பாடல் #1627: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)
இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
யிருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இருநது வருநதி யெழிறறவஞ செயயும
பெருநதனமை யாளரைப பெதிகக வெனறெ
யிருநதிந திரனெ யெவரெ வரினுந
திருநதுந தனசிநதை சிவனவன பாலெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெரும் தன்மை ஆளரை பேதிக்க என்றே
இருந்து இந்திரனே எவரே வரினும்
திருந்தும் தன் சிந்தை சிவன் அவன் பாலே.
பதப்பொருள்:
இருந்து (தியானத்தில் வீற்றிருந்து) வருந்தி (தமது உடலை வருத்திக் கொண்டு) எழில் (அருமையான) தவம் (தவத்தை) செய்யும் (செய்கின்ற தவசிகள்)
பெரும் (பெருமை மிக்க) தன்மை (தன்மையை) ஆளரை (கொண்டவர்கள் ஆவார்கள்) பேதிக்க (அவர்களின் தவ நிலையை கலைக்க வேண்டும்) என்றே (என்று)
இருந்து (அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு வந்து இருந்து) இந்திரனே (தேவர்களின் தலைவனாகிய இந்திரனே ஆனாலும்) எவரே (அல்லது அவரை விட வலிமை பெற்ற யார்) வரினும் (வந்து முயற்சி செய்தாலும்)
திருந்தும் (எதனாலும் மாறாத பண்பட்ட மேன்மையான) தன் (அவர்களின்) சிந்தை (சிந்தையானது) சிவன் (சிவப் பரம்பொருளாகிய) அவன் (இறைவனின்) பாலே (மேல் மட்டுமே இருக்கும்).
விளக்கம்:
தியானத்தில் வீற்றிருந்து தமது உடலை வருத்திக் கொண்டு அருமையான தவத்தை செய்கின்ற தவசிகள் பெருமை மிக்க தன்மையை கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களின் தவ நிலையை கலைக்க வேண்டும் என்று அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு தேவர்களின் தலைவனாகிய இந்திரனே ஆனாலும் அல்லது அவரை விட வலிமை பெற்ற யார் வந்து முயற்சி செய்தாலும் எதனாலும் மாறாத பண்பட்ட மேன்மையான அவர்களின் சிந்தையானது சிவப் பரம்பொருளாகிய இறைவனின் மேல் மட்டுமே இருக்கும்.