பாடல் #1451: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)
பத்துத் திசைக்கும் பரமொரு தெய்வமுண்
டேத்துக் கிலரில்லை யெனபத மலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பததுத திசைககும பரமொரு தெயவமுண
டெததுக கிலரிலலை யெனபத மலரக
கொததுத திருவடி நீழல சரணெனத
தததும வினைககடல சாராது காணுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பத்து திசைக்கும் பரம் ஒரு தெய்வம் உண்டு
ஏத்துக்கு இலர் இல்லை என பத மலர்க்கு
ஒத்து திரு அடி நீழல் சரண் என
தத்தும் வினை கடல் சாராது காணுமே.
பதப்பொருள்:
பத்து (பத்து விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) பரம் (பரம்பொருளாக இருக்கின்ற) ஒரு (ஒரு) தெய்வம் (தெய்வம்) உண்டு (இருக்கின்றது)
ஏத்துக்கு (அந்த தெய்வத்தை எந்த விதத்திலும் போற்றி வணங்குவதற்கு) இலர் (இயலாதவர்கள் என்று) இல்லை (எவரும் இல்லை) என (எனவே) பத (தூய்மையான தாமரை) மலர்க்கு (மலருக்கு)
ஒத்து (இணையாக இருக்கின்ற) திரு (அவனது மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய) அடி (திருவடிகளின்) நீழல் (அமைதியையும் குளிர்ச்சியையும் தருகின்ற நிழலே) சரண் (சரணாகதி) என (என்று சரணடைந்தால்)
தத்தும் (மாயையில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்ற) வினை (வினைகளால் சூழ்ந்த) கடல் (கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையை) சாராது (சார்ந்து இல்லாமல்) காணுமே (அந்த இறை சக்தியை தமக்குள் தரிசிக்கலாம்).
விளக்கம்:
பத்து விதமான திசைகளுக்கும் பரம்பொருளாக இருக்கின்ற ஒரு தெய்வம் இருக்கின்றது. அந்த தெய்வத்தை எந்த விதத்திலும் போற்றி வணங்குவதற்கு இயலாதவர்கள் என்று எவரும் இல்லை (அனைவராலும் இயலும்). ஆகவே தூய்மையான தாமரை மலர் போன்று இருக்கின்ற அவனது மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய திருவடிகளின் அமைதியையும் குளிர்ச்சியையும் தருகின்ற நிழலே சரணாகதி என்று சரணடைந்தால் மாயையில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்ற வினைகளால் சூழ்ந்த கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையை சார்ந்து இல்லாமல் அந்த இறை சக்தியை தமக்குள் தரிசிக்கலாம்.
கருத்து: இறைவனை அடைவதற்கு அருளப்பட்ட சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான வழிமுறைகளில் சரியை செய்வதற்கு ஊனமில்லாத ஆரோக்கியமான உடல் வேண்டும். யோகம் செய்வதற்கு உறுதியான உடலும் மனமும் வேண்டும். ஞானம் மூலம் இறைவனை அடைவதற்கு குருவருளும் திருவருளும் இருக்க வேண்டும். ஆனால் கிரியையை எவரும் எந்த விதத்திலும் செய்ய முடியும்.