பாடல் #1539: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)
மயங்கு கின்றாரு மதைத் தெளிந்தாரு
முயங்கி யிருவினை மூழை முகப்பா
யியங்கிப் பெறுவாரே லீறதுக் காட்டிப்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மயஙகு கினறாரு மதைத தெளிநதாரு
முயஙகி யிருவினை மூழை முகபபா
யியஙகிப பெறுவாரெ லீறதுக காடடிப
பயஙகெட டவரககொர பரநெறி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மயங்கு கின்றாரும் அதை தெளிந்தாரும்
முயங்கி இரு வினை மூழை முகப்பு ஆய்
இயங்கி பெறுவாரேல் ஈறு அது காட்டி
பயம் கெட்டு அவர்க்கு ஓர் பர நெறி ஆமே.
பதப்பொருள்:
மயங்கு (மாயையிலேயே மயங்கி) கின்றாரும் (இருக்கின்றவர்களும்) அதை (இறைவனை அடையும் வழி முறைகளை கடைபிடித்து அதனால் மாயை நீங்கி) தெளிந்தாரும் (தெளிவு பெற்றவர்களும்)
முயங்கி (தம்மால் இயன்ற வரை முயற்சி செய்து) இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும் அறுப்பதற்கு) மூழை (சுழு முனை நாடியின் துளைக்கு) முகப்பு (உச்சியில்) ஆய் (காரணமாக இருக்கின்ற சகஸ்ரதளத்தில்)
இயங்கி (தமது மூச்சுக்காற்றை இயக்குவதன் மூலம் குண்டலினி சக்தியை கொண்டு சென்று சேர்த்து) பெறுவாரேல் (அமிழ்தத்தை பெற முடிந்தால்) ஈறு (முக்தியை) அது (அதுவே) காட்டி (காண்பித்து)
பயம் (இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான பயமும்) கெட்டு (அழிந்து போய்) அவர்க்கு (அவர்களுக்கு) ஓர் (ஒரே) பர (பரம் பொருளுடன் சேருவதாகிய) நெறி (முக்திக்கு வழியாக) ஆமே (அதுவே இருக்கும்).
விளக்கம்:
மாயையிலேயே மயங்கி இருக்கின்றவர்களும், இறைவனை அடையும் வழி முறைகளை கடைபிடித்து அதனால் மாயை நீங்கி தெளிவு பெற்றவர்களும், தம்மால் இயன்ற வரை முயற்சி செய்து நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் அறுப்பதற்கு காரணமாக சுழு முனை நாடியின் துளைக்கு உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது மூச்சுக்காற்றை இயக்குவதன் மூலம் குண்டலினி சக்தியை கொண்டு சென்று சேர்த்து அமிழ்தத்தை பெற முடிந்தால் முக்தியை அதுவே காண்பித்து, இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான பயமும் அழிந்து போய் அவர்களுக்கு ஒரே பரம் பொருளுடன் சேருவதாகிய முக்திக்கு வழியாக அதுவே இருக்கும்.