பாடல் #1542: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)
மாதவர்க் கெல்லா மாதேவர் பிரானென்பர்
நாதம தாகி யறியப் படுநந்தி
பேதஞ் செய்யாதே பிரானென்று கைதொழி
லாதியு மன்னெறி யாகிநின் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மாதவரக கெலலா மாதெவர பிரானெனபர
நாதம தாகி யறியப படுநநதி
பெதஞ செயயாதெ பிரானெனறு கைதொழி
லாதியு மனனெறி யாகிநின றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மா தவர்க்கு எல்லாம் மா தேவர் பிரான் என்பர்
நாதம் அது ஆகி அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அந் நெறி ஆகி நின்றானே.
பதப்பொருள்:
மா (மாபெரும்) தவர்க்கு (தவங்களை செய்தவர்கள்) எல்லாம் (அனைவரும்) மா (மாபெரும்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரான் (தலைவன்) என்பர் (என்று தமக்குள் உணர்ந்த இறைவனை கூறுவார்கள்)
நாதம் (அந்த இறைவனை சாதகர்கள் தமக்குள் நாத) அது (வடிவமாக) ஆகி (ஆகி) அறியப்படும் (அறியப்படுகின்ற) நந்தி (நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழி காட்டும் போது)
பேதம் (அவனை வேறு யாராகவும் பிரித்து) செய்யாதே (எண்ணிப் பார்க்காமல்) பிரான் (எமது தலைவன் இவனே) என்று (என்று எண்ணிக் கொண்டு) கை (தம்மால் இயன்ற வழியில்) தொழில் (அவனை அடைவதற்கு முயற்சி செய்தால்)
ஆதியும் (ஆதிப் பரம் பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும்) அந் (தாங்கள் முயன்ற அந்த) நெறி (வழியாகவே) ஆகி (ஆகி) நின்றானே (நிற்கின்றான்).
விளக்கம்:
மாபெரும் தவங்களை செய்தவர்கள் அனைவரும் மாபெரும் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று தமக்குள் உணர்ந்த இறைவனை கூறுவார்கள். அந்த இறைவனை சாதகர்கள் தமக்குள் நாத வடிவமாக ஆகி அறியப்படுகின்ற நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழி காட்டும் போது அவனை வேறு யாராகவும் பிரித்து எண்ணிப் பார்க்காமல் எமது தலைவன் இவனே என்று எண்ணிக் கொண்டு தம்மால் இயன்ற வழியில் அவனை அடைவதற்கு முயற்சி செய்தால் ஆதிப் பரம் பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும் தாங்கள் முயன்ற அந்த வழியாகவே ஆகி நிற்கின்றான்.