பாடல் #1531: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)
உள்ளத்து ளேதானுகந் தெங்கு நின்றவன்
வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பை புகுந்து புறப்படுங்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உளளதது ளெதானுகந தெஙகு நினறவன
வளளற றலைவன மலருறை மாதவன
பொளளற குரமபை புகுநது புறபபடுங
களளத தலைவன கருததறி யாரகளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உள்ளத்து உள்ளே தான் உகந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ள தலைவன் கருத்து அறியார்களே.
பதப்பொருள்:
உள்ளத்து (உயிர்களின் உள்ளத்திற்கு) உள்ளே (உள்ளே) தான் (தானாகவே வீற்றிருந்து) உகந்து (விரும்பி இருக்கின்றவனும்) எங்கும் (அண்ட சராசரங்கள் எங்கும்) நின்றவன் (நிறைந்து நிற்கின்றவனும்)
வள்ளல் (உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும்) தலைவன் (அனைத்திற்கும் தலைவனும்) மலர் (உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல்) உறை (வீற்றிருக்கின்ற) மாதவன் (மாபெரும் தவத்தை உடையவனும்)
பொள்ளல் (துவாரங்களை கொண்ட) குரம்பை (உடலுக்குள்) புகுந்து (கருவிலேயே புகுந்து இருப்பவனும்) புறப்படும் (அந்த உடலின் ஆயுள் முடியும் போது வெளியேறி செல்பவனும்)
கள்ள (இவை அனைத்தையும் மறைந்து இருந்தே செய்கின்ற) தலைவன் (தலைவனும் ஆகிய இறைவனை) கருத்து (அறிந்து கொள்ளும் முறையை ஆசைகளுக்காக புற வழிபாடு செய்கின்றவர்கள்) அறியார்களே (அறியாமல் இருக்கின்றார்கள்).
விளக்கம்:
உயிர்களின் உள்ளத்திற்கு உள்ளே தானாகவே விரும்பி வீற்றிருக்கின்றவனும், அண்ட சராசரங்கள் எங்கும் நிறைந்து நிற்கின்றவனும், உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும், அனைத்திற்கும் தலைவனும், உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற மாபெரும் தவத்தை உடையவனும், துவாரங்களை கொண்ட உடலுக்குள் கருவிலேயே புகுந்து இருப்பவனும், அந்த உடலின் ஆயுள் முடியும் போது வெளியேறி செல்பவனும், இவை அனைத்தையும் மறைந்து இருந்தே செய்கின்ற தலைவனும் ஆகிய இறைவனை அறிந்து கொள்ளும் முறையை ஆசைகளுக்காக புற வழிபாடு செய்கின்றவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
