பாடல் #940

பாடல் #940: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மறையவ னாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாமவ ராமே.

விளக்கம்:

உயிர்கள் இறைவனின் தன்மையை தமக்குள் உணர்ந்து கொள்ள மனிதப் பிறவியை பெற்றுள்ளன. அதனை அறிந்து அனைத்து உயிர்களையும் இறைவனாகப் பார்த்து உணர்பவர்கள் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ என்னும் மந்திரத்தில் மறைவாக இருக்கும் பரம்பொருளை உள்ளத்தில் வைத்து தியானிக்க அவர்களும் இறைவனாகும் பேறு பெற்று ‘நமசிவாய’ ஐந்தெழுத்து மந்திரத்தை தாமாகவே உணர்வார்கள்.

பாடல் #941

பாடல் #941: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுட ரவ்வியல்பு ஆமே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் ஆடுகின்ற இறைவனுக்கு பாதமாக ‘ந’ எழுத்து திருவடியாய் நிற்கும். நாபியாக (தொப்புள்) ‘ம’ எழுத்து நிற்கும். ‘சி’ எழுத்து இருதோள்களாக நிற்கும். ‘வ’ எழுத்து வாயாக நிற்கும். இறைவன் தமக்குள் எழுத்து வடிவாக நிற்பதை கண்டு உணர்ந்த சாதகரின் உயிர் ஒளி மயமாகி இறைவனின் திருவைந்தெழுத்தின் இயல்பை அடைந்து அதன் கடைசி எழுத்தாகிய ‘ய’ எழுத்தாக அவர்களின் ஆன்மா நிற்கும்.

பாடல் #942

பாடல் #942: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

விளக்கம்:

பாடல் #941 இல் உள்ளபடி இறைவனின் திருவைந்தெழுத்தின் இயல்பை அடைந்த சாதகர்கள் அதனுடன் ஓங்காரம் சேர்த்து ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தின் அனைத்து இயல்புகளையும் அடைவதற்கு அவர்களுக்குள் குருவாக இருக்கும் இறைவன் சிறப்பான வழிகாட்டுவார். அப்படி சிறப்பான நிலையை அடைந்த பிறகு சாதகர்கள் தங்களின் ஆன்மாவின் ஒளி வழியாக இறைவனின் பேரொளியைப் பார்த்து மனம் ஒன்றி இருந்தால் அவர்களுக்குள் ஆன்ம ஒளியாக இருக்கும் இறைவனே அண்ட சராசரங்கள் எங்கும் பேரொளி ஜோதியாக பரவி நிற்கின்றான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

பாடல் #943:

பாடல் #943: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

விளக்கம்:

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் அனைத்து உயிர்களுக்குள்ளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. எதையும் கொடுக்கும் வல்லமை பொருந்திய இந்த மந்திரத்தை முறைப்படி குரு உபதேசித்து பெற்று தம்மை பகைவர்கள் போல் சூழ்ந்திருக்கும் வினையால் உருவாகும் இன்ப துன்பங்கள் அனைத்தும் போகும்படி அந்த பிரணவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கருத்து: உயிர்களுக்குள் மூச்சுக்காற்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் குருநாதரின் உபதேசம் பெற்ற மந்திரத்தையும் சேர்த்து செபித்து கொண்டே இருந்தால் வினைகளால் உருவாகும் இன்ப துன்பங்கள் அனைத்தும் சென்றுவிடும்.

பாடல் #944

பாடல் #944: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பியவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்துஇருந் தாரே.

விளக்கம்:

பாடல் #943 இல் உள்ளபடி ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து தமக்குள் இருக்கும் இறைவனை குருவாக உணர்ந்து ‘ஓம்’ எனும் மந்திரத்தோடு ‘நம’ என்கிற மந்திரத்தையும் சேர்த்து உச்சரித்து மூலாதாரத்தில் பிரணவ மந்திரத்தின் வடிவமாய் இருக்கும் இறைவனை எழுப்பி விட்டு அதனோடு பாடல் #910 இல் உள்ளபடி ‘அம்’ என்கிற மந்திரத்தையும் சேர்த்து செபித்து மந்திரத்தைக் கைவரப் பெற்றவர்கள் தமக்குள் இறைவன் ஓயாது நடனமாடும் திருச்சிற்றம்பலக் கூத்து கண்டு பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.

கருத்து: ‘ஓம் நம அம்’ எனும் மந்திரத்தை குருவருளால் உச்சரித்துக் கொண்டே இருக்கும் சாதகர்கள் திருவம்பலக் கூத்தை தமக்குள் தரிசித்து பேரின்பத்தில் இருப்பார்கள்.

பாடல் #945

பாடல் #945: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்திற்குள் இருக்கும் ‘நமசிவாய’ எனும் ஐந்து மந்திர எழுத்துக்கள் இனிப்போடு கலந்திருக்கும் சுவை போல நமசிவாய, மசிவாயந, சிவாயநம, வாயநமசி, யநமசிவா எனும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் முதலாவது எழுத்தாகவும் அந்த மந்திரத்தின் மற்ற எழுத்துக்களோடும் கலந்து இருக்கின்றது. இந்த மந்திரங்கள் சேர்த்து ஐம்பத்தோரு எழுத்துக்கள் அமைத்து வரையப்படும் திருவம்பலச் சக்கரத்தில் இனிப்போடு கலந்திருக்கும் சுவை போல இறைவனும் கலந்து நிற்பான்.

பாடல் #946

பாடல் #946: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமாய நவசிம பார்க்கின் மவயநசி
பரமாய சியநம வாம்பரத் தோதிற்
பரமாய வாசி மயநமாய் நின்றே.

விளக்கம்:

‘சிவயநம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் ‘சிவ’ இறைவியையும் ‘நம’ இறைவனையும் ‘ய’ ஆன்மாவையும் குறிக்கும். இந்த ‘ய’ எழுத்தை முதலாகக் கொண்டு

ய ந வ சி ம
ம வ ய ந சி
சி ய ந ம வ
வ சி ம ய ந
சி வ ய ந ம

என்ற முறையில் வரைய வேண்டும். இதன் தொடர்ச்சி அடுத்த பாடலிலும் உள்ளது.

பாடல் #947

பாடல் #947: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

விளக்கம்:

பாடல் #946 இல் உள்ள ‘சிவயநம’ எனும் மந்திரத்தில் இருக்கும் ‘சி’ எழுத்து ஆகாயத்தையும் ‘வ’ எழுத்து நீரையும், ‘ய’ எழுத்து நிலத்தையும் ‘ந’ எழுத்து நெருப்பையும் ‘ம’ எழுத்து வாயுவையும் குறிக்கின்றது. அவை முறையே நிலம் – செம்மை, நீர் – வெண்மை, நெருப்பு – பொன்மை, வாயு – புகைமை, ஆகாயம் – கருமை ஆகிய நிறங்களில் பஞ்ச பூதங்களை இயக்குகின்றது. பஞ்சபூதங்களுடன் ‘சிவயநம’ எனும் பஞ்சாக்கர மந்திரத்தை பாடல் #946 இல் உள்ளபடி முறையாக வரைந்த சக்கரத்தில் இறைவன் வீற்றிருப்பான்.

குறிப்பு: பாடல் #929 இல் சிவயநம எழுத்துக்களுக்கான பஞ்ச பூதங்களின் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல் #948

பாடல் #948: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்
குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

விளக்கம்:

பாடல் #947 இல் உள்ளபடி பஞ்சபூதங்களுடன் அமைக்கப்பட்ட சக்கரத்தைப் போலவே சாதகரின் உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களும் இறைவன் ஆடுகின்ற மன்றங்களாகவும் சாதகரின் ஆன்மா இறைவனோடு இணைந்து இருக்கின்றது. ஆனால் மாயையால் இறைவனோடு கலந்திருக்கின்றோம் என்பதை அறியாமல் தனித்திருப்பதைப் போன்ற பிரம்மையிலும் இருக்கின்றது. இந்த சக்கரத்தை முறைப்படி செபிக்கும் சாதகர்களின் ஆன்மா கன்றாக இருந்து பசுவாக இருக்கும் இறைவனிடம் ஞானப்பாலை அருந்துகின்றது. அதன் பிறகு சாதகரின் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் இறைவன் ஜோதி உருவமாக தரிசனம் கொடுத்து சாதகரின் ஆன்மாவும் தாமும் ஒன்றே எனும் கொள்கையை உணர வைப்பார்.

பாடல் #949

பாடல் #949: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறியைந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

விளக்கம்:

பாடல் #946 இல் உள்ள முறைப்படி வரையப்பட்ட சக்கரத்திற்குள் பாடல் #929 இல் உள்ளபடி பஞ்சபூதங்களின் குறிகளும் அதன் குணங்களும் இருக்கின்றது. இந்த சக்கரத்திலுள்ள ‘சிவயநம’ எனும் ஐந்தெழுத்து மந்திரமாக இருக்கும் இறைவன் இச்சக்கரத்துள்ளே ஆனந்த நடனம் புரிகின்றான்.

குறிப்பு: பஞ்ச பூதங்களின் குறிகளும் அதன் குணங்களும்:

  1. நிலம் = சதுரம் – வாசனை (முகர்வது)
  2. நீர் = பிறைவட்டம் – சுவை (கிரகித்தல்)
  3. நெருப்பு = முக்கோணம் – ஒளி (வெளிச்சம்)
  4. வாயு = அறுகோணம் – ஸ்பரிசம் (தொடுதல்)
  5. ஆகாயம் = வட்டம் – ஒலி (சத்தம்)