பாடல் #1696: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
சாத்திக னாய்ப்பல தத்துவந் தானுன்னி
யாத்திக வேதநெறி தோற்ற மாகியே
யார்த்த பிறவியி னஞ்சி யறனெறி
சாத்தவல் லானவனே சற்சீட னாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சாததிக னாயபபல தததுவந தானுனனி
யாததிக வெதநெறி தொறற மாகியெ
யாரதத பிறவியி னஞசி யறனெறி
சாததவல லானவனெ சறசீட னாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சாத்திகன் ஆய் பல தத்துவம் தான் உன்னி
ஆத்திக வேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அற நெறி
சாத்த வல்லான் அவனே சற் சீடன் ஆமே.
பதப்பொருள்:
சாத்திகன் (நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் சாத்வீக) ஆய் (குணத்தோடு) பல (குருநாதர் அருளிய பல) தத்துவம் (தத்துவங்களை) தான் (தனது) உன்னி (மனதிற்குள் வைத்து நினைத்து தியானித்து)
ஆத்திக (இறைவன் உண்டு என்று நம்பி அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு) வேத (அதற்காக வேதம் சொல்லுகின்ற) நெறி (வழிமுறைக்கான) தோற்றம் (தோற்றமாகிய தவ வேடமாகவே) ஆகியே (தாம் ஆகி)
ஆர்த்த (வினைகளின் பயனால் கிடைக்கப் பெற்ற இந்த) பிறவியின் (பிறவிக்கும் இனி எடுக்கப் போகின்ற பிறவிகளுக்கும்) அஞ்சி (பயந்து) அற (இனி பிறவியே எடுக்காமல் இருப்பதற்கு வேண்டிய தர்மத்தின்) நெறி (வழிமுறையை கடை பிடித்து)
சாத்த (தமது ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் குருவிடம் சரணடைந்து சமர்ப்பிக்க) வல்லான் (முடிந்தவன் எவனோ) அவனே (அவனே) சற் (சிறந்த உண்மையான) சீடன் (சீடன்) ஆமே (ஆவான்).
விளக்கம்:
நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் சாத்வீக (சாந்தம் / அமைதி) குணத்தோடு குருநாதர் அருளிய பல தத்துவங்களை தனது மனதிற்குள் வைத்து நினைத்து தியானித்து, இறைவன் உண்டு என்று நம்பி அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதற்காக வேதம் சொல்லுகின்ற வழிமுறைக்கான தோற்றமாகிய தவ வேடமாகவே தாம் ஆகி, வினைகளின் பயனால் கிடைக்கப் பெற்ற இந்த பிறவிக்கும் இனி எடுக்கப் போகின்ற பிறவிகளுக்கும் பயந்து இனி பிறவியே எடுக்காமல் இருப்பதற்கு வேண்டிய தர்மத்தின் வழிமுறையை கடை பிடித்து, தமது ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் குருவிடம் சரணடைந்து சமர்ப்பிக்க முடிந்தவன் எவனோ அவனே சிறந்த உண்மையான சீடன் ஆவான்.
