பாடல் #1453

பாடல் #1453: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

கோனக்கன் றாயே குரைகழ லேத்துமின்
ஞானக்கன் றாயே நடுவே யுமிழ்தரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானைக்கன் றீசனருள் பள்ள மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொனககன றாயெ குரைகழ லெததுமின
ஞானககன றாயெ நடுவெ யுமிழதரும
வானககன றாகிய வானவர கைதொழு
மானைகன றீசனருள பளள மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோன கன்று ஆயே குரை கழல் ஏத்துமின்
ஞான கன்று ஆயே நடுவே உமிழ் தரும்
வான கன்று ஆகிய வானவர் கை தொழும்
ஆனை கன்று ஈசன் அருள் பள்ளம் ஆமே.

பதப்பொருள்:

கோன (நேர் வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதி வழியே செல்லுகின்ற) கன்று (பிள்ளையாக) ஆயே (இருந்தாலும்) குரை (ஒலி பொருந்திய சிலம்புகளை அணிந்திருக்கும்) கழல் (இறைவனின் திருவடிகளை) ஏத்துமின் (போற்றி வணங்கிக் கொண்டே இருங்கள்)
ஞான (அப்படி இருந்தால் அவனது அருளால் ஞானம் பெற்ற) கன்று (பிள்ளையாக) ஆயே (மாறி) நடுவே (தமக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் இருந்து) உமிழ் (அமிழ்தம் சுரக்கும் படி) தரும் (கொடுக்கும் அதை அருந்திக் கொண்டு இருந்தால்)
வான (வானத்தில்) கன்று (இருக்கும் பிள்ளைகள்) ஆகிய (ஆகிய) வானவர் (தேவர்களும்) கை (சென்று கைகூப்பி) தொழும் (தொழுகின்ற)
ஆனை (ஆன்மாவைக் கொண்டு இருக்கின்ற) கன்று (பிள்ளைகளாகிய உயிர்களுக்கு எல்லாம்) ஈசன் (அதிபதியாகிய இறைவனின்) அருள் (திருவருள் மழையை) பள்ளம் (வாங்கிக் கொள்ளுகின்ற பாத்திரமாக) ஆமே (நீங்கள் ஆகிவிடுவீர்கள்).

விளக்கம்:

நேர் வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதி வழியே செல்லுகின்ற பிள்ளைகளாக இருந்தாலும் ஒலி பொருந்திய சிலம்புகளை அணிந்திருக்கும் இறைவனின் திருவடிகளை போற்றி வணங்கிக் கொண்டே இருங்கள். அப்படி வணங்கிக் கொண்டே இருந்தால் அவனது அருளால் ஞானம் பெற்ற பிள்ளைகளாக ஆகி தமக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் இருந்து அமிழ்தம் சுரக்கும் படி கொடுக்கும். அந்த அமிழ்தத்தை அருந்திக் கொண்டு இருந்தால் வானத்தில் இருக்கும் பிள்ளைகளாகிய தேவர்களும் சென்று கைகூப்பி தொழுகின்ற ஆன்மாவைக் கொண்டு இருக்கின்ற பிள்ளைகளாகிய உயிர்களுக்கு எல்லாம் அதிபதியாகிய இறைவனின் திருவருளை நிரம்புகின்ற பாத்திரமாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.