பாடல் #386

பாடல் #386: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.

விளக்கம்:

உலகங்களைப் படைப்பது ஒலியாகிய சிவமும் ஒளியாகிய சக்தியுமாகும். அந்த உலகங்களில் பல தொழில்களைப் புரிவதற்காக இவர்களின் சக்தியிலிருந்து தோன்றிய பிள்ளைகள் ஐந்து பேர். அவர்கள் உயிர்களைப் படைக்கும் பிரம்மன் உயிர்களைக் காக்கும் திருமால் உயிர்களை அழிக்கும் உருத்திரன் உயிர்களை மாயையால் மறைக்கும் மகேசுவரன் உயிர்களுக்கு அருளும் சதாசிவன் ஆகிய ஐந்து பேராவார்கள். அனைத்தையும் படைப்பதற்குக் காரணமான சதாசிவமூர்த்தியே ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருந்து உலகங்கள் அனைத்துமாகவும் அதிலிருக்கும் உயிர்கள் அனைத்துமாகவும் இருக்கின்றான்.

பாடல் #387

பாடல் #387: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.

விளக்கம்:

குளிர்ந்த நீரையும் மண்ணையும் படைத்து அதற்கான தன்மைகளை குருவாக இருந்து சதாசிவமூர்த்தி கொடுக்கின்றார். அதன் மூலம் நல்வினைகளை அருளி சதாசிவமூர்த்தியுடன் ஒன்றாகச் சேர்ந்து உலகங்கள் அனைத்திலும் நீரையும் மண்ணையும் சக்தி வளர்க்கின்றாள். சதாசிவமூர்த்தியின் அசையும் சக்தியான எண்ணத்திலே உதித்த கருத்தானது சிவத்துடன் கலந்து மண்ணாகவும் சக்தியோடு கலந்து நீராகவும் இரண்டும் கலந்து உலகங்களாகவும் மாறுகின்றது. இதில் சிவமும் சக்தியும் மலரில் கலந்திருக்கும் வாசனை போல உலகமெங்கும் ஒன்றாகக் கலந்தே இருக்கின்றனர்.

பாடல் #388

பாடல் #388: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப்பு ஆமே.

விளக்கம்:

இறைவனது தன்மையானது பஞ்ச பூதங்களில் நீரில் சுவையாகவும் நெருப்பில் ஒளியாகவும் காற்றில் உணர்வாகவும் ஆகாயத்தில் ஒலியாகவும் நிலத்தில் உடல் சார்ந்த உயிர்களாகவும் பிறந்து இருக்கின்றது.

உட்கருத்து: பஞ்ச பூதங்கள் ஐந்தும் இறைவனது பண்புகளில் இருந்து உருவானவையே. உலகங்கள் அனைத்தும் இவற்றில் அடக்கம்.

பாடல் #389

பாடல் #389: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டுஇவ் வுலகம் படைக்கும் பொருளே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் காப்பாற்றி பிறகு வெளிப்படுத்திய திருமால் அண்டங்கள் அனைத்திலும் இருக்கின்ற தேவர்களின் தலைவனாகவும் ஆதிமூல நாயகனாகவும் விளங்குகின்ற சிவபெருமான் கர்வத்தினால் தனது ஐந்து தலைகளில் ஒன்றை இறைவனால் கொய்யப்பட்டு நான்கு முகங்களை மட்டுமே கொண்டவனாகிய பிரம்மன் ஆகிய இந்த மூவருடனும் கலந்து இருந்து பழமை வாய்ந்த இந்த உலகங்கள் அனைத்தையும் படைக்கும் பரம்பொருள் சதாசிவமூர்த்தி ஒருவனே ஆவான்.

பாடல் #390

பாடல் #390: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்குஆர் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குஉயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

விளக்கம்:

ஓங்கிய பாற்கடலின் மேல் இருக்கும் திருமாலும் அழகிய கயிலை மலையின் மேல் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானும் மலர்ந்து விரிந்து இருக்கின்ற தாமரை மலரின் மேல் இருக்கும் பிரம்மனும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவை வைக்கின்ற மூலப் பொருளான சதாசிவமூர்த்தியை உணர்ந்து இருக்கின்றார்கள்.

உட்கருத்து: பிரம்மன் படைத்தலும், திருமால் காத்தலும், சிவன் அழித்தலும் செய்யும் உயிர்கள் அனைத்திலும் ஆன்மாவாக இருப்பது சதாசிவமூர்த்தியே என்பதை மூவரும் உணர்ந்திருக்கின்றார்கள்.

Related image

பாடல் #391

பாடல் #391: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரணனு மாய்உல காய்அமர்ந் தானே.

விளக்கம்:

அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாகக் காரணமானவனாகிய சதாசிவமூர்த்தி அனைத்திலும் அன்பாகக் கலந்து இருக்கின்றான். அண்ட சராசரங்கள் அனைத்திலும் உடலாக இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்கிக் காப்பாற்றி நிற்கும் திருமாலாகவும் அவனே இருக்கின்றான். அந்த அண்ட சராசரங்கள் அனைத்திலும் உயிர்களை அன்போடு வேதங்கள் ஓதி உருவாக்கும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனாகவும் அவனே இருக்கின்றேன். அண்ட சராசரங்கள் அனைத்துமாகவும், அதிலிருக்கும் பொருட்களாகவும் அதில் வாழும் உயிர்களாகவும் இருந்து அன்பினால் கட்டி வைத்திருப்பவன் சதாசிவமூர்த்தியாகிய இறைவனே.

பாடல் #392

பாடல் #392: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
பயன்எளி தாம்வய ணந்தெளிந் தேனே.

விளக்கம்:

எல்லாப்பயன்களையும் எளிதில் அளிக்கக் கூடியதும் பேரின்பத்தை வழங்கக் கூடியதும் நம்பிக்கைக்கு உரியதுமான ஒரு மாணிக்ககல் இருக்கிறது. அந்தக் மாணிக்ககல்லே உயிர்களைப் படைக்கும் பிரம்மனுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டுகிறது. அந்த மாணிக்ககல்லாக இறைவன் இருக்கும் காரணத்தை யாம் அறிந்து தெளிந்து கொண்டோம்.

Related image

பாடல் #393

பாடல் #393: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.

விளக்கம்

உலகத்தில் இருக்கும் அனைத்தையும் தனது அருளால் படைத்து காத்து பின்பு அழிக்கின்றான் இறைவன். இந்த மூன்று தொழிலையும் செய்யும் இறைவன் எதனாலும் பாதிக்காமல் புனிதனாக இருந்து எண்ணங்களுக்கு எட்டாத உயரத்தில் எட்டுத்திசைகளில் உள்ள எல்லாவற்றிலும் அவன் கலந்து பரவியிருக்கிறான்.

Related image

பாடல் #394

பாடல் #394: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுஉயிர்ப் பானே நடுவுநின் றானே.

விளக்கம் :

உடலில் ஆன்மாவை வைத்து உயிராக மாற்றுபவன் என் ஆருயிர் இறைவனே உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் கருணையினால் உடலில் இணைந்த ஆன்மாவுடன் உயிராகக் கலந்து இருக்கின்றான். முன்பிறவியின் வினைகளைத் தீர்க்க வேண்டிப் பிறவி எடுத்த அந்த உயிரின் காலம் முடியும் வரை அந்த உயிர் செய்யும் எந்த செயலிலும் தலையிடாமல் நடு நிலையாக நின்று கவனித்துக் கொண்டு அந்த உயிர் வாழ வேண்டிய காலம் வரை அந்த உயிரின் உடலோடு ஒன்றாகக் கலந்து நன்றாகக் காத்துக் கொண்டு நிற்கின்றான் இறைவன்.

பாடல் #395

பாடல் #395: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஆகின்ற தன்மையி லக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாயுளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

விளக்கம் :

எலும்புகளை அணிந்து கொன்றை மலரைச் சூடியிருக்கும் சிவபெருமான் உலகத்தில் நிகழும் அனைத்து தொழிலின் தன்மையாக இருக்கின்றான். உருகுகின்ற தங்கம் போன்ற மினுமினுப்பான உடல் கொண்டவன் அவன். பிறவிக்கு செல்லும் உயிர்கள் வாழும் உடலாயும் இருக்கின்றான். பிறவி எடுத்த உயிருக்கு நிகழும் தன்மையிலும் அவனே கலந்திருந்து துணையாக இருப்பான்.

Image result for சதாசிவ மூர்த்தி