீங்காமே
சிற் பர ஞானம் தெளிய தெளிவு ஓர்தல்
அற்புதமே தோன்றல் ஆகும் சற் சீடனே.
பதப்பொருள்:
சற் (எதிலும் உண்மையாகவே) குணம் (இருத்தல்) வாய்மை (எப்போதும் உண்மையையே பேசுதல்) தயா (அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டு இருத்தல்) விவேகம் (உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல்) தண்மை (எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் இருத்தல்)
சற் (உண்மையான) குரு (குருவின்) பாதமே (திருவடிகளை) சாயை (அதன் நிழல்) போல் (போல) நீங்காமே (எப்போதும் நீங்கி விடாமல் சேர்ந்தே இருத்தல்)
சிற் (சித்தத்தில்) பர (இறைவனது பேரறிவு) ஞானம் (ஞானத்தை) தெளிய (தெளிவாக உணரும் படி) தெளிவு (குருவின் அருளோடு தெளிவாக) ஓர்தல் (ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்)
அற்புதமே (மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான) தோன்றல் (சக்திகளை உலக நன்மைக்காக செய்து காட்டுதல்) ஆகும் (ஆகிய இவைகளோடு இருப்பவனே) சற் (உண்மையான) சீடனே (சீடன் ஆவான்).
விளக்கம்:
எதிலும் உண்மையாகவே இருத்தல், எப்போதும் உண்மையையே பேசுதல், அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டு இருத்தல், உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல், எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் இருத்தல், உண்மையான குருவின் திருவடிகளை அதன் நிழல் போல எப்போதும் நீங்கி விடாமல் சேர்ந்தே இருத்தல், சித்தத்தில் இறைவனது பேரறிவு ஞானத்தை தெளிவாக உணரும் படி குருவின் அருளோடு தெளிவாக ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல், மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான சக்திகளை உலக நன்மைக்காக செய்து காட்டுதல், ஆகிய இவைகளோடு இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.
Very useful for be come yogi