பாடல் #1827

பாடல் #1827: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினு ளீசனிலை பெறு காரண
மஞ்சமு தாமுப சாரமெட் டெட்டோடு
மஞ்சலி யோடுங் கலந்தற்சித் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மஞசன மாலை நிலாவிய வானவர
நெஞசினு ளீசனிலை பெறு காரண
மஞசமு தாமுப சாரமெட டெடடொடு
மஞசலி யொடுங கலநதறசித தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சின் உள் ஈசன் நிலை பெறு காரணம்
அஞ்சு அமுது ஆம் உபசாரம் எட்டு எட்டோடும்
அஞ்சலியோடும் கலந்து அற்சித்தார்களே.

பதப்பொருள்:

மஞ்சன (அடியவர்களால் அபிஷேகமும்) மாலை (மலர் மாலைகள் சூட்டி அலங்காரமும் செய்து வழிபடப் படுகின்ற) நிலாவிய (ஒளியாக வலம் வருகின்ற / இறைவனின் பிரதிநிதியாக வைத்து வழிபடப் படுகின்ற) வானவர் (வானுலகத்து தேவர்களின்)
நெஞ்சின் (நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே) ஈசன் (இறைவன்) நிலை (எப்போதும் வீற்றிருந்து) பெறு (அடியவர்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருளை வழங்குவதற்கு) காரணம் (காரணம் என்னவென்றால்)
அஞ்சு (பஞ்ச) அமுது (அமிர்தமாக) ஆம் (இருக்கின்ற உணவுக் கூழை படைத்து) உபசாரம் (இறைவனை போற்றி வணங்குகின்ற) எட்டு (எட்டும்) எட்டோடும் (எட்டும் கூட்டி வருகின்ற மொத்தம் 16 விதமான உபசாரங்களை செய்து)
அஞ்சலியோடும் (இரண்டு கரங்களையும் ஒன்றாக கூப்பி வேண்டி) கலந்து (மனதை இறைவன் மேல் வைத்து) அற்சித்தார்களே (உண்மையான அன்போடு அருச்சனை செய்தார்கள் என்பதனால் ஆகும்).

விளக்கம்:

அடியவர்களால் அபிஷேகமும் மலர்கள் சூட்டி அலங்காரமும் செய்து இறைவனின் பிரதிநிதிகளாக வழிபடப் படுகின்ற வானுலகத்து தேவர்களின் நெஞ்சத்திற்குள் இறைவன் வீற்றிருந்து அடியவர்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருளை வழங்குவதற்கு காரணம் என்னவென்றால் அடியவர்கள் உண்மையான அன்போடு பஞ்சாமிர்தம் முதலாகிய 16 விதமான உபசாரங்களை செய்து அருச்சனை செய்தார்கள் என்பதனால் ஆகும்.

16 வகையான உபசாரங்கள்:

  1. ஆவாகனம் – மந்திரத்தால் இறை சக்தியை ஒரு மூர்த்திக்கு மாற்றுதல்
  2. தாபனம் – மூர்த்தியை பிரதிஷ்டை செய்தல்
  3. சந்நிதானம் – மூர்த்தி இருக்கின்ற மூலஸ்தானத்தை சுத்தப் படுத்துதல்
  4. சந்நிரோதனம் – இறைவனது சாந்நியத்தை (சக்தி வெளிப்பாடு) மூர்த்தியில் நிறுத்துதல்
  5. அவகுண்டவம் – மூர்த்தியை சுற்றி மூன்று கவசங்களை மந்திரத்தால் உருவாக்குதல்
  6. தேனுமுத்திரை – மனதை ஒருநிலைப் படுத்தி முத்திரை காட்டுதல்
  7. பாத்தியம் – மூல மந்திரத்தை உச்சரித்து மூர்த்தியின் திருவடியில் தீர்த்தம் சமர்ப்பித்தல்
  8. ஆசமனீயம் – புனிதப் படுத்தும் நீரை மந்திரத்தால் உட்கொள்ளுதல்
  9. அருக்கியம் – தூய்மையான நீரினால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்தல்
  10. புஷ்பதானம் – மலர்கள் சாற்றுதல்
  11. தூபம் – சாம்பிராணி காட்டுதல்
  12. தீபம் – தீப ஆராதனை செய்தல்
  13. நைவேத்தியம் – இறைவனை நினைத்து சமைத்த சாத்வீகமான உணவு படைத்தல்
  14. பாணீயம் – தூய்மையான நீர் படைத்தல்
  15. செபசமர்ப்பணம் – மந்திரங்களை ஜெபித்து சமர்ப்பித்தல்
  16. ஆராத்திரிகை – போற்றி பாடி மணியடித்து ஆராதித்தல்