பாடல் #1549: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)
வழிசென்று மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்
டுழிசெல்லி லும்பர் தலைவன்முன் னாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
வழிசெனறு மாதவம வைகினற பொது
பழிசெலலும வலவினைப பறறறுத தாஙகெ
வழிசெலலும வலவினை யாரதிறம விடடிட
டுழிசெலலி லுமபர தலைவனமுன னாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
வழி சென்று மா தவம் வைகின்ற போது
பழி செல்லும் வல் வினை பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல் வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.
பதப்பொருள்:
வழி (இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல்) சென்று (சென்று புரிகின்ற) மா (மாபெரும்) தவம் (தவமானது) வைகின்ற (அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற) போது (போது)
பழி (ஞானிகள் பழிக்கின்ற) செல்லும் (உலக வழிகளில் செல்லும் போது) வல் (வலிமையான) வினை (வினைகளினால்) பற்று (கட்டி இருக்கின்ற பற்றை) அறுத்து (அறுத்து விட்டு) ஆங்கே (தாம் இருக்கின்ற இடத்திலேயே)
வழி (இறைவனை நோக்கிய வழியில்) செல்லும் (செல்லுகின்றவர்) வல் (வலிமையான) வினையார் (வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின்) திறம் (உறுதியான பந்த பாசங்களை) விட்டிட்டு (விட்டு விட்டு)
உழி (இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி) செல்லில் (அவனை அடைகின்ற வழியில் சென்றால்) உம்பர் (தேவர்களுக்கு எல்லாம்) தலைவன் (தலைவனாகிய இறைவனின்) முன் (முன்பு) ஆமே (சென்று நிற்பார்கள்).
விளக்கம்:
இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல் சென்று புரிகின்ற மாபெரும் தவமானது அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற போது, ஞானிகள் பழிக்கின்ற உலக வழிகளில் செல்லும் போது வலிமையான வினைகளினால் கட்டி இருக்கின்ற பற்றை அறுத்து விட்டு, தாம் இருக்கின்ற இடத்திலேயே இறைவனை நோக்கிய வழியில் செல்லுகின்றவர்கள், வலிமையான வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின் உறுதியான பந்த பாசங்களை விட்டு விட்டு, இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி அவனை அடைகின்ற வழியில் சென்றால், தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவனின் முன்பு சென்று நிற்பார்கள்.