பாடல் #1695: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)
தொழிலார மாமணி தூயான சிந்தை
யெழிலா ரிறைவ னிடங்கொண்ட போத
வழலார் விறகாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தொழிலார மாமணி தூயான சிநதை
யெழிலா ரிறைவ னிடஙகொணட பொத
வழலார விறகாம வினையது பொகக
கழலார திருவடி கணடரு ளாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தொழில் ஆர மா மணி தூய் ஆன சிந்தை
எழில் ஆர் இறைவன் இடம் கொண்ட போதம்
அழல் ஆர் விறகு ஆம் வினை அது போக
கழல் ஆர் திரு அடி கண்டு அருள் ஆமே.
பதப்பொருள்:
தொழில் (இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்கின்ற சாதகத்தில்) ஆர (முழுமை பெற வேண்டுமென்றால்) மா (மாபெரும்) மணி (மணியாக இருக்கின்ற இறைவனின் மேல் தமது சிந்தனைகளை வைத்து அவனருளால்) தூய் (தூய்மையாக) ஆன (ஆகி விட்ட) சிந்தை (சிந்தனையோடு)
எழில் (பேரழகு) ஆர் (நிறைந்து இருக்கின்ற) இறைவன் (இறைவன்) இடம் (வீற்று) கொண்ட (இருக்கின்ற) போதம் (குருவிடமிருந்து தாம் பெற்ற போதனைகளை கடை பிடித்தால்)
அழல் (நெருப்பில்) ஆர் (மூடிய) விறகு (விறகு கட்டையும் எரிந்து நெருப்பாகவே) ஆம் (ஆகி விடுவது போல) வினை (தம்முடைய வினைகள்) அது (அனைத்தும்) போக (தம்மை விட்டு விலகி அழிந்து போய் விடும்)
கழல் (அதன் பிறகு சிலம்புகளை அணிந்து) ஆர் (பேரழகோடு இருக்கும்) திரு (இறைவனின் திரு) அடி (அடிகளை) கண்டு (தரிசித்து) அருள் (அவனது அருளை) ஆமே (பெறலாம்).
விளக்கம்:
இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்கின்ற சாதகத்தில் முழுமை பெற வேண்டுமென்றால், மாபெரும் மணியாக இருக்கின்ற இறைவனின் மேல் தமது சிந்தனைகளை வைத்து அவனருளால் தூய்மையாக ஆகி விட்ட சிந்தனையோடு பேரழகு நிறைந்து இருக்கின்ற இறைவன் வீற்றிருக்கின்ற குருவிடமிருந்து தாம் பெற்ற போதனைகளை கடை பிடித்தால், நெருப்பில் மூடிய விறகு கட்டையும் எரிந்து நெருப்பாகவே ஆகி விடுவது போல தம்முடைய வினைகள் அனைத்தும் தம்மை விட்டு விலகி அழிந்து போய் விடும். அதன் பிறகு சிலம்புகளை அணிந்து பேரழகோடு இருக்கும் இறைவனின் திருவடிகளை தரிசித்து அவனது அருளை பெறலாம்.