பாடல் #1537

பாடல் #1537: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

நூறு சமைய முளவால் நுகருங்கா
லாறு சமைய மவ்வாறுட் படுவன
கூறு சமையங்கள் கொண்ட நெறிநில்லா
நீறு பரநெறி யில்லாநெறி நின்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நூறு சமைய முளவால நுகருஙகா
லாறு சமைய மவவாறுட படுவன
கூறு சமையஙகள கொணட நெறிநிலலா
நீறு பரநெறி யிலலாநெறி நினறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நூறு சமையம் உள ஆல் நுகரும் கால்
ஆறு சமையம் அவ் ஆறு உள் படுவன
கூறு சமையங்கள் கொண்ட நெறி நில்லா
நீறு பர நெறி இல்லா நெறி நின்றே.

பதப்பொருள்:

நூறு (இறைவனை அடைவதற்காக என்று சொல்லப் படுகின்ற நூற்றுக் கணக்கான) சமையம் (வழி முறைகள்) உள (இருக்கின்றன) ஆல் (ஆதலால்) நுகரும் (அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு கடைபிடிக்கும்) கால் (போது)
ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமையம் (வழி முறைகளில்) அவ் (அந்த நூற்றுக் கணக்கான வழி முறைகளும்) ஆறு (இந்த ஆறு வழி முறைகளுக்கு) உள் (உள்ளேயே) படுவன (அடங்கி விடும்)
கூறு (இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற) சமையங்கள் (வழி முறைகள் அனைத்தும்) கொண்ட (தாம் எடுத்துக் கொண்ட) நெறி (வழி முறையிலேயே) நில்லா (நின்று விடாமல்)
நீறு (ஒவ்வொரு வழி முறையிலும் பக்குவம் பெற்ற மிகவும் மேன்மையான நிலையாகிய) பர (பரம் பொருளை சென்று அடைகின்ற முக்திக்கான) நெறி (வழி முறை ஒன்று இருக்கின்றது) இல்லா (ஆனால் அதில் நின்று இறைவனை அடையாமல்) நெறி (வெறும் உலக ஆசைகளுக்காக செய்யப் படுகின்ற வழி முறைகளிலேயே) நின்றே (நிற்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்காக என்று சொல்லப் படுகின்ற நூற்றுக் கணக்கான வழி முறைகள் இருக்கின்றன ஆதலால் அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு கடைபிடிக்கும் போது இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளுக்கு உள்ளேயே அந்த நூற்றுக் கணக்கான வழி முறைகளும் அடங்கி விடும். இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் தாம் எடுத்துக் கொண்ட வழி முறையிலேயே நின்று விடாமல் ஒவ்வொரு வழி முறையிலும் பக்குவம் பெற்ற மிகவும் மேன்மையான நிலையாகிய பரம் பொருளை சென்று அடைகின்ற முக்திக்கான வழி முறை ஒன்று இருக்கின்றது. ஆனால் அதில் நின்று இறைவனை அடையாமல் வெறும் உலக ஆசைகளுக்காக செய்யப் படுகின்ற வழி முறைகளிலேயே நிற்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.