பாடல் #1701: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
இறையடி தாழ்ந்தை வணக்கமு மெய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றிச்
சிறையுடன் னீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இறையடி தாழநதை வணககமு மெயதிக
குறையது கூறிக குணஙகொணடு பொறறிச
சிறையுடன னியறக காடடிச சிவததொ
டறிவுக கறிவிபபொன சனமாரககி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி
குறை அது கூறி குணம் கொண்டு போற்றி
சிறை உடன் நீ அற காட்டி சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன் மார்க்கி ஆமே.
பதப்பொருள்:
இறை (உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர் இறைவனின்) அடி (திருவடிகளை) தாழ்ந்து (பணிந்து வணங்கி) ஐ (இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து) வணக்கமும் (அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற) எய்தி (நிலையை அடைந்தவராகவும்)
குறை (தமக்குள் இருக்கின்ற குறைகள்) அது (எது என்பதை) கூறி (இறைவனிடம் எடுத்துக் கூறி அவனருளால் அவற்றை நீக்கி விட்டு) குணம் (இறையருளால் புனிதமான குணத்தை) கொண்டு (கொண்டு) போற்றி (அதற்கு நன்றி கூறி இறைவனை போற்றி வணங்குபவராகவும்)
சிறை (மாயை எனும் சிறை) உடன் (உடன் சேர்ந்து தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு) நீ (நீ என்பது இந்த உடம்போ உடமைகளோ அல்ல நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை) அற (மாயையை நீக்கி) காட்டி (காட்டி அருளுபவராகவும்) சிவத்தோடு (இறைவனுடைய அருளோடு சேர்ந்து இருந்து)
அறிவுக்கு (சீடருடைய அறிவுக்கு புரியும் படி) அறிவிப்போன் (உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும்) சன் (இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத) மார்க்கி (சன் மார்க்கத்தில் இருப்பவர்) ஆமே (ஆகும்).
விளக்கம்:
உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர் இறைவனின் திருவடிகளை பணிந்து வணங்கி இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற நிலையை அடைந்தவராகவும், தமக்குள் இருக்கின்ற குறைகள் எது என்பதை இறைவனிடம் எடுத்துக் கூறி அவனருளால் அவற்றை நீக்கி விட்டு இறையருளால் புனிதமான குணத்தை கொண்டு அதற்கு நன்றி கூறி இறைவனை போற்றி வணங்குபவராகவும், மாயை எனும் சிறை உடன் சேர்ந்து தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு நீ என்பது இந்த உடம்போ உடமைகளோ அல்ல நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை மாயையை நீக்கி காட்டி அருளுபவராகவும், இறைவனுடைய அருளோடு சேர்ந்து இருந்து சீடருடைய அறிவுக்கு புரியும் படி உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத சன் மார்க்கத்தில் இருப்பவர் ஆகும்.
