பாடல் #1702

பாடல் #1702: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புலன்வழி மாற்றிச் சித்தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெடகை விடுநெறி வெதாநத மாதலால
வாழககைப புலனவழி மாறறிச சிததாநததது
வெடகை விடுமிகக வெதாநதி பாதமெ
தாழககுந தலையினொன சறசீட னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேட்கை விடு நெறி வேத அந்தம் ஆதல் ஆல்
வாழ்க்கை புலன் வழி மாற்றி சித்த அந்தத்து
வேட்கை விடும் மிக்க வேத அந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற் சீடன் ஆமே.

பதப்பொருள்:

வேட்கை (அனைத்து விதமான ஆசைகளையும்) விடு (விடுகின்ற) நெறி (வழி முறையே) வேத (வேதத்தின்) அந்தம் (எல்லையாகிய) ஆதல் (அனைத்தும்) ஆல் (சொல்லுவதால்)
வாழ்க்கை (உலக வாழ்க்கையை) புலன் (ஐந்து புலன்களாகிய கண், காதுகள், மூக்கு, வாய், தொடுதல் ஆகியவற்றின்) வழி (வழியே சென்று கொண்டு இருப்பதை) மாற்றி (மாற்றி விட்டு) சித்த (அனைத்து விதமான எண்ணங்களையும்) அந்தத்து (நீக்கி ஒடுங்குதலை செய்து)
வேட்கை (அனைத்து விதமான ஆசைகளையும்) விடும் (விட்டு விடுவதில்) மிக்க (மிகவும் சிறந்து இருக்கின்றவரும்) வேத (அனைத்து வேதங்களுக்கும்) அந்தி (எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின்) பாதமே (திருவடிகளை)
தாழ்க்கும் (பணிந்து வணங்குவதை மட்டுமே) தலையினோன் (தலையாக கொண்டு வாழ்பவனே) சற் (உண்மையான) சீடன் (சீடன்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

அனைத்து விதமான ஆசைகளையும் விடுகின்ற வழி முறையே வேதத்தின் எல்லையாகிய அனைத்தும் சொல்லுவதால், உலக வாழ்க்கையை ஐந்து புலன்களாகிய கண், காதுகள், மூக்கு, வாய், தொடுதல் ஆகியவற்றின் வழியே சென்று கொண்டு இருப்பதை மாற்றி விட்டு, அனைத்து விதமான எண்ணங்களையும் நீக்கி ஒடுங்குதலை செய்து, அனைத்து விதமான ஆசைகளையும் விட்டு விடுவதில் மிகவும் சிறந்து இருக்கின்றவரும், அனைத்து வேதங்களுக்கும் எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின் திருவடிகளை பணிந்து வணங்குவதை மட்டுமே தலையாக கொண்டு வாழ்பவனே உண்மையான சீடன் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.