பாடல் #1699: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
சீராரு ஞானத்தி னிச்சை செலச்செல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றா
ராராயு ஞானத்த னாமடிவைக் கவே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சீராரு ஞானததி னிசசை செலசசெல
வாராத காதல குருபரன பாலாகச
சாராத சாதக நானகுநதன பாலுறறா
ராராயு ஞானதத னாமடிவைக கவெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சீர் ஆரும் ஞானத்தின் இச்சை செல செல
வாராத காதல் குரு பரன் பால் ஆக
சாராத சாதக நான்கும் தன் பால் உற்றார்
ஆராயும் ஞானத்தன் ஆம் அடி வைக்கவே.
பதப்பொருள்:
சீர் (சீரும் சிறப்பும்) ஆரும் (மிகுந்து இருக்கின்ற) ஞானத்தின் (உண்மையான ஞானத்தை பெற்றதால்) இச்சை (உலக பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள்) செல (விலகிப் போக) செல (விலகிப் போக)
வாராத (அவற்றின் மேல் இனி வராத) காதல் (பற்றானது) குரு (குருநாதர்) பரன் (இறைநிலையில் இருக்கின்றவரின்) பால் (மேல்) ஆக (கூடி வர)
சாராத (இதுவரை தமது கைக்கு சரிவர கிடைக்காத) சாதக (சாதகங்கள்) நான்கும் (சாந்தி, தாந்தி, உபாதனை, தீட்சை ஆகிய நான்கும்) தன் (தமது) பால் (கைவசப் படும்படி) உற்றார் (பேறு பெற்று)
ஆராயும் (அக புற ஆராய்ச்சியின் மூலம்) ஞானத்தன் (ஞானத்தின் உச்ச நிலைக்கு சென்று கொண்டே இருப்பார்) ஆம் (சாதகர்) அடி (தமது தலையின் மேல் குருநாதரின் திருவடிகள்) வைக்கவே (வைத்த பொழுதிலிருந்து).
விளக்கம்:
பாடல் #1698 இல் உள்ளபடி குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகிய சாதகரிடம் இதுவரை உலக பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள் விலகிப் போக விலகிப் போக அவற்றின் மேல் இனி பற்று வராது. அந்த பற்றானது இறைநிலையில் இருக்கின்ற தமது குருநாதரின் மேலேயே அதிகமாக கூடி வரும். அதன் பிறகு இதுவரை அவரது கைக்கு சரிவர கிடைக்காத சாந்தி, தாந்தி, உபாதனை, தீட்சை ஆகிய நான்கு விதமான சாதகங்களும் அவரது கைவசப் படும்படி பேறு பெறுவார். அதன் பிறகு அக (உள்ளுக்குள்ளும்) புற (வெளியிலும்) ஆராய்ச்சியின் மூலம் ஞானத்தின் உச்ச நிலைக்கு சென்று கொண்டே இருப்பார்.
நான்கு விதமான சாதகங்கள்:
- சாந்தி – அசைவற்ற நிலையில் சாதகம் செய்தல் / பேரமைதி
- தாந்தி – எண்ணங்களற்ற நிலையில் சாதகம் செய்தல் / மன அடக்கம்
- உபாதனை – வினைகளை சாதகம் செய்து எரித்து தீர்த்தல்
- தீட்சை – சந்தேகம் வரும் போது சாதகத்தின் மூலம் ஒரு கண நேரத்தில் குரு வார்த்தை கேட்டல்
மேலுள்ள நான்கு விதமான சாதகங்களைப் பற்றிய குறிப்புகள் சுவடியில் உள்ளது.