பாடல் #1476: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)
ஞான சமையமே நாடுந்தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடும் பரோதையம்
ஞான நிர்வாணமே நன்னெறி வன்னருள்
ஞானா பிடேகமே நற்குரு பாதமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஞான சமையமெ நாடுநதனைக காணடல
ஞான விசெடமெ நாடும பரொதையம
ஞான நிரவாணமெ நனனெறி வனனருள
ஞானா பிடெகமெ நறகுரு பாதமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஞான சமையமே நாடும் தனை காண்டல்
ஞான விசேடமே நாடும் பரா உதயம்
ஞான நிர்வாணமே நன் நெறிவன் அருள்
ஞான அபிடேகமே நற் குரு பாதமே.
பதப்பொருள்:
ஞான (ஞானமானது) சமையமே (சமயம் எனப்படுகின்ற சரியையில் முழுமையாக இருப்பது) நாடும் (வெளியில் தேடி செல்லுகின்ற இறைவனை) தனை (தனக்குள்) காண்டல் (கண்டு உணர்வது ஆகும்)
ஞான (ஞானமானது) விசேடமே (விசேடம் எனப்படுகின்ற கிரியையில் முழுமையாக இருப்பது) நாடும் (தாம் தேடுகின்ற) பரா (பரம் பொருளாகிய இறைவன்) உதயம் (தமக்குள்ளேயே ஞானமாக உருவாகுவது ஆகும்)
ஞான (ஞானமானது) நிர்வாணமே (நிர்வாணம் எனப்படுகின்ற யோகத்தில் முழுமையாக இருப்பது) நன் (நன்மையை கொடுக்கின்ற) நெறிவன் (நெறிகளாக இருக்கின்ற இறைவனின்) அருள் (அருளை பரிபூரணமாக பெறுவது ஆகும்)
ஞான (ஞானமானது) அபிடேகமே (அபிடேகம் எனப்படுகின்ற ஞானத்தில் முழுமையாக இருப்பது) நற் (நன்மையே வடிவாக) குரு (குருநாதனாக இருக்கின்ற இறைவனின்) பாதமே (திருவடிகளே ஆகும்).
விளக்கம்:
ஞானமானது சமயம் எனப்படுகின்ற சரியையில் முழுமையாக இருப்பது வெளியில் தேடி செல்லுகின்ற இறைவனை தனக்குள் கண்டு உணர்வது ஆகும். ஞானமானது விசேடம் எனப்படுகின்ற கிரியையில் முழுமையாக இருப்பது தாம் தேடுகின்ற பரம் பொருளாகிய இறைவன் தமக்குள்ளேயே ஞானமாக உருவாகுவது ஆகும். ஞானமானது நிர்வாணம் எனப்படுகின்ற யோகத்தில் முழுமையாக இருப்பது நன்மையை கொடுக்கின்ற நெறிகளாக இருக்கின்ற இறைவனின் அருளை பரிபூரணமாக பெறுவது ஆகும். ஞானமானது அபிடேகம் எனப்படுகின்ற ஞானத்தில் முழுமையாக இருப்பது நன்மையே வடிவாக குருநாதனாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளே ஆகும்.