பாடல் #1652

பாடல் #1652: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

அவ்வுல கத்தே பிறக்கி லுடலோடு
மவ்வுல கத்தே யருந்தவம் நாடுவ
ரவ்வுல கத்தே யரனடி கூடுவ
ரவ்வுல கத்தே யருள்பெறு வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அவவுல கததெ பிறககி லுடலொடு
மவவுல கததெ யருநதவம நாடுவ
ரவவுல கததெ யரனடி கூடுவ
ரவவுல கததெ யருளபெறு வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அவ் உலகத்தே பிறக்கில் உடலோடு
அவ் உலகத்தே அரும் தவம் நாடுவர்
அவ் உலகத்தே அரன் அடி கூடுவர்
அவ் உலகத்தே அருள் பெறுவாரே.

பதப்பொருள்:

அவ் (இறைவனை அடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு எந்த) உலகத்தே (உலகத்தில்) பிறக்கில் (பிறவி எடுத்தாலும்) உடலோடு (அந்த உலகத்துக்கு ஏற்ற உடம்போடு பிறந்து)
அவ் (அவர்கள் இருக்கின்ற) உலகத்தே (உலகத்திலேயே) அரும் (செய்வதற்கு மிகவும் அரியதான) தவம் (தவங்களை) நாடுவர் (தேடி அடைந்து செய்கின்ற தவசிகள்)
அவ் (அவர்கள் இருக்கின்ற) உலகத்தே (உலகத்திலேயே) அரன் (இறைவனின்) அடி (திருவடியை) கூடுவர் (சேர்ந்து இருப்பார்கள்)
அவ் (அவர்கள் இருக்கின்ற) உலகத்தே (உலகத்திலேயே) அருள் (இறைவனது திருவருளையும்) பெறுவாரே (பெற்று விடுவார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு எந்த உலகத்தில் பிறவி எடுத்தாலும் அந்த உலகத்துக்கு ஏற்ற உடம்போடு பிறந்து, அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே செய்வதற்கு மிகவும் அரியதான தவங்களை தேடி அடைந்து செய்கின்ற தவசிகள், அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனின் திருவடியை சேர்ந்து இருப்பார்கள். அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனது திருவருளையும் பெற்று விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.