பாடல் #772

பாடல் #772 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே லுறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந்
தாமே உலகில் தலைவனு மாமே.

விளக்கம் :

உடம்பின் வெளியே சென்று அழிகின்ற மூச்சுக்காற்றை அகயோகத்தின் மூலம் கவனித்து நோக்கினால் உண்ணாக்கில் அமிர்தம் சுரந்து நன்மை செய்யும். சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்த்தாமரைக்கு மேல் இருக்கும் ஞானம் கைகூடும். அந்த ஞானம் கைகூடினால் உலகின் தலைவனான சிவனாய் இருப்பதை உணரலாம்.

பாடல் #771

பாடல் #771 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை யுணர்ந்த வுணர்வது வாமே.

விளக்கம் :

உள்ளத்தில் உண்டாகும் எண்ணத்தின் ஓசையில் இறைவனை உணர்ந்து எண்ணம் இல்லாத நிலையை கடந்தவர் ஈசனை நினைத்து அவருடனே கலந்திருப்பார் அவ்வாறு கலந்திருப்பவர் நெஞ்சினுள் ஈசன் உணர்வு வடிவாய் நிற்பன்.

பாடல் #770

பாடல் #770 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தம மிக்கிடில் ஓராறு திங்களா
மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே

விளக்கம் :

ஒருவன் தனது வாழ்நாள் எல்லையை அளந்து அறிந்து கொள்ள எண்ணுபவன் தனது கையை தலையின்மேல் வைத்ததும் இயல்பான எடையாய்த் தோன்றினால் அவனது வாழ்நாளுக்கு நன்மை மிகுந்த எடையுள்ளதாய் தோன்றினால் அவனது வாழ்நாள் ஆறு மாதங்கள் மட்டுமே மேலும் இரண்டு மடங்கு அதிக எடை உள்ளதாய் தோன்றினால் அவனது வாழ்நாள் ஒரு மாதம் மட்டுமே.

பாடல் #769

பாடல் #769: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.

விளக்கம்:

பாடல் #768 ல் உள்ளபடி தமக்குள் இறைவனை உணர்ந்து கண்டுகொண்ட யோகியர்கள் அந்த இறைவனே படைக்கின்ற பிரம்மனாகவும், காக்கின்ற திருமாலாகவும், கருநீலக் கறையுடைய தொண்டையைக் கொண்டு மாயையை அழிக்கின்ற உருத்திரனாகவும், மாயையால் மறைக்கின்ற மகேசுவரனாகவும், அருளுகின்ற சதாசிவனாகவும் உயிர்களின் உடலோடு கலந்து நிற்கின்ற சக்திமயங்களாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.

கருத்து: யோகியர்கள் தமக்குள் உணர்ந்த இறைவனே அனைத்து சக்தியாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.

பாடல் #768

பாடல் #768: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி யிருப்பிடங் காணலு மாகுமே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள்ளேயே தாமரை மலர்கள் போல மலர்ந்து இருக்கின்ற ஏழு சக்கரங்களிலும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியிலும் இருக்கின்ற சக்திமயங்களே இறைவன் என்பதை அறிந்துகொண்டு அந்த இடங்களோடு தம் உயிர்சக்தியை ஒன்றாகச் சேர்த்து வைத்து இருக்கும் வழிமுறையை உயிர்கள் அறிந்து கொள்வதில்லை. அப்படி இருக்கும் வழிமுறையை பாடல் #765 ல் உள்ளபடி குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் இருக்கும் இறைசக்தியோடு ஒன்றாகக் கூடியிருந்து உணர்ந்துவிட்டால் கருப்பங்கட்டி போல இனிக்கின்ற அமிர்தமான இறைவனை கண்டுகொள்ளலாம்.

கருத்து: பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் இருக்குமிடத்தை அடையும் வழிமுறையை உயிர்கள் குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் உணர்ந்துவிட்டால் இறைவனை கண்டுவிடலாம்.

பாடல் #767

பாடல் #767: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அவனிவ னாகும் பரிசறி வார்இல்
அவனிவ னாகும் பரிசது கேள்நீ
அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றி
அவனிவன் வட்டம தாகிநின் றானே.

விளக்கம்:

தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனைப் பற்றிக் கேட்டுக்கொள்ளுங்கள். பாடல் #765 இல் உள்ளபடி ஓங்கார மந்திரத்தில் அகாரம் எனும் ஒலியாக இருப்பவன் சிவம். உகாரம் எனும் ஒளியாக இருப்பவள் சக்தி. மகாரம் எனும் குண்டலினியாக இருப்பது உயிர்கள். உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் ஒளியாகவும் எட்டாவது இடமான துவாதசாந்த வெளியில் ஒலியாகவும் இருக்கின்ற இறைவனே பிரணவ மந்திரத்திலுள்ள மூன்று எழுத்துக்களின் தத்துவம் என்பதை உணர்ந்து அந்த இடங்களோடு தமது உயிர்சக்தியைக் கலந்து நிற்கின்றவனே இறைவனாக ஆகிவிடுகின்றான்.

கருத்து: பிரணவ மந்திரத்தின் தத்துவம் ஒலியாகிய சிவமும், ஒளியாகிய சக்தியும், உயிராகிய ஆன்மாக்களும் ஒன்றாகக் கலந்து ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இருப்பதே ஆகும். இதை உணர்ந்து அறிந்து கொண்டவர்கள் இறைவனாக ஆகிவிடுகிறார்கள்.

பாடல் #766

பாடல் #766: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற இடத்தை யாரும் அறிவதில்லை. பாடல் #765 இல் உள்ளபடி இறைவனை அறிந்தவர் மூலம் கேட்டு தமக்குள் ஆராய்ந்து உறுதியுடன் தேடினால் இறைவன் தமக்குள்ளேயே வீற்றிருப்பதை அறிந்து கொள்ளலாம். தமக்குள் இறைவன் வீற்றிருப்பதை அறிந்து கொண்டவர்களுக்கு இறைவன் பேரறிவாய் நின்று அவர்களுக்குள்ளேயே அழியாமல் அமர்ந்திருப்பான். பேரறிவாய் அமர்ந்திருக்கும் இறைவனையே எப்போதும் தரிசித்துக் கொண்டு இருப்பவர்கள் தாமும் அந்த இறைவனாகவே ஆகிவிடுவார்கள்.

கருத்து: தமக்குள்ளேயே வீற்றிருக்கின்ற இறைவனைக் கண்டு உணர்ந்தவர்கள் இறைவனாகவும் ஆகிவிடுவார்கள்.

பாடல் #765

பாடல் #765: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திருக்கும் அண்ணலு மாமே.

விளக்கம்:

பாடல் #764 ல் உள்ளபடி தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு கூறும் பொருளானது ஓங்கார மந்திரத்தின் அகார உகார விளக்கமாகும். அகார உகார மகார எழுத்துக்கள் (அ, உ, ம்) சேர்ந்ததே ஓம் எனும் மந்திரம். அதில் அகாரம் சிவத்தையும் உகாரம் சக்தியையும் மகாரம் உயிரையும் குறிக்கும். குருவானவர் கூறிய ஓம் எனும் மந்திரத்தை தமது சிந்தனையுள் எப்போது நினைத்துக் கொண்டே இருக்கும் சாதகர்களுக்கு ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் உயிர்கள் தமக்குள் ஒளிந்திருக்கும் குண்டலினி சக்தியே என்பதை உணர்ந்து அதை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சுழுமுனை நாடி வழியே தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைசக்தியோடு சேர்த்துவிட்டால் அவர்களுக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் சக்திமயமாக அமர்ந்து இருக்கும் இறைசக்தியும் தாமே என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

கருத்து: ஓம் என்னும் மந்திரத்தில் இருக்கும் பொருளை குருவானவரிடம் கேட்டுத் தமக்குள் அதை உணர்ந்த சாதகர்கள் மகாரமாகிய தங்களின் உயிர்சக்தியை அகாரமாகிய சிவத்தோடும் உகாரமாகிய சக்தியோடும் கலந்துவிட்டால் அவர்கள் இறைவனாக ஆகிவிடுவார்கள்.

பாடல் #764

பாடல் #764: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்களுக்குக் கூறலு மாமே.

விளக்கம்:

பாடல் #763 இல் உள்ளபடி தமக்குள் உறுதியுடன் இறைவனைத் தேடி அடையக்கூடியவர்களுக்கு இறப்பு இல்லை. இவ்வுலகத்தில் எந்தக் குறையும் இன்றி உயிர்களுக்குத் தலைவனாக இருப்பார்கள். இறைவனைத் தமக்குள்ளே தேடி அடைந்தவர்களுக்குத் தெரிந்த பொருள் இதுவாகும். அவர்கள் அறிந்த இறைவனை அடையும் வழியைக் காட்டும்படி கேட்பவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு தான் அறிந்ததை எடுத்துக் கூறுவார்கள்.

கருத்து: இறைவனைத் தமக்குள்ளே தேடி அடைந்தவர்கள் என்றும் இறப்பு இல்லாமல் தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு தாம் அறிந்தவற்றை எடுத்துக் கூறுவார்கள்.

பாடல் #763

பாடல் #763: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.

விளக்கம்:

மூன்று கண்களுடைய பிறப்பில்லாத இறைவனை தனது எண்ணங்கள் அனைத்திலும் காணக்கூடிய சாதகனின் உள்ளே குருவாய் அமர்ந்து அனைத்திற்கும் ஒருவனாகவும் எதிலும் உறுதியாக நிலைத்து இருப்பவனுமான இறைவனின் திருவடிகள் தனக்குள்ளே உறுதியுடன் தேடி சரணாகதியாய் இருப்பவர்களுக்கே கிடைக்கும்.

கருந்து: காலங்கள் அனைத்திலும் இறைவனை தமக்குள் உறுதியாக தேடி சரணாகதியாய் இருப்பவர்களுக்கு இறைவனின் திருவடி கிடைக்கும்.