பாடல் #1845

பாடல் #1845: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

சமைய மலசுத்தி தன்செய லற்றிடு
மமையும் விசேடமு மானமந் திரசுத்தி
சமையநிறு வாணங் கலாசுத்தி யாகு
மவைமின்னு ஞான மானாரபி டேகமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமைய மலசுததி தனசெய லறறிடு
மமையும விசெடமு மானமந திரசுததி
சமையநிறு வாணங கலாசுததி யாகு
மவைமினனு ஞான மானாரபி டெகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமைய மல சுத்தி தன் செயல் அற்று இடும்
அமையும் விசேடமும் ஆன மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அவை மின்னும் ஞானம் ஆனார் அபிடேகமே.

பதப்பொருள்:

சமைய (சமயம் சொல்கின்ற முறைப்படி) மல (அழுக்குகள்) சுத்தி (தம்மை விட்டு நீங்கும் படி) தன் (தமது முனைப்பால் எந்தவிதமான) செயல் (செயலும்) அற்று (செய்வது இல்லாமல்) இடும் (தியானத்தில் வீற்றிருக்கும் உயிர்களுக்கு) மல – அழுக்கு (உதாரணம் தீட்சிதர்கள்)

அமையும் (இறையருளால் தானாகவே வந்து பொருந்துகின்ற) விசேடமும் (மேன்மையுடைது) ஆன (ஆக கிடைப்பது) மந்திர (எண்ணங்களில் எந்தவிதமான அழுக்கும் இல்லாத) சுத்தி (சுத்தமான நிலை ஆகும்) விசேடம் – மேன்மை, சிறப்பு

சமைய (சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட) நிருவாணம் (முறைகள் அனைத்தும் நீங்கிச் சென்று) கலா (அறிவும்) சுத்தி (சுத்தமாக) ஆகும் (ஆகிவிடும்)

அவை (அப்படிப்பட்ட சுத்தமான நிலையில்) மின்னும் (மிகுந்து நிற்கும்) ஞானம் (உண்மை ஞானம்) ஆனார் (ஆகிவிட்ட அடியவர்களே) அபிடேகமே (இறைவனின் திருமுடியாக விளங்குகின்றார்கள்).

விளக்கம்:

ஆசையாகிய பற்றுக்களால் கட்டி உருவான பிறவியில் தம்மோடு சேர்ந்து இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான அழுக்குகளும் தம்மை விட்டு நீங்க வேண்டும் என்று தாம் முயன்று எதுவும் செய்யாமல் தியானத்தில் செயல் அற்று இருக்கின்ற அடியவர்களுக்கு இறையருளால் தானாகவே கிடைக்கின்ற மிகவும் மேன்மையான நிலையானது எண்ணங்களிலும், உள்ளிலும், வெளியிலும் எந்தவிதமான அழுக்குகளும் இல்லாமல் சுத்தமாக இருக்கின்ற நிலையாகும். அப்படிப்பட்ட சுத்தமான நிலையில் உண்மை ஞானமாகியது அவர்களிடம் மிகுந்து இருக்கும். அந்த உண்மை ஞானத்தால் இறை நிலையை அடைந்த அடியவர்களே இறைவனின் திருமுடியாக விளங்குகின்றார்கள்.

பாடல் #1844

பாடல் #1844: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

பெருந்தன்மை நந்தி பிணக்கிரு ணேமி
யிருந்தன்மை யாலுமென் னெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெருநதனமை நநதி பிணககிரு ணெமி
யிருநதனமை யாலுமென னெஞசிடங கொளள
வருநதனமை யாளனை வானவர தெவர
தருநதனமை யாளனைத தாஙகிநின றெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பெரும் தன்மை நந்தி பிணக்கு இருள் நேமி
இரும் தன்மை ஆலும் என் நெஞ்சு இடம் கொள்ள
வரும் தன்மை ஆளனை வானவர் தேவர்
தரும் தன்மை ஆளனை தாங்கி நின்றேனே.

பதப்பொருள்:

பெரும் (மிகவும் பெருமைக்கு உரிய) தன்மை (இயல்பைக் கொண்ட) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பிணக்கு (உயிர்கள் தமது வினைகளை அனுபவிக்கும் படி பெருங்கருணை கொண்டு பாசத்தால் கட்டி) இருள் (மாயையாகிய இருள்) நேமி (சூழ்ந்து இருக்கும் படி பிறப்பித்தான்)

இரும் (அவன் எமக்குள் மறைந்து வீற்றிருக்கின்ற) தன்மை (மாபெரும் கருணையாகிய இயல்பை) ஆலும் (அவனருளால் யாம் அறிந்து கொண்டதால்) என் (எமது) நெஞ்சு (நெஞ்சத்தை) இடம் (அவன் விரும்பித் தங்குகின்ற இடமாக) கொள்ள (ஏற்றுக் கொள்ளும் படி செய்து)

வரும் (தானாகவே அடியவர் உள்ளத்திற்குள் விரும்பி வருகின்ற) தன்மை (இயல்பை கொண்டு) ஆளனை (அடியவர்களை அன்பால் ஆளுகின்றவனை) வானவர் (விண்ணுலகத்தில் இருக்கின்ற) தேவர் (தேவர்களுக்கும்)

தரும் (தமது பேரருளை தந்து அருளுகின்ற) தன்மை (இயல்பைக் கொண்டு) ஆளனை (அவர்களையும் ஆளுகின்றவனை) தாங்கி (எமது உள்ளத்திற்குள் ஆதாரமாக தாங்கி) நின்றேனே (நிற்கின்றேன் யாம்).

விளக்கம்:

அனைத்து உயிர்களும் போற்றுகின்ற மாபெரும் பெருமைக்கு உரியதாகிய இயல்பும், அடியவர்களின் உள்ளத்திற்குள் தாமே விரும்பி வருகின்ற இயல்பும், அவர்களைத் தமது பேரன்பினால் ஆட்கொண்டு அருளுகின்ற இயல்பும், விண்ணுலகத்தில் இருக்கின்ற தேவர்களுக்கும் தமது பேரருளைத் தந்து ஆட்கொள்ளுகின்ற இயல்பும் கொண்டு குருநாதனாக விளங்குகின்ற இறைவன், எமது வினைகளை அனுபவிக்கும் பொருட்டு எம்மை பாசத்தால் கட்டி, மாயையாகிய இருள் சூழ்ந்து இருக்கும் படி தமது பெருங்கருணையால் பிறவி எடுக்க செய்தான் என்றாலும் அவனது பேரருளாலேயே எமது உடலுக்குள் அவன் மறைந்து இருக்கின்ற இயல்பைக் காட்டி அருளினான். அதை அறிந்து கொண்டதால் யாமும் எமது நெஞ்சத்தை அவன் விரும்பி வீற்றிருக்கும் இடமாகச் செய்து அங்கே அவனை ஆதாரமாக தாங்கி நிற்கின்றேன்.

பாடல் #1843

பாடல் #1843: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

சாணகத் துள்ளே யழுந்திய மாணிக்கங்
காணு மளவுங் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாணகத துளளெ யழுநதிய மாணிககங
காணு மளவுங கருததறி வாரிலலை
பெணிப பெருககிப பெருககி நினைவொரககு
மாணிகக மாலை மனமபுகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாண் அகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே.

பதப்பொருள்:

சாண் (ஒரு சாண் [ஒன்பது அங்குலம்] அளவிற்கு) அகத்து (உடலுக்கு) உள்ளே (உள்ளே) அழுந்திய (புதைந்து மறைவாக இருக்கின்ற) மாணிக்கம் (சிவந்த மாணிக்கமாகிய ஆன்மாவை)

காணும் (அதன் உண்மை நிலையை பார்க்கும்) அளவும் (அளவிற்கும்) கருத்து (அதை உணர்ந்து அறிவதற்கும்) அறிவார் (ஏற்ற உண்மை அறிவு பெற்றவர்கள்) இல்லை (எவரும் இல்லை)

பேணி (அப்படி உண்மை நிலையை உணர்ந்து பார்க்கும் அறிவு பெற்றவர்கள் அதை இறைவனின் அம்சமாக உணர்ந்து போற்றி) பெருக்கி (தமது புறமாகிய உடலையும் உடல் சார்ந்த உணர்வுகளையும் குறைத்து ஆன்மாவின் நிலையை பெரிதாக வெளிவரும் படி) பெருக்கி (அதிகமாக்கி) நினைவோர்க்கு (அதிலேயே தியானித்து இருக்க முடிந்தால்)

மாணிக்க (அவர்களை தமது திருமார்பில் அணிந்து கொள்ளும் மாணிக்க) மாலை (மாலையாக ஏற்றுக்கொண்டு இறைவன்) மனம் (அவர்களின் மனதிற்குள்) புகுந்தானே (புகுந்து வீற்றிருப்பான்).

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள்ளே ஒரு சாண் (ஒன்பது அங்குலம்) அளவிற்கு ஆழமாக புதைந்து மறைந்து இருக்கின்ற சிவந்த மாணிக்கமாகிய ஆன்மாவின் உண்மையான நிலையை பார்க்கவும் அதை உணர்ந்து அறிவதற்கும் ஏற்ற உண்மையான அறிவு பெற்றவர்கள் இல்லை. அப்படி உண்மை அறிவைப் பெற்று தமக்குள் புதைந்து மறைந்து இருக்கின்ற ஆன்மாவானது இறைவனின் அம்சமே என்பதை உணர்ந்து, அதைப் போற்றி வணங்கி தமது புற உடலையும் வெளிப்புற உணர்வுகளையும் குறையச் செய்து, தமக்குள்ளே இருக்கும் ஆன்மாவின் அம்சத்தை பெரியதாக்கி வெளிப்படச் செய்து, அதிலேயே தியானித்து இருக்க முடிந்தால், அவர்களை தமது திருமார்பில் அணிந்து கொள்ளும் மாணிக்க மாலையாக ஏற்றுக்கொண்டு இறைவன் அவர்களின் மனதிற்குள் புகுந்து வீற்றிருப்பான்.

பாடல் #1843

திருமந்திரம் பாடல் #1843: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1843 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.

பாடல் #1842

திருமந்திரம் பாடல் #1842: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1842 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.

பாடல் #1841

திருமந்திரம் பாடல் #1841: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1841 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.

பாடல் #1840

திருமந்திரம் பாடல் #1840: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1840 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.

பாடல் #1839

திருமந்திரம் பாடல் #1839: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1839 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.

பாடல் #1838

திருமந்திரம் பாடல் #1838: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1838 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.

பாடல் #1837

திருமந்திரம் பாடல் #1837: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1837 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.