பாடல் #1649: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)
சிவனரு ளாற்சில தேவரு மாவர்
சிவனரு ளாற்சில தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேர்கி லாரமைச்
சிவனருள் கூறிற் சிவலோக மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சிவனரு ளாறசில தெவரு மாவர
சிவனரு ளாறசில தெயவததொ டொபபர
சிவனரு ளாலவினை செரகி லாரமைச
சிவனருள கூறிற சிவலொக மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேர்கிலார் தமை
சிவன் அருள் கூறில் சிவ லோகம் ஆமே.
பதப்பொருள்:
சிவன் (இறைவனது) அருளால் (திருவருளை) சிலர் (சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர்) தேவரும் (வானுலகத்து தேவர்களாகவும்) ஆவர் (ஆவார்கள்)
சிவன் (இறைவனது) அருளால் (திருவருளை) சிலர் (சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர்) தெய்வத்தோடு (தெய்வங்களுக்கு) ஒப்பர் (சரிசமமாக விளங்குவார்கள்)
சிவன் (இறைவனது) அருளால் (திருவருளினால்) வினை (இனி எந்த விதமான வினையும்) சேர்கிலார் (வந்து சேர்ந்து விடாத தன்மை அடைந்தவர்கள்) தமை (தாம் பெற்ற)
சிவன் (இறைவனது) அருள் (திருவருளை) கூறில் (எடுத்துக் கூறினால்) சிவ (அதுவே சிவ) லோகம் (லோகமாகவும்) ஆமே (இருக்கின்றது).
விளக்கம்:
இறைவனது திருவருளை சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர் வானுலகத்து தேவர்களாகவும் ஆவார்கள். இறைவனது திருவருளை சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர் தெய்வங்களுக்கு சரிசமமாக விளங்குவார்கள். இறைவனது திருவருளினால் இனி எந்த விதமான வினையும் வந்து சேர்ந்து விடாத தன்மை அடைந்தவர்கள் தாம் பெற்ற இறைவனது திருவருளை எடுத்துக் கூறினால் அதுவே சிவ லோகமாகவும் இருக்கின்றது.