பாடல் #1467

பாடல் #1467: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

ஞானத்தின் மிக்க வறிநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமையமு நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவால்
ஞானத்தின் மிக்கார் நரரில்மிக் காரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானததின மிகக வறிநெறி நாடடிலலை
ஞானததின மிகக சமையமு நனறனறு
ஞானததின மிககவை நனமுததி நலகாவால
ஞானததின மிககார நரரிலமிக காரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானத்தின் மிக்க அறி நெறி நாட்டு இல்லை
ஞானத்தின் மிக்க சமையமும் நன்று அன்று
ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்கா ஆல்
ஞானத்தின் மிக்கார் நரரில் மிக்காரே.

பதப்பொருள்:

ஞானத்தின் (ஞானத்தை) மிக்க (விட மேலானதாக) அறி (அறியப் படுகின்ற) நெறி (நெறி முறைகள் என்று எதுவும்) நாட்டு (எந்த நாட்டிலும்) இல்லை (இல்லை)
ஞானத்தின் (ஞானத்தை) மிக்க (மேலானது என்று) சமையமும் (எடுத்துக் கொள்ளாத எந்த சமயமும்) நன்று (நன்மையானது) அன்று (இல்லை)
ஞானத்தின் (ஞானத்தை) மிக்கவை (விட்டு விட்டு இருக்கின்ற எந்த வழிமுறையும்) நல் (நன்மையான) முத்தி (முக்தி நிலையை) நல்கா (கொடுக்காது) ஆல் (ஆதலால்)
ஞானத்தின் (ஞானத்தில்) மிக்கார் (மிகவும் மேன்மை பெற்றவர்களே) நரரில் (மனிதர்களில்) மிக்காரே (மிகவும் மேன்மையானவர் ஆவார்கள்).

விளக்கம்:

ஞானத்தை விட மேலானதாக அறியப் படுகின்ற நெறி முறைகள் என்று எதுவும் எந்த நாட்டிலும் இல்லை. ஞானத்தை மேலானது என்று எடுத்துக் கொள்ளாத எந்த சமயமும் நன்மையானது இல்லை. ஞானத்தை விட்டு விட்டு இருக்கின்ற எந்த வழிமுறையும் நன்மையான முக்தி நிலையை கொடுக்காது. ஆதலால், ஞானத்தில் மிகவும் மேன்மை பெற்றவர்களே மனிதர்களில் மிகவும் மேன்மையானவர் ஆவார்கள்.

பாடல் #1468

பாடல் #1468: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

சத்தமுஞ் சத்த மன்னுந் தகுமனது
முய்த்த வுணர்வு முணர்ந்துங் கரந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததமுஞ சதத மனனுந தகுமனது
முயதத வுணரவு முணரநதுங கரநதையுஞ
சிததமென றிமமூனறுஞ சிநதிககுஞ செயகையுஞ
சததங கடநதவர பெறறசன மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தமும் சத்த மன்னும் தகு மனதும்
உய்த்த உணர்வும் உணர்ந்தும் கரந்தையும்
சித்தம் என்று இம் மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தம் கடந்தவர் பெற்ற சன் மார்கமே.

பதப்பொருள்:

சத்தமும் (ஞானத்தை பெறுகின்ற மூல சத்தமும்) சத்த (அந்த சத்தம்) மன்னும் (நிலை பெற்று இருப்பதற்கு) தகு (தகுதியான) மனதும் (மனமும்)
உய்த்த (அந்த மனதால் கிடைக்கப் பெற்ற) உணர்வும் (உண்மை உணர்வும்) உணர்ந்தும் (அதை உணர்ந்து கொண்டதால்) கரந்தையும் (அதற்கு காரணமாக இருப்பவர் என்று தெரிந்து கொண்ட குருவும்)
சித்தம் (சித்தம்) என்று (என்று அழைக்கப் படுகின்ற) இம் (இந்த) மூன்றும் (மூன்றையும்) சிந்திக்கும் (எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்ற) செய்கையும் (செயலும் ஆகிய இவை அனைத்தும்)
சத்தம் (சத்தங்களை) கடந்தவர் (கடந்து அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனை அறிந்து கொண்ட ஞானியர்கள்) பெற்ற (பெற்ற) சன் (உண்மை) மார்கமே (வழியாகும்).

விளக்கம்:

ஞானத்தை பெறுகின்ற 1. மூல சத்தமும், அந்த சத்தம் நிலை பெற்று இருப்பதற்கு தகுதியான மனமும், அந்த மனதால் கிடைக்கப் பெற்ற 2. உண்மை உணர்வும், அதை உணர்ந்து கொண்டதால் அதற்கு காரணமாக இருப்பவர் என்று தெரிந்து கொண்ட 3. குருவும், சித்தம் என்று அழைக்கப் படுகின்ற இந்த மூன்றையும் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்ற செயலும், ஆகிய இவை அனைத்தும் சத்தங்களை கடந்து அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனை அறிந்து கொண்ட ஞானியர்கள் பெற்ற உண்மை வழியாகும்.

பாடல் #1469

பாடல் #1469: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

தன்பா லுலகுந் தனக்கரு ளாவது
மன்பா லெனக் கருளாவது மாவனென்
பார்கள் ஞானமு மெய்துஞ் சிவயோகமு
மன்பாலி னேயமும் பெற்றிடுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனபா லுலகுந தனககரு ளாவது
மனபா லெனக கருளாவது மாவனென
பாரகள ஞானமு மெயதுஞ சிவயோகமு
மினபாலி னெயமும பெறறிடுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் பால் உலகும் தனக்கு அருள் ஆவதும்
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன்
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவ யோகமும்
இன் பாலின் நேயமும் பெற்றிடும் தானே.

பதப்பொருள்:

தன் (தாம்) பால் (சார்ந்து இருக்கின்ற) உலகும் (உலகமும் அதில் நிகழ்கின்ற அனைத்தும்) தனக்கு (தமக்கு) அருள் (இறைவன் கொடுத்த அருள்) ஆவதும் (என்று எடுத்துக் கொள்வதும்)
அன்பால் (தம் மேல் கொண்ட அன்பினால்) எனக்கு (தமக்கு) அருள் (கொடுக்கின்ற அருள்) ஆவதும் (ஆகவே அனைத்தும் நிகழ்வதும்) ஆவன் (அதை நிகழ்த்துபவனாகவும் இறைவனே இருக்கின்றான்)
என்பார்கள் (என்று கூறுவார்கள்) ஞானமும் (இறையருளால் ஞானமும்) எய்தும் (பெற்று) சிவ (சிவத்தை அறியும்) யோகமும் (யோகமும் பெற்றவர்கள்)
இன் (இனிமையான) பாலின் (பாலைப் போல) நேயமும் (இறைவனோடு கொண்ட தூய்மையான அன்பினால்) பெற்றிடும் (தாம் பெற்ற பேரின்பத்தையும்) தானே (அனுபவித்தவர்களாகிய ஞானிகள்).

விளக்கம்:

தாம் சார்ந்து இருக்கின்ற உலகமும் அதில் நிகழ்கின்ற அனைத்தும் தமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று எடுத்துக் கொள்வதும் தம் மேல் கொண்ட அன்பினால் தமக்கு இறைவன் கொடுக்கின்ற அருளாகவே அனைத்தும் நிகழ்வதும் அதை நிகழ்த்துபவனாகவும் இறைவனே இருக்கின்றான் என்று ஞானிகள் கூறுவார்கள். இந்த ஞானிகளே இறையருளால் ஞானமும் பெற்று சிவத்தை அறியும் யோகமும் பெற்று இனிமையான பாலைப் போல இறைவனோடு அவர்கள் கொண்ட தூய்மையான அன்பினால் பேரின்பத்தையும் பெற்று இருக்கின்றார்கள்.

பாடல் #1470

பாடல் #1470: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

இருக்குஞ் சேயிடம் பிரமமு மாகும்
வருக்குஞ் சராசர மாகு முலகந்
தருக்கிய வாசார மெல்லாந் தகுமே
திருக்கமில் ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருககுஞ செயிடம பிரமமு மாகும
வருககுஞ சராசர மாகு முலகந
தருககிய வாசார மெலலாந தகுமெ
திருககமில ஞானததைத தெரநதுணரந தொரகெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருக்கும் சேய் இடம் பிரமமும் ஆகும்
வருக்கும் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தகுமே
திருக்கம் இல் ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்கே.

பதப்பொருள்:

இருக்கும் (இருக்கின்ற) சேய் (பிள்ளைகளாகிய ஞானிகளுக்கு) இடம் (தாம் இருக்கின்ற இடமே) பிரமமும் (வீடுபேறாக) ஆகும் (ஆகி விடும்)
வருக்கும் (ஆதியிலிருந்து தொடர்ந்து வருகின்ற) சராசரம் (அசையும் பொருளும் அசையா பொருளும்) ஆகும் (ஆக இருக்கின்ற) உலகம் (இந்த உலகமே)
தருக்கிய (அவர் கடைபிடித்து வருகின்ற) ஆசாரம் (ஒழுக்கங்கள்) எல்லாம் (அனைத்திற்கும்) தகுமே (தகுதியான படி அமைந்து விடும்)
திருக்கம் (இது யாருக்கு என்றால் ஒரு பிழையும்) இல் (இல்லாத) ஞானத்தை (உன்னதமான ஞானத்தை) தேர்ந்து (தமக்குள்ளே ஆராய்ந்து) உணர்ந்தோர்கே (உணர்ந்து கொண்டவர்களாகிய ஞானிகளுக்கே ஆகும்).

விளக்கம்:

இறைவனின் பிள்ளைகளாகிய ஞானிகளுக்கு அவர்கள் இருக்கின்ற இடமே வீடுபேறாக ஆகி விடும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருகின்ற அசையும் பொருளும் அசையா பொருளுமாக இருக்கின்ற இந்த உலகமே அவர் கடைபிடித்து வருகின்ற ஒழுக்கங்கள் அனைத்திற்கும் தகுதியான படி அமைந்து விடும். இது யாருக்கு என்றால் ஒரு பிழையும் இல்லாத உன்னதமான ஞானத்தை தமக்குள்ளே ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்களாகிய ஞானிகளுக்கே ஆகும்.

பாடல் #1471

பாடல் #1471: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

அறிவு மடக்கமு மன்பி னுடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தோணி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிவு மடககமு மனபி னுடனெ
பிறியா நகரமனனும பெரரு ளாளன
குறியுங குணமுங குரைகழல நீஙகா
நெறியறி வாரககிது நீரததொணி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிவும் அடக்கமும் அன்பின் உடனே
பிறியாத நகர் மன்னும் பேர் அருள் ஆளன்
குறியும் குணமும் குரை கழல் நீங்காத
நெறி அறிவார்க்கு இது நீர் தோணி ஆமே.

பதப்பொருள்:

அறிவும் (உண்மையான அறிவும்) அடக்கமும் (பணிவுடைய எண்ணமும்) அன்பின் (இறைவன் மேல் கொண்ட அன்பும்) உடனே (அதனுடனே)
பிறியாத (அடியவர்களை விட்டு என்றும் பிரியாமல்) நகர் (தில்லை சிற்றம்பலத்தில்) மன்னும் (நிலை பெற்ற திருநடனம் புரிகின்ற) பேர் (மிகப் பெரும்) அருள் (அருளை) ஆளன் (வழங்குவபனாகிய இறைவனை)
குறியும் (அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு) குணமும் (இருக்கின்ற நல்ல குணமும்) குரை (பேரழகு வாய்ந்த) கழல் (அவனின் திருவடிகளை) நீங்காத (எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கின்ற மனதும்)
நெறி (ஆகிய இவை அனைத்தையும் இறைவனை அடைவதற்கான வழியாக) அறிவார்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு) இது (இந்த வழிமுறையே) நீர் (பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவும்) தோணி (படகாக) ஆமே (இருக்கும்).

விளக்கம்:

உண்மையான அறிவும் பணிவுடைய எண்ணமும் இறைவன் மேல் கொண்ட அன்பும் அதனுடனே அடியவர்களை விட்டு என்றும் பிரியாமல் தில்லை சிற்றம்பலத்தில் நிலை பெற்ற திருநடனம் புரிகின்ற மிகப் பெரும் அருளை வழங்குவபனாகிய இறைவனை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு இருக்கின்ற நல்ல குணமும் பேரழகு வாய்ந்த அவனின் திருவடிகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கின்ற மனதும் ஆகிய இவை அனைத்தையும் இறைவனை அடைவதற்கான வழியாக அறிந்து கொண்டவர்களுக்கு இந்த வழிமுறையே பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவும் படகாக இருக்கும்.

பாடல் #1472

பாடல் #1472: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையு
ளேனம் விளைந்தெதி ரேகான் வழிதோறுங்
கூனல் மதிமண் டலத்தினில் நீர்தண்டு
மூனம றுத்துநின் றொண்சுட ராமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானம விளைநதெழு கினறதொர சிநதையு
ளெனம விளைநதெதி ரெகான வழிதொறுங
கூனல மதிமண டலததினில நீரதணடு
மூனம றுததுநின றொணசுட ராமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தை உள்
ஏனம் விளைந்து எதிரே கான் வழி தோறும்
கூனல் மதி மண்டலத்தினில் நீர் தண்டும்
ஊனம் அறுத்து நின்ற ஒண் சுடர் ஆமே.

பதப்பொருள்:

ஞானம் (உண்மையான ஞானம்) விளைந்து (உருவாகி) எழுகின்றது (மேல் நிலைக்கு எழுந்து இருக்கின்ற) ஓர் (ஒரு ஞானியின்) சிந்தை (சிந்தைனைக்கு) உள் (உள்ளே)
ஏனம் (இன்னமும் இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆணவம் முதலிய குற்றங்கள்) விளைந்து (பிறவியின் காரணத்தினால் விளைந்து) எதிரே (அவர் எதிர்கொள்கின்ற வாழ்க்கையை) கான் (காட்டு) வழி (வழி போல) தோறும் (முழுவதும் கடினமாக வைத்து இருக்கும்)
கூனல் (அப்போது அவர் பெற்ற ஞானத்தின் பயனால் அவரது கடினமான வாழ்க்கையை மாற்றி) மதி (அறிவு ஞானமாக இருக்கின்ற) மண்டலத்தினில் (மண்டலத்தில்) நீர் (அமிழ்த நீரை வைத்து இருக்கும்) தண்டும் (சுழுமுனை நாடியின் வழியாக அமிழ்தத்தை ஊறச் செய்து)
ஊனம் (இறைவனை அவர் அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து மலங்களையும்) அறுத்து (அதன் மூலம் நீக்கி விட்டு) நின்ற (நிலைபெற்று நின்று) ஒண் (எப்போதும் அவரோடு சேர்ந்தே இருக்கின்ற) சுடர் (இறைவனின் ஜோதி வடிவமாகவே) ஆமே (அவரையும் ஆக்கி விடும்).

விளக்கம்:

பாடல் #1471 இல் உள்ளபடி இறைவனை அடைவதற்கு தேவையான வழிமுறையை அறிந்து கொண்டு அதை விடாமல் கடை பிடித்ததால் உண்மையான ஞானம் உருவாகி மேல் நிலைக்கு எழுந்து இருக்கின்ற ஒரு ஞானியின் சிந்தைனைக்கு உள்ளே இன்னமும் இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆணவம் கன்மம் முதலிய குற்றங்கள் பிறவியின் காரணத்தினால் விளைந்து அவர் எதிர்கொள்கின்ற வாழ்க்கையை காட்டு வழி போல முழுவதும் கடினமாக வைத்து இருக்கும். அப்போது அவர் பெற்ற ஞானத்தின் பயனால் அவரது கடினமான வாழ்க்கையை மாற்றி அறிவு ஞானமாக இருக்கின்ற மண்டலத்தில் அமிழ்த நீரை வைத்து இருக்கும் சுழுமுனை நாடியின் வழியாக அமிழ்தத்தை ஊறச் செய்து இறைவனை அவர் அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து மலங்களையும் அதன் மூலம் நீக்கி விட்டு நிலைபெற்று நின்று எப்போதும் அவரோடு சேர்ந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி வடிவமாகவே அவரையும் ஆக்கி விடும்.

பாடல் #1473

பாடல் #1473: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்து விளைந்திடுந்
தானிக் குலத்தோர் சரிதை கிரிகையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானிக குடனகுணம ஞானததில நானகுமா
மொனிக கிவையொனறுங கூடாமுன மொகிதது
மெனிறற லாஞசததி விதது விளைநதிடுந
தானிக குலததொர சரிதை கிரிகையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்கும் ஆம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்து விளைந்திடும்
தான் இக் குலத்தோர் சரிதை கிரிகையே.

பதப்பொருள்:

ஞானிக்கு (உண்மையான ஞானத்தை பெற்ற ஞானிக்கு) உடன் (அவருடனே இருக்கின்ற) குணம் (குணங்களாக) ஞானத்தில் (ஞானத்தில் சேர்ந்து இருக்கின்ற) நான்கும் (நான்கு விதமாக கிரியையில் முழுமை பெற்ற ஞானமும், சரியையில் முழுமை பெற்ற ஞானமும், யோகத்தில் முழுமை பெற்ற ஞானமும், ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமும்) ஆம் (ஆகிய நிலைகள் இருக்கின்றன)
மோனிக்கு (இந்த நிலைகளை அடைந்து மௌன நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு) இவை (இந்த நான்கு நிலைகளில்) ஒன்றும் (ஒன்று கூட) கூடா (குணமாக சேர்ந்து இருப்பதற்கு) முன் (முந்தைய காலத்தில்) மோகித்து (அவர் உலகப் பற்றுக்களில் மயங்கி இருக்கும் போது)
மேல் (அவருக்கு மேல்) நிற்றல் (நின்று) ஆம் (அருளுகின்றதாகிய) சத்தி (இறை சக்தியானது) வித்து (அவர் கடைபிடித்த வழிகளின் பயனால் விதையைப் போல) விளைந்திடும் (ஞானம் விளைந்து விடும்)
தான் (அதன் பயனால் மௌன நிலை என்ற உச்சத்திற்கு சென்று நான்கு விதமான ஞான நிலைகளையும் தம்முடைய குணங்களாக கொண்ட) இக் (இந்த) குலத்தோர் (ஞானியர்கள் அனைவரும்) சரிதை (இனி இறைவனை அடைய வேண்டும் என்று சரியையும்) கிரிகையே (கிரியையும் செய்கின்ற அனைத்து உயிர்களுக்கும் அதன் பலன்களை கொடுக்கின்ற இறை நிலையாக இருப்பார்கள்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தை பெற்ற ஞானிக்கு அவருடனே இருக்கின்ற குணங்களாக ஞானத்தில் சேர்ந்து இருக்கின்ற சரியையில் முழுமை பெற்ற ஞானமும் கிரியையில் முழுமை பெற்ற ஞானமும் யோகத்தில் முழுமை பெற்ற ஞானமும் ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமும் ஆகிய நான்கு விதமான நிலைகள் இருக்கின்றன. இந்த நிலைகளை அடைந்து மௌன நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு இந்த நான்கு நிலைகளில் ஒன்று கூட குணமாக சேர்ந்து இருப்பதற்கு முந்தைய காலத்தில் அவர் உலகப் பற்றுக்களில் மயங்கி இருக்கும் போது அவருக்கு மேல் நின்று அருளுகின்றதாகிய இறை சக்தியானது பாடல் #1471 இல் உள்ளபடி அவர் கடைபிடித்த வழிகளின் பயனால் விதையைப் போல ஞானம் விளைந்து விடும். அதன் பயனால் மௌன நிலை என்ற உச்சத்திற்கு சென்று நான்கு விதமான ஞான நிலைகளையும் தம்முடைய குணங்களாக கொண்ட இந்த ஞானியர்கள் அனைவரும் இனி இறைவனை அடைய வேண்டும் என்று சரியையும் கிரியையும் செய்கின்ற அனைத்து உயிர்களுக்கும் அதன் பலன்களை கொடுக்கின்ற இறை நிலையாக இருப்பார்கள்.

பாடல் #1474

பாடல் #1474: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

ஞானத்தின் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்தம் நல்லொளி
ஞானக் கிரிகையே நன்முத்தி நாடலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானததின ஞானாதி நானகுமாம ஞானிககு
ஞானததின ஞானமெ நானென தெனனாமல
ஞானததில யொகமெ நாதாநதம நலலொளி
ஞானக கிரிகையெ நனமுததி நாடலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானத்தின் ஞான ஆதி நான்கும் ஆம் ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாத அந்தம் நல் ஒளி
ஞான கிரிகையே நன் முத்தி நாடலே.

பதப்பொருள்:

ஞானத்தின் (ஞானத்தில் முழுமை பெற்ற) ஞான (ஞானத்திற்கு) ஆதி (முதலாக இருக்கின்ற) நான்கும் (நான்கு விதமான நிலைகள்) ஆம் (ஆக) ஞானிக்கு (ஞானிக்கு இருப்பதில்)
ஞானத்தின் (ஞானத்தில்) ஞானமே (முழுமை பெற்ற ஞானமானது) நான் (நான்) எனது (இது எனது) என்னாமல் (என்கின்ற எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் அனைத்தும் இறைவனே என்று இருக்கின்ற நிலையாகும்)
ஞானத்தில் (ஞானமானது) யோகமே (முழுமை பெற்ற யோகத்தில்) நாத (சத்தத்திற்கு) அந்தம் (எல்லையாக இருக்கின்ற) நல் (நன்மையே வடிவான) ஒளி (ஜோதியாகும்)
ஞான (ஞானமானது) கிரிகையே (முழுமை பெற்ற கிரியையில்) நன் (நன்மை தரும்) முத்தி (முக்தியை தேடிச் செல்லுவதல் ஆகும்) நாடலே (சரியையில் முழுமை பெற்ற ஞானமானது இறைவனை நாடிச் சென்று அடைவது ஆகும்).

விளக்கம்:

பாடல் #1473 இல் உள்ளபடி ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு முதலாக இருக்கின்ற நான்கு விதமான நிலைகளாக ஞானிக்கு இருப்பதில் ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமானது நான் இது எனது என்கின்ற எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் அனைத்தும் இறைவனே என்று இருக்கின்ற நிலையாகும். யோகத்தில் முழுமை பெற்ற ஞானமானது சத்தத்திற்கு எல்லையாக இருக்கின்ற நன்மையே வடிவான ஜோதியாகும். கிரிகையில் முழுமை பெற்ற ஞானமானது நன்மை தரும் முக்தியை தேடிச் செல்லுதல் ஆகும். சரியையில் முழுமை பெற்ற ஞானமானது இறைவனை நாடிச் சென்று அடைவது ஆகும்.

பாடல் #1475

பாடல் #1475: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோர்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோர்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நணணிய ஞானததின ஞானாதி நணணுவொன
புணணிய பாவங கடநத பிணககறறொர
கணணிய நெயங கரைஞானங கணடுளொர
திணணிய சுததன சிவமுததன சிததனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நண்ணிய ஞானத்தின் ஞான ஆதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோர்
கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டு உளோர்
திண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே.

பதப்பொருள்:

நண்ணிய (தமக்கு கிடைக்கப் பெற்ற) ஞானத்தின் (ஞானத்தில்) ஞான (முழுமை பெற்ற ஞானத்திற்கு) ஆதி (முதலாக இருக்கின்ற ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆகிய நான்கு நிலைகளையும்) நண்ணுவோன் (கிடைக்கப் பெற்றவர்கள்)
புண்ணிய (புண்ணியம்) பாவம் (பாவம் என்கின்ற) கடந்த (நிலைகளை கடந்து நின்று) பிணக்கு (எந்த விதமான பற்றுகளும்) அற்றோர் (இல்லாமல் இருப்பவர்கள்)
கண்ணிய (மேன்மையான) நேயம் (அன்பிற்கு) கரை (எல்லையாக இருக்கின்ற) ஞானம் (இறை ஞானத்தை) கண்டு (கண்டு) உளோர் (அதிலேயே பேரன்பாக இருப்பவர்கள்)
திண்ணிய (உறுதியாக) சுத்தன் (எந்தவிதமான மாசுக்களும் இல்லாமல் தூய்மையாக இருக்கின்ற) சிவ (சிவ நிலையில்) முத்தன் (முக்தியாக இருக்கின்ற) சித்தனே (சித்தர்கள் ஆகும்).

விளக்கம்:

தமக்கு கிடைக்கப் பெற்ற ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு முதலாக இருக்கின்ற ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை ஞானத்தில் யோகம் ஞானத்தில் ஞானம் ஆகிய நான்கு நிலைகளையும் கிடைக்கப் பெற்றவர்கள் புண்ணியம் பாவம் என்கின்ற நிலைகளை கடந்து நின்று எந்த விதமான பற்றுகளும் இல்லாமல் இருப்பவர்கள். மேன்மையான அன்பிற்கு எல்லையாக இருக்கின்ற இறை ஞானத்தை கண்டு அதிலேயே பேரன்பாக இருப்பவர்கள். இவர்களே உறுதியாக எந்தவிதமான மாசுக்களும் இல்லாமல் தூய்மையாக இருக்கின்ற சிவ நிலையில் முக்தியாக இருக்கின்ற சித்தர்கள் ஆகும்.