பாடல் #1538: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கததுங கழுதைகள பொலுங கலதிகள
சுதத சிவனெஙகுந தொயவுறறு நிறகினறான
குததந தெரியார குணஙகொணடு கொதாடடார
பிததெறி நாளும பிறநதிறப பாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன் எங்கும் தோய்வு உற்று நிற்கின்றான்
குத்தம் தெரியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே.
பதப்பொருள்:
கத்தும் (காரணமே தெரியாமல் கத்துகின்ற) கழுதைகள் (கழுதைகள்) போலும் (போலவே) கலதிகள் (தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்)
சுத்த (அதனால் தூய்மையான) சிவன் (சிவப் பரம்பொருள்) எங்கும் (எங்கும்) தோய்வு (அவர்களால் அறிய முடியாத படி மாயையால்) உற்று (மறைத்துக் கொண்டு) நிற்கின்றான் (நிற்கின்றான்)
குத்தம் (தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை) தெரியார் (அறிந்து கொள்ளாமல்) குணம் (நல்ல குணங்களை) கொண்டு (மேற் கொண்டு / கடை பிடித்து) கோது (தீய குணங்களை) ஆட்டார் (நீக்கிக் கொள்ளாதவர்கள்)
பித்து (தீய குணத்திலேயே மூழ்கி அதனால் பித்து) ஏறி (அதிகமாகி) நாளும் (தினந்தோறும் வாழ் நாளை வீணடித்து) பிறந்து (மீண்டும் மீண்டும் பிறந்து) இறப்பாரே (இறக்கின்ற பிறவி சுழலிலேயே சிக்கிக் கொண்டு இருப்பார்கள்).
விளக்கம்:
காரணமே தெரியாமல் கத்துகின்ற கழுதைகள் போலவே தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அதனால் எங்கும் இருக்கின்ற தூய்மையான சிவப் பரம்பொருள் அவர்களால் அறிய முடியாத படி தம்மை மாயையால் மறைத்துக் கொண்டு நிற்கின்றான். தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை அறிந்து கொள்ளாமல் நல்ல குணங்களை கடை பிடித்து தீய குணங்களை நீக்கிக் கொள்ளாதவர்கள் தீய குணத்திலேயே மூழ்கி அதனால் பித்து அதிகமாகி தினந்தோறும் வாழ் நாளை வீணடித்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கின்ற பிறவி சுழலிலேயே சிக்கிக் கொண்டு இருப்பார்கள்.