பாடல் #1677

பாடல் #1677: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

உடலிற் றுலக்கிய வேடமுயிர்க் காகா
வுடல்கழன் றால்வேட முடனே கழலு
முடலுயி ருள்ளமை யொன்றோர்ந்து கொள்ளாதார்
கடலி லகப்பட்ட கட்டையொத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலிற றுலககிய வெடமுயிரக காகா
வுடலகழன றாலவெட முடனெ கழலு
முடலுயி ருளளமை யொனறொரநது கொளளாதார
கடலி லகபபடட கடடையொத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடலில் துலக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உள் அமை ஒன்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.

பதப்பொருள்:

உடலில் (ஞானிகளின் உடலில் இருந்து) துலக்கிய (வெளிப்படுகின்ற) வேடம் (வேடமானது) உயிர்க்கு (அவர்களின் உயிர் நிலையை) ஆகா (குறிப்பது ஆகாது)
உடல் (அவர்கள் தங்களின் உடலை) கழன்றால் (நீக்கி விட்டால்) வேடம் (அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும்) உடனே (அதனுடனே சேர்ந்து) கழலும் (நீங்கி விடும்)
உடல் (உடலோடு இருக்கும்) உயிர் (உயிருக்கு) உள் (உள்ளே) அமை (அமைந்து இருக்கின்ற) ஒன்று (ஒரு பரம்பொருளை) ஓர்ந்து (ஆராய்ந்து) கொள்ளாதார் (உணர்ந்து கொள்ளாதவர்கள்)
கடலில் (கடல் அலைகளில்) அகப்பட்ட (அகப்பட்டுக் கொண்ட) கட்டை (கட்டையைப்) ஒத்தாரே (போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்).

விளக்கம்:

ஞானிகளின் உடலில் இருந்து வெளிப்படுகின்ற வேடமானது அவர்களின் உயிர் நிலையை குறிப்பது ஆகாது. அவர்கள் தங்களின் உடலை நீக்கி விட்டால் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும் அதனுடனே சேர்ந்து நீங்கி விடும். உடலோடு இருக்கும் உயிருக்கு உள்ளே அமைந்து இருக்கின்ற ஒரு பரம்பொருளை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர்கள் கடல் அலைகளில் அகப்பட்டுக் கொண்ட கட்டையைப் போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.

பாடல் #1676

முன்னுரை:

இறைவன் உருவமோ குணமோ தன்மையோ இல்லாதவன். ஆகவே அவனுக்கு என்று எந்த வேடமும் கிடையாது. உண்மையான அடியவர்கள் இறைவனை உணரும் பொழுது எந்த வேடத்தில் இருந்தார்களோ அதுவே இறைவனின் வேடமாக ஆகின்றது. அந்த அடியவர்களின் வேடத்தையே இறைவனாக பாவித்து பல காலமாக வணங்கிக் கொண்டு வருகின்றோம். உதாரணம் கண்ணப்பர் போன்ற பல நாயன்மார்கள்.

பாடல் #1676: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

அருளா லரனுக் கடிமை யதாகிப்
பொருளாந் தனதுடல் பொற்பதி நாடி
யிருளான தின்றி யிருஞ்செய லற்றோ
தெருளா மடிமை சிவவேடத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளா லரனுக கடிமை யதாகிப
பொருளாந தனதுடல பொறபதி நாடி
யிருளான தினறி யிருஞசெய லறறொ
தெருளா மடிமை சிவவெடத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகி
பொருள் ஆம் தனது உடல் பொன் பதி நாடி
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர்
தெருள் ஆம் அடிமை சிவ வேடத்தாரே.

பதப்பொருள்:

அருளால் (இறைவனது திருவருளால்) அரனுக்கு (இறைவனுக்கு) அடிமை (தானாகவே அடிமையாக) அது (தாம்) ஆகி (ஆகி)
பொருள் (பொருளாக) ஆம் (இருக்கின்ற) தனது (தமது) உடல் (உடலே) பொன் (பொன்) பதி (அம்பலமாக மாறி) நாடி (அதில் நடனமாடும் இறைவனை தமக்குள் தேடி அடைந்து)
இருள் (ஆணவம், கன்மம், மாயை என்று) ஆனது (இருக்கின்ற மும்மலங்கள்) இன்றி (இல்லாமலும்) இரும் (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) செயல் (செயல்களும்) அற்றோர் (இல்லாமலும் ஆகி)
தெருள் (தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு) ஆம் (அடைந்த) அடிமை (உண்மையான அடியவர்களே) சிவ (இறைவனது) வேடத்தாரே (வேடத்தை கொண்டவர்கள் ஆகும்).

விளக்கம்:

இறைவனது திருவருளால் இறைவனுக்கு தானாகவே அடிமையாக தாம் ஆகி பொருளாக இருக்கின்ற தமது உடலே பொன் அம்பலமாக மாறி அதில் நடனமாடும் இறைவனை தமக்குள் தேடி அடைந்து ஆணவம் கன்மம் மாயை என்று இருக்கின்ற மும்மலங்கள் இல்லாமலும் நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான செயல்களும் இல்லாமலும் ஆகி தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு அடைந்த உண்மையான அடியவர்களே இறைவனது வேடத்தை கொண்டவர்கள் ஆகும்.

பாடல் #1675

பாடல் #1675: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

தானறி தன்மையுந் தானவ னாதலு
மேனைய வச்சிவ மான வியற்கையுந்
தானுறு சாதகர முத்திரை சாத்தலு
மோனமு நந்தி பதமுத்தி பெற்றதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானறி தனமையுந தானவ னாதலு
மெனைய வசசிவ மான வியறகையுந
தானுறு சாதகர முததிரை சாததலு
மொனமு நநதி பதமுததி பெறறதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அறி தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்
தான் உறு சாதகர் முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பத முத்தி பெற்ற அதே.

பதப்பொருள்:

தான் (தான் யார் என்பதை) அறி (அறிந்து கொண்ட) தன்மையும் (தன்மையும்) தான் (தாமே) அவன் (சிவ பரம்பொருளாக) ஆதலும் (ஆகி இருக்கின்ற தன்மையும்)
ஏனைய (தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும்) அச் (அந்த மூலப் பரம்பொருளாகிய) சிவம் (சிவம்) ஆன (ஆகவே இருக்கின்ற) இயற்கையும் (தன்மையும்)
தான் (தாம்) உறு (வீற்றிருக்கின்ற) சாதகர் (சாதகத்தின் நிலையையே) முத்திரை (முத்திரையாக) சாத்தலும் (இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும்)
மோனமும் (மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தும்) நந்தி (குரு நாதராக இருக்கின்ற இறைவனின்) பத (திருவடிகளை அடைந்து) முத்தி (முக்தியை) பெற்ற (பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு) அதே (அடையாளங்கள் ஆகும்).

விளக்கம்:

தான் யார் என்பதை அறிந்து கொண்ட தன்மையும், தாமே சிவ பரம்பொருளாக ஆகி இருக்கின்ற தன்மையும், தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும் அந்த மூலப் பரம்பொருளாகிய சிவம் ஆகவே இருக்கின்ற தன்மையும், தாம் வீற்றிருக்கின்ற சாதகத்தின் நிலையையே முத்திரையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும், மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும், ஆகிய இவை அனைத்தும் குரு நாதராக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை அடைந்து முக்தியை பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு அடையாளங்கள் ஆகும்.

பாடல் #1674

பாடல் #1674: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்தல் தனியாலை யத்தனா
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனா
மேனைத் தவசி யிவனென லாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானததி னாறபத நணணுஞ சிவஞானி
தானததில வைததல தனியாலை யததனா
மொனதத னாதலின முததனாஞ சிததனா
மெனைத தவசி யிவனென லாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானத்தின் ஆல் பதம் நண்ணும் சிவ ஞானி
தானத்தில் வைத்தல் தனி ஆலையத்தன் ஆம்
மோனத்தன் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம்
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே.

பதப்பொருள்:

ஞானத்தின் (உண்மையான ஞானத்தின்) ஆல் (மூலம்) பதம் (இறைவனது திருவடிகளை) நண்ணும் (அடைந்து) சிவ (சிவ ஞானத்தை பெற்ற) ஞானி (ஞானிகள்)
தானத்தில் (தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு) வைத்தல் (கொடுக்கின்றதால்) தனி (அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற) ஆலையத்தன் (ஆலயமாகவே) ஆம் (இருக்கின்றார்கள்)
மோனத்தன் (அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே) ஆதலின் (இருப்பவர்கள் ஆதலால்) முத்தன் (முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்கள்) ஆம் (ஆகவும்) சித்தன் (சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைக்கின்ற சித்தர்கள்) ஆம் (ஆகவும் இருக்கின்றார்கள்)
ஏனை (மற்ற) தவசி (தவசிகளும்) இவன் (இவர்களைப் போலவே இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும்) எனல் (என்பது) ஆகுமே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தின் மூலம் இறைவனது திருவடிகளை அடைந்து சிவ ஞானத்தை பெற்ற ஞானிகள் தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றதால் அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற ஆலயமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே இருப்பவர்கள் ஆதலால் முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்களாகவும் சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் சித்தர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களைப் போலவே மற்ற தவசிகளும் இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும் என்பது உண்மையே ஆகும்.

பாடல் #1673

பாடல் #1673: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானிக்குச் சுந்தர வேடமு நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஞானமவ் வேடமருண் ஞான சாதன
மானது மாமொன்று மாகாதவ னுக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானிககுச சுநதர வெடமு நலலவாந
தானுறற வெடமுந தறசிவ யொகமெ
ஞானமவ வெடமருண ஞான சாதன
மானது மாமொனறு மாகாதவ னுககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானிக்கு சுந்தர வேடமும் நல்ல ஆம்
தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே
ஞானம் அவ் வேடம் அருள் ஞான சாதனம்
ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே.

பதப்பொருள்:

ஞானிக்கு (உண்மையான ஞானிக்கு) சுந்தர (எந்த ஒரு அழகிய) வேடமும் (வேடமும்) நல்ல (நல்லதே) ஆம் (ஆகும்)
தான் (அவர்களுக்கு) உற்ற (தானாகவே அமைந்த) வேடமும் (வேடமும்) தன் (அவர்களின்) சிவ (சிவ) யோகமே (யோகமாகவே இருக்கின்றது)
ஞானம் (உண்மையான ஞானமாகவும்) அவ் (அந்த) வேடம் (வேடமே இருக்கின்றது) அருள் (இறைவனின் திருவருள்) ஞான (ஞானத்தை) சாதனம் (பெறுகின்ற சாதனம்)
ஆனதும் (ஆகவும் அதுவே) ஆம் (இருக்கின்றது) ஒன்றும் (ஆதலால் அந்த வேடத்தினால் எந்த விதமான) ஆகாது (பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை) அவனுக்கே (உண்மையான ஞானிகளுக்கு).

விளக்கம்:

உண்மையான ஞானிக்கு எந்த ஒரு அழகிய வேடமும் நல்லதே ஆகும். அவர்களுக்கு தானாகவே அமைந்த வேடமும் அவர்களின் சிவ யோகமாகவே இருக்கின்றது. உண்மையான ஞானமாகவும் அந்த வேடமே இருக்கின்றது. இறைவனின் திருவருள் ஞானத்தை பெறுகின்ற சாதனமாகவும் அதுவே இருக்கின்றது. ஆதலால் உண்மையான ஞானிகளுக்கு அந்த வேடத்தினால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை.

பாடல் #1672

பாடல் #1672: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

அடியா ரவரே யடியா ரல்லாதா
ரடியாரு மாகாது வேடமு மாகா
வடியார் சிவஞான மானது பெற்றா
ரடியா ரல்லாதா ரடியாரு மன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடியா ரவரெ யடியா ரலலாதா
ரடியாரு மாகாது வெடமு மாகா
வடியார சிவஞான மானது பெறறா
ரடியா ரலலாதா ரடியாரு மனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடியார் அவரே அடியார் அல்லாதார்
அடியாரும் ஆகாது வேடமும் ஆகா
அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றார்
அடியார் அல்லாதார் அடியாரும் அன்றே.

பதப்பொருள்:

அடியார் (உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற) அவரே (ஞானிகளே) அடியார் (அடியவர்கள் ஆவார்கள்) அல்லாதார் (அப்படி இல்லாதவர்கள்)
அடியாரும் (அடியவர்களாகவும்) ஆகாது (ஆக மாட்டார்கள்) வேடமும் (அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும்) ஆகா (உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது)
அடியார் (அடியவர் என்பவர்கள்) சிவ (இறைவனது சிவ) ஞானம் (ஞானமாக) ஆனது (இருக்கின்ற உண்மையான ஞானத்தை) பெற்றார் (இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள்)
அடியார் (அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான) அல்லாதார் (எந்த தன்மையும் இல்லாதவர்கள்) அடியாரும் (அடியவர்களாக) அன்றே (ஆக மாட்டார்கள்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற ஞானிகளே அடியவர்கள் ஆவார்கள். அப்படி இல்லாதவர்கள் அடியவர்களாகவும் ஆக மாட்டார்கள் அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும் உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது. அடியவர் என்பவர்கள் இறைவனது சிவ ஞானமாக இருக்கின்ற உண்மையான ஞானத்தை இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள். அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான எந்த தன்மையும் இல்லாதவர்கள் அடியவர்களாக ஆக மாட்டார்கள்.

பாடல் #1671

பாடல் #1671: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

கத்தித் திரிவர் கழுவடி நாய்போலக்
கொத்தித் திரிவர் குரக்கறி ஞானிக
ளொத்துப் பொறியு முடலு மிருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானியார் களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கததித திரிவர கழுவடி நாயபொலக
கொததித திரிவர குரககறி ஞானிக
ளொததுப பொறியு முடலு மிருககவெ
செததுத திரிவர சிவஞானியார களெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கத்தி திரிவர் கழு அடி நாய் போல
கொத்தி திரிவர் குரக்கு அறி ஞானிகள்
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே
செத்து திரிவர் சிவ ஞானியார்களே.

பதப்பொருள்:

கத்தி (தாம் அறிந்த கொண்டவற்றை ஞானம் என்று எண்ணி மற்றவர்களுக்கு அதையே எடுத்து சொல்லி) திரிவர் (திரிகின்ற பொய்யான ஞானிகள்) கழு (கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு) அடி (அடியில்) நாய் (எப்போது அந்த உடலின் இறைச்சி கிடைக்கும் என்று குரைத்துக் கொண்டு அலைகின்ற நாயை) போல (போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள்)
கொத்தி (கழு மரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு மேலே எப்போது இறைச்சியை கொத்தி உண்ணலாம் என்று திரிகின்ற கழுகுகளைப் போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருப்பதை பிடுங்கி உண்ணலாம் என்று) திரிவர் (திரிவார்கள்) குரக்கு (தமது குரலின் பேச்சுத் திறமையே) அறி (அறிவு என்று எண்ணுகின்ற) ஞானிகள் (பொய்யான ஞானிகள்)
ஒத்து (ஒன்றாக இருக்கின்ற) பொறியும் (ஐந்து புலன்களும்) உடலும் (உடலும்) இருக்கவே (அதனதன் வேலையை செய்து கொண்டு இருந்தாலும் அவற்றை தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்கும் வல்லமையோடு)
செத்து (செத்த பிணத்தைப் போலவே) திரிவர் (எந்த இடத்திலும் கிடப்பார்கள்) சிவ (உண்மையான சிவ) ஞானியார்களே (ஞானிகள்).

விளக்கம்:

தாம் அறிந்த கொண்டவற்றை ஞானம் என்று எண்ணி மற்றவர்களுக்கு அதையே எடுத்து சொல்லி திரிகின்ற பொய்யான ஞானிகள் கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு அடியில் எப்போது அந்த உடலின் இறைச்சி கிடைக்கும் என்று குரைத்துக் கொண்டு அலைகின்ற நாயை போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள். தமது குரலின் பேச்சுத் திறமையே அறிவு என்று எண்ணுகின்ற பொய்யான ஞானிகள் கழு மரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு மேலே எப்போது இறைச்சியை கொத்தி உண்ணலாம் என்று திரிகின்ற கழுகுகளைப் போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருப்பதை பிடுங்கி உண்ணலாம் என்று திரிவார்கள். உண்மையான சிவ ஞானிகள் ஒன்றாக இருக்கின்ற ஐந்து புலன்களும் உடலும் அதனதன் வேலையை செய்து கொண்டு இருந்தாலும் அவற்றை தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்கும் வல்லமையோடு செத்த பிணத்தைப் போலவே எந்த இடத்திலும் கிடப்பார்கள்.

காயத்ரி மந்திரம்

“அறிவோம் காயத்ரி மந்திரம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 10-12-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் நவ குண்டம்

“திருமந்திரத்தில் நவ குண்டம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

அறிவோம் வாருங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு

“அறிவோம் வாருங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 12-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.