பாடல் #28

பாடல் #28: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுடனும் எங்கும் எதிலும் கலந்து இருப்பவனும் உலக வழக்கங்களுக்கு மாறுபட்டு நிற்கின்றவனும் அனைத்திற்கும் ஆரம்பமாகவும் அவற்றின் முடிவாகவும் இருப்பவனும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இந்திரனுக்கும் தலைவனாக இருப்பவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தி தன்னை உண்மையான பக்தியோடு வணங்கி நிற்பவர்கள் செல்லும் வழிகளிலெல்லாம் அவர்களைப் பாதுகாத்துக்கொண்டு துணையாக வருகின்றான்.

பாடல் #29

பாடல் #29: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

காணநில் லாய்அடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

இறைவனை எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதிலிருந்து மாறாத குணமுடைய அடியவர்களின் மனதில் ஆணி அடித்தது போல அமர்ந்து இருக்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியே உங்களைக் காண வேண்டும் என்ற ஆசையால் துடிக்கும் எமது முன் நீங்கள் எழுந்தருள வேண்டும். நீங்கள் எம் முன் எழுந்தருளிவிட்டால் உங்களை உடனே எம்மோடு ஆரத்தழுவிக்கொள்வதில் யாம் வெட்கப் படமாட்டோம்.

பாடல் #30

பாடல் #30: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கும் அதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானம் கருதியே.

விளக்கம்:

வானத்திலிருந்து பெய்யும் மழை வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் பொதுவாக பெய்கிறது. அதுபோல இறைவனின் அருள் வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் இறையருள் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு இறைவனை நாடிச் செல்ல சிலர் தயங்குவார்கள் எவ்வாறு கன்று தன் பசியை தாய்ப்பசுவை நோக்கிக் கதறித் தெரிவிக்கின்றதோ அதுபோலவே குருவான எம்பெருமான் சதாசிவமூர்த்தியை நான் வேண்டி அழைப்பது எமது ஞானப் பசியை அவர் தீர்க்கவேண்டும் என்கிற வேண்டுதலால்தான்.

பாடல் #31

பாடல் #31: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

விளக்கம்:

மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு மனிதவடிவிலும் விண்ணகத்தில் உள்ள தேவர்களுக்கு தேவவடிவிலும் முத்திஅடைபவர்களுக்கு வீடுபேறுதருபவனாகவும் சித்திகளை விரும்பியவர்களுக்கு சித்தனாகவும் இனிய பாடல்களின் இன்னிசையாகவும் விளங்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியை ஞானக் கண்ணால் கண்டுணர்ந்து அவர் மேல் அளவில்லாத அன்புகொண்டு நின்றிருந்தோம்.

பாடல் #32

பாடல் #32: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீர்உல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வார்இல்லை
பாவு பிரான்அருள் பாடலும் ஆமே.

விளக்கம்:

தேவர்களுக்கெல்லாம் தலைவனாக தேவர்களோடு கலந்து இருப்பவனும் நமக்கும் தலைவனாக நம்மோடு கலந்து இருப்பவனும் பத்து திசைகளிலும் (எட்டுத்திசைகள் மற்றும் ஆகாயம் பூமி ஆகியவை) பரவி இருப்பவனும் பெரும் கடலால் சூழப்பட்டுள்ள ஏழு உலகங்களையும் தாண்டி இருப்பவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் தன்மை என்னவென்பதை யாரும் அறிந்துகொள்ளவில்லை. எங்கும் எதிலும் பரந்து நிறைந்து இருக்கும் அந்தப் பரம்பொருளின் அருளைப் பற்றியே யாம் பாடுகின்றோம்.

பாடல் #33

பாடல் #33: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பதிபல ஆயது பண்டிவ் உலகம்
விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
மதிஇலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

விளக்கம்:

பண்டைய காலத்தில் இருந்து பலவிதமான தெய்வங்களை இந்த உலகத்தில் உள்ளவர்கள் வணங்கினார்கள். அவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வரைமுறைகள் விதிமுறைகளை வகுத்தனர். பல விதிமுறைகளை வகுத்தும் பலவிதமான துதிகளையும் தோத்திரங்களையும் இசையோடு பாட வல்லவர்கள் கூட உண்மை என்னவென்று உணராமல் உண்மையான ஞானத்தை அடைய முடியாமல் நெஞ்சத்தில் அமைதி இல்லாமல் துன்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

பாடல் #34

பாடல் #34: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

விளக்கம்:

வாசனையில்லாத வெறும் கூந்தலில் எப்படி வாசனைப் பொருட்களை வைத்து அரைத்த சாந்தைப் பூசியவுடன் இனிமையான வாசனை வருகின்றதோ அதுபோலவே உண்மையில்லாத வெறும் உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு உண்மையான இறைவனை அடைந்து சிவமனம் கமழும் முக்தியைப் பெறுவதற்கு இறைவன் அமர்களுக்கு அருளிய மெய்ஞான வழி என்னவென்றால் ஆயிரம் சூரியனைப் போன்று பிரகாசிக்கும் பேரறிவு ஒளியைக் கொடுக்கும் ஓம் நமசிவாய எனும் திருநாமம். அதன் அருமையை உணர்ந்ததால்தான் செயலற்று ஓய்ந்து இருக்கும்போதும் செயல்களைச் செய்துகொண்டு இருக்கும்போதும் அந்தத் திருநாமத்தை இடைவிடாது போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கின்றேன்.

பாடல் #35

பாடல் #35: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே.

விளக்கம்:

முக்தியை கொடுப்பவரும் அதற்க்கான வழியாகவும் இருப்பவருமான இறைவனை போற்றக் கூடிய வழிகள் அனைத்திலும் போற்றியும் புகழ்ந்தும் இருந்தோமேயானால் எட்டுத்திசைகளோடு மேல்திசை (வானம்) கீழ்திசை (பூமி) இரண்டு திசைகளையும் சேர்த்து பத்து திசைகளையும் வழி நடத்திச் செல்லும் இறைவன் நம்மையும் நல்வழிநடத்திச் சென்று முக்தியையும் அருளுவான்.

பாடல் #36

பாடல் #36: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெறலாமே.

விளக்கம் :

உயிரின் தந்தையாகவும் குருவாகவும் உள்ள இறைவனை தெவிட்டாத அமுதம் போன்றவனை வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் தனக்கு ஒப்பில்லாத வள்ளலை ஊழியைச் செய்கின்ற முதல்வனை வரைமுறையின்றி எத்தன்மையிலும் எவ்வழியில் வழிபட்டாலும் அவ்வழியிலே ஈசனின் அருளைப் பெறலாம்.

பாடல் #37

பாடல் #37: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

விளக்கம் :

இறைவன் திருவருளால் நாள்தோறும் குருவாய் இருக்கும் சிவனை வழிபட்டு நிற்கின்றேன். அந்த சிவன் சிவப்பாய் ஏரியும் நெருப்புத்தழல் போன்ற வெளிச்சமுடன் எம்முடன் நிற்கின்றான். அவன் வானத்தில் இருளை நீக்கிப் பிரகாசமாய் ஒளிரும் நிலவைப் போல குருவை வணங்கி நிற்பவர்களின் உடலுக்குள் மகிழ்ந்து வந்து அங்கே உயிருக்கு உயிராக நின்று அஞ்ஞான இருளை அகற்றும் பேரொளியாய் இருக்கின்றான்.