பாடல் #1476

பாடல் #1476: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

ஞான சமையமே நாடுந்தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடும் பரோதையம்
ஞான நிர்வாணமே நன்னெறி வன்னருள்
ஞானா பிடேகமே நற்குரு பாதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞான சமையமெ நாடுநதனைக காணடல
ஞான விசெடமெ நாடும பரொதையம
ஞான நிரவாணமெ நனனெறி வனனருள
ஞானா பிடெகமெ நறகுரு பாதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞான சமையமே நாடும் தனை காண்டல்
ஞான விசேடமே நாடும் பரா உதயம்
ஞான நிர்வாணமே நன் நெறிவன் அருள்
ஞான அபிடேகமே நற் குரு பாதமே.

பதப்பொருள்:

ஞான (ஞானமானது) சமையமே (சமயம் எனப்படுகின்ற சரியையில் முழுமையாக இருப்பது) நாடும் (வெளியில் தேடி செல்லுகின்ற இறைவனை) தனை (தனக்குள்) காண்டல் (கண்டு உணர்வது ஆகும்)
ஞான (ஞானமானது) விசேடமே (விசேடம் எனப்படுகின்ற கிரியையில் முழுமையாக இருப்பது) நாடும் (தாம் தேடுகின்ற) பரா (பரம் பொருளாகிய இறைவன்) உதயம் (தமக்குள்ளேயே ஞானமாக உருவாகுவது ஆகும்)
ஞான (ஞானமானது) நிர்வாணமே (நிர்வாணம் எனப்படுகின்ற யோகத்தில் முழுமையாக இருப்பது) நன் (நன்மையை கொடுக்கின்ற) நெறிவன் (நெறிகளாக இருக்கின்ற இறைவனின்) அருள் (அருளை பரிபூரணமாக பெறுவது ஆகும்)
ஞான (ஞானமானது) அபிடேகமே (அபிடேகம் எனப்படுகின்ற ஞானத்தில் முழுமையாக இருப்பது) நற் (நன்மையே வடிவாக) குரு (குருநாதனாக இருக்கின்ற இறைவனின்) பாதமே (திருவடிகளே ஆகும்).

விளக்கம்:

ஞானமானது சமயம் எனப்படுகின்ற சரியையில் முழுமையாக இருப்பது வெளியில் தேடி செல்லுகின்ற இறைவனை தனக்குள் கண்டு உணர்வது ஆகும். ஞானமானது விசேடம் எனப்படுகின்ற கிரியையில் முழுமையாக இருப்பது தாம் தேடுகின்ற பரம் பொருளாகிய இறைவன் தமக்குள்ளேயே ஞானமாக உருவாகுவது ஆகும். ஞானமானது நிர்வாணம் எனப்படுகின்ற யோகத்தில் முழுமையாக இருப்பது நன்மையை கொடுக்கின்ற நெறிகளாக இருக்கின்ற இறைவனின் அருளை பரிபூரணமாக பெறுவது ஆகும். ஞானமானது அபிடேகம் எனப்படுகின்ற ஞானத்தில் முழுமையாக இருப்பது நன்மையே வடிவாக குருநாதனாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளே ஆகும்.

பாடல் #1459

பாடல் #1459: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

பூவினிற் கெந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
வோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுத்தறி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூவினிற கெநதம பொருநதிய வாறுபொற
சீவனுக குளளெ சிவமணம பூததது
வொவியம பொல வுணரநதறி வாளரககு
நாவி யணைநத நடுததறி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூவினில் கந்தம் பொருந்திய ஆறு போல்
சீவனுக்கு உள்ளே சிவ மணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடு தறி ஆமே.

பதப்பொருள்:

பூவினில் (மலராத பூவிற்குள்ளும்) கந்தம் (நறுமணம்) பொருந்திய (கலந்து இருக்கின்ற) ஆறு (முறையை) போல் (போலவே)
சீவனுக்கு (ஜீவாத்மாவிற்கு) உள்ளே (உள்ளே) சிவ (சிவம் எனும் பரம் பொருளானது) மணம் (பூவுக்குள் இருக்கின்ற நறுமணம் போல கலந்து இருக்கின்றது) பூத்தது (பூவானது மலர்ந்த பிறகு அதனது நறுமணம் வெளிப்படுவது போலவே)
ஓவியம் (வரைந்து வைத்த ஓவியம்) போல (போல எதனாலும் அசையாமல் யோகத்தில் இருந்து) உணர்ந்து (இந்த முறையை தமக்குள்ளே உணர்ந்து) அறிவாளர்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
நாவி (கஸ்தூரியோடு) அணைந்த (சேர்ந்து இருக்கும் நறுமணம் போல) நடு (தரையில் நடப்பட்ட) தறி (கழியைப் போல அசையாமல் இருக்கின்ற யோகியர்களின்) ஆமே (பக்குவப்பட்ட ஆன்மாவிற்குள் சேர்ந்து இருக்கின்ற சிவம் வெளிப்படும்).

விளக்கம்:

மலராத பூவிற்குள்ளும் நறுமணம் கலந்து இருக்கின்ற முறையை போலவே ஜீவாத்மாவிற்கு உள்ளே சிவம் எனும் பரம் பொருளானது கலந்து இருக்கின்றது. பூவானது மலர்ந்த பிறகு அதனது நறுமணம் வெளிப்படுவது போலவே வரைந்து வைத்த ஓவியம் போல எதனாலும் அசையாமல் யோகத்தில் இருந்து இந்த முறையை தமக்குள்ளே உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு, கஸ்தூரியோடு சேர்ந்து இருக்கும் நறுமணம் போல தரையில் நடப்பட்ட கழியைப் போல அசையாமல் இருக்கின்ற யோகியர்களின் பக்குவப்பட்ட ஆன்மாவிற்குள் சேர்ந்து இருக்கின்ற சிவம் வெளிப்படும்.

பாடல் #1460

பாடல் #1460: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

உய்ந்தன மென்றீ ருறுபொருட் காண்கிலீர்
கந்த மலரிற் கரக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திரு ணீக்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயநதன மெனறீ ருறுபொருட காணகிலீர
கநத மலரிற கரககினற நநதியைச
சிநதை யுறவெ தெளிநதிரு ணீககினால
முநதைப பிறவிககு மூலவித தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உய்ந்தனம் என்றீர் உறு பொருள் காண்கிலீர்
கந்த மலரில் கரக்கின்ற நந்தியை
சிந்தை உறவே தெளிந்து இருள் நீக்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே.

பதப்பொருள்:

உய்ந்தனம் (முக்திக்கான ஞானத்தை பெற்று விட்டோம்) என்றீர் (என்று கூறுகின்றீர்கள்) உறு (உங்களுக்கு உள்ளேயே இருக்கின்ற) பொருள் (பரம்பொருளை) காண்கிலீர் (கண்டு உணராமல் இருக்கின்றீர்கள்)
கந்த (நறுமணம்) மலரில் (மலருக்குள்) கரக்கின்ற (மறைந்து இருப்பது போல ஜீவாத்மாவிற்குள் மறைந்து இருக்கின்ற) நந்தியை (குருநாதனாகிய இறைவனை)
சிந்தை (சிந்தை முழுவதும் அவன் மேல் வைத்து) உறவே (யோகம் செய்து) தெளிந்து (தமக்குள் அவனை அறிந்து கொண்டு தெளிவு பெற்று) இருள் (அதன் பயனால் மும்மலங்களாகிய இருளை) நீக்கினால் (நீக்கி விட்டால்)
முந்தை (முதன் முதலில்) பிறவிக்கு (இறைவனிடமிருந்து பிரிந்து வந்து பிறவி எடுப்பதற்கு) மூல (மூல) வித்து (காரணமாக இருக்கின்ற ஆசைகள் நீங்கப் பெற்று) ஆமே (இனி பிறவியே இல்லாத நிலையை அடையலாம்).

விளக்கம்:

முக்திக்கான ஞானத்தை பெற்று விட்டோம் என்று கூறுகின்றீர்கள் உங்களுக்கு உள்ளேயே இருக்கின்ற பரம்பொருளை கண்டு உணராமல் இருக்கின்றீர்கள். நறுமணம் மலருக்குள் மறைந்து இருப்பது போல ஜீவாத்மாவிற்குள் மறைந்து இருக்கின்ற குருநாதனாகிய இறைவனை சிந்தை முழுவதும் அவன் மேல் வைத்து யோகம் செய்து தமக்குள் அவனை அறிந்து கொண்டு தெளிவு பெற்று அதன் பயனால் மும்மலங்களாகிய இருளை நீக்கி விட்டால் முதன் முதலில் இறைவனிடமிருந்து பிரிந்து வந்து பிறவி எடுப்பதற்கு மூல காரணமாக இருக்கின்ற ஆசைகள் நீங்கப் பெற்று இனி பிறவியே இல்லாத நிலையை அடையலாம்.

பாடல் #1461

பாடல் #1461: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

எழுத்தோடு பாடலு மெண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியு நீங்கார்
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலை செய்யும் வகையுணர்ந் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எழுததொடு பாடலு மெணணெண கலையும
பழிததலைப பாசப பிறவியு நீஙகார
வழிததலைச சொமனொ டஙகி யருககன
வழிததலை செயயும வகையுணரந தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எழுத்தோடு பாடலும் எண் எண் கலையும்
பழி தலை பாச பிறவியும் நீங்கார்
வழி தலை சோமனோடு அங்கி அருக்கன்
வழி தலை செய்யும் வகை உணர்ந்தேனே.

பதப்பொருள்:

எழுத்தோடு (எழுதப் பட்ட எழுத்துக்களும்) பாடலும் (அவற்றோடு சேர்ந்து பாடுகின்ற பாடல்களும் இவற்றை கொண்டு இருக்கும்) எண் (எட்டும்) எண் (எட்டும்) கலையும் (பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு கலைகளும் ஆகியவற்றால்)
பழி (இறைவனை அடையாமல் வாழ்க்கையை வீணடிக்கின்ற பழிக்கு) தலை (தலைமையாக இருக்கின்ற) பாச (பாசத்தையும்) பிறவியும் (அதனால் எடுக்கின்ற பிறவிகளையும்) நீங்கார் (ஒருவர் நீக்கி விட முடியாது)
வழி (பாசத்தையும் பிறவியையும் நீக்குகின்ற வழிக்கு) தலை (தலைமையாக இருக்கின்ற) சோமனோடு (சந்திர கலையோடு) அங்கி (அக்கினி கலையையும்) அருக்கன் (சூரிய கலையையும்)
வழி (சேர்த்து பயன்படுத்துகின்ற வழிமுறைக்கு) தலை (தலைமையாக இருக்கின்ற) செய்யும் (அசையாத மனதுடன் செய்கின்ற யோகத்தின்) வகை (வகைகளை) உணர்ந்தேனே (எமக்குள் செய்த யோகத்தினால் உணர்ந்து கொண்டோம்).

விளக்கம்:

பாடல் #1457 இல் உள்ளபடி அசையாத மனதுடன் செய்யாமல் அலைகின்ற மனதுடன் செய்யப்படுகின்ற எழுதப் பட்ட எழுத்துக்களும் அவற்றோடு சேர்ந்து பாடுகின்ற பாடல்களும் இவற்றை கொண்டு இருக்கும் அறுபத்து நான்கு கலைகளும் ஆகியவற்றால் இறைவனை அடையாமல் வாழ்க்கையை வீணடிக்கின்ற பழிக்கு தலைமையாக இருக்கின்ற பாசத்தையும் அதனால் எடுக்கின்ற பிறவிகளையும் ஒருவரால் நீக்கி விட முடியாது. பாசத்தையும் பிறவியையும் நீக்குகின்ற வழிக்கு தலைமையாக இருக்கின்ற சந்திர கலையோடு அக்கினி கலையையும் சூரிய கலையையும் சேர்த்து பயன்படுத்துகின்ற வழிமுறைக்கு தலைமையாக இருக்கின்ற யோகத்தை அசையாத மனதுடன் செய்கின்ற வகைகளை எமக்குள் செய்த யோகத்தினால் யாம் உணர்ந்து கொண்டோம்.

குறிப்பு: பாசமும் பிறவிகளும் நீங்கி இறைவனை அடைவதற்கு எந்த முறையை பயன்படுத்தினாலும் அதில் அசையாத மனதுடன் செய்தால் மட்டுமே அடைய முடியும்.

பாடல் #1462

பாடல் #1462: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

விரும்பிநின் றேசெய்யில் மெய்த்த வராகும்
விரும்பிநின் றேசெய்யில் மெய்யுணர் வாகும்
விரும்பிநின் றேசெய்யில் மெய்த்த வமாகும்
விரும்பிநின் றேசெய்யில் விண்ணவ னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விருமபிநின றெசெயயில மெயதத வராகும
விருமபிநின றெசெயயில மெயயுணர வாகும
விருமபிநின றெசெயயில மெயதத வமாகும
விருமபிநின றெசெயயில விணணவ னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விரும்பி நின்றே செய்யில் மெய் தவர் ஆகும்
விரும்பி நின்றே செய்யில் மெய் உணர்வு ஆகும்
விரும்பி நின்றே செய்யில் மெய் தவம் ஆகும்
விரும்பி நின்றே செய்யில் விண்ணவன் ஆகுமே.

பதப்பொருள்:

விரும்பி (இறைவனை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில்) நின்றே (அசையாத மனதுடன் நின்று) செய்யில் (செய்கின்றவர்களே) மெய் (உண்மையான) தவர் (தவத்தை புரிகின்றவர்கள்) ஆகும் (ஆவார்கள்)
விரும்பி (இறைவனை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில்) நின்றே (அசையாத மனதுடன் நின்று) செய்யில் (செய்தால் கிடைக்கப் பெறுவதே) மெய் (மாயை நீங்கிய உண்மையான) உணர்வு (உணர்வு நிலை) ஆகும் (ஆகும்)
விரும்பி (இறைவனை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில்) நின்றே (அசையாத மனதுடன் நின்று) செய்யில் (செய்வதே) மெய் (உண்மையான) தவம் (தவ முறை) ஆகும் (ஆகும்)
விரும்பி (இறைவனை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில்) நின்றே (அசையாத மனதுடன் நின்று) செய்யில் (செய்கின்றவர்கள்) விண்ணவன் (விண்ணுலகத் தேவர்கள்) ஆகுமே (ஆவார்கள்).

விளக்கம்:

பாடல் #1461 இல் உள்ளபடி எழுத்துக்களும் பாடல்களும் அவை அடங்கிய அறுபத்து நான்கு கலைகளும் ஆகிய எதை செய்தாலும் இறைவனை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில் அசையாத மனதுடன் நின்று செய்கின்றவர்களே உண்மையான தவத்தை புரிகின்றவர்கள் ஆவார்கள். அந்த செயலால் கிடைக்கப் பெறுவதே மாயை நீங்கிய உண்மையான உணர்வு நிலை ஆகும். அப்படி அசையாத மனதுடன் செய்வதே உண்மையான தவ முறை ஆகும். அந்த தவத்தை முறையாக செய்கின்றவர்கள் விண்ணுலகத் தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

பாடல் #1463

பாடல் #1463: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

பேணிப் பிறவா வுலகருள் செய்திடுங்
காணிற் றனது கலவியு ளேநிற்கு
நாணில் நரக நெறிக்கே வழிசெய்யு
மூனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெணிப பிறவா வுலகருள செயதிடுங
காணிற றனது கலவியு ளெநிறகு
நாணில நரக நெறிககெ வழிசெயயு
மூனிற சுடுமஙகி யுததமன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேணி பிறவா உலகு அருள் செய்திடும்
காணில் தனது கலவி உளே நிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழி செய்யும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.

பதப்பொருள்:

பேணி (யோகத்தை அசையாத மனதுடன் இடைவிடாது முறைப்படி கடைபிடித்து வந்தால்) பிறவா (இனி பிறவி எடுக்காத நிலையை) உலகு (இந்த உலகத்திலேயே) அருள் (இறையருள்) செய்திடும் (கொடுத்து விடும்)
காணில் (அந்த இறை சக்தியை தமக்குள் தரிசித்தால்) தனது (தம்முடைய ஆன்மாவோடு) கலவி (ஒன்றாக கலந்து) உளே (உள்ளே) நிற்கும் (வீற்றிருக்கும் அந்த சக்தியை அறிந்து கொள்ளலாம்)
நாணில் (அப்படி இறையோடு கலந்து இருக்கின்ற நிலையில் இருப்பதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு விலகி நின்றால்) நரக (மனமானது ஐம்புலன்களின் வழியே) நெறிக்கே (ஆசைகளின் பின்னால் செல்லுகின்ற தவறான) வழி (வழியையே) செய்யும் (கொடுக்கும்)
ஊனில் (இறையோடு கலந்து இருக்கின்ற நிலையிலேயே வெட்கப் படாமல் தொடர்ந்து இருந்தால் உடலுக்குள்) சுடும் (இருக்கின்ற மலங்களை சுட்டெரிக்கின்ற) அங்கி (மூலாக்கினியாக) உத்தமன் (இருக்கின்ற உத்தமனாகிய இறைவனாகவே) தானே (தாமும் ஆகிவிடுவார்கள்).

விளக்கம்:

யோகத்தை அசையாத மனதுடன் இடைவிடாது முறைப்படி கடைபிடித்து வந்தால் இனி பிறவி எடுக்காத நிலையை இந்த உலகத்திலேயே இறையருள் கொடுத்து விடும். அந்த இறை சக்தியை தமக்குள் தரிசித்தால் தம்முடைய ஆன்மாவோடு ஒன்றாக கலந்து உள்ளே வீற்றிருக்கும் அந்த சக்தியை அறிந்து கொள்ளலாம். அப்படி இறையோடு கலந்து இருக்கின்ற நிலையில் இருப்பதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு விலகி நின்றால் மனமானது ஐம்புலன்களின் வழியே ஆசைகளின் பின்னால் செல்லுகின்ற தவறான வழியையே கொடுக்கும். இறையோடு கலந்து இருக்கின்ற நிலையிலேயே வெட்கப் படாமல் தொடர்ந்து இருந்தால் உடலுக்குள் இருக்கின்ற மலங்களை சுட்டெரிக்கின்ற மூலாக்கினியாக இருக்கின்ற உத்தமனாகிய இறைவனாகவே தாமும் ஆகிவிடுவார்கள்.

பாடல் #1464

பாடல் #1464: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

ஒத்தசெங் கோலா ருலப்பிலி மாதவ
ரெத்தனை யாயிரம் வீழ்ந்ததென் றெண்ணிலீர்
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையா
யத்த னிவனென்றே யன்புறு வார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒததசெங கொலா ருலபபிலி மாதவ
ரெததனை யாயிரம வீழநததென றெணணிலீர
சிததரகள தெவரகள மூவர பெருமையா
யதத னிவனெனறெ யனபுறு வாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒத்த செங் கோலார் உலப்பு இலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தது என்று எண் இலீர்
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன் என்றே அன்பு உறுவார்களே.

பதப்பொருள்:

ஒத்த (ஒன்றாக இருக்கும்) செங் (செம்மையான) கோலார் (கோலைப் போல வீற்றிருந்து) உலப்பு (அழிவு) இலி (இல்லாத) மாதவர் (மாபெரும் தவத்தை புரிந்தவர்களில்)
எத்தனை (எத்தனையோ) ஆயிரம் (ஆயிரம் பேர்கள் அதை தொடராமல் விட்டு விட்டதால்) வீழ்ந்தது (வீழ்ந்து போனவர்கள்) என்று (என்று) எண் (எண்ணிக்கை) இலீர் (இல்லாமல் இருக்கின்றார்கள்)
சித்தர்கள் (அப்படி விட்டு விடாமல் தொடர்ந்து மாபெரும் தவத்தை புரிகின்றவர்களை சித்தர்களும்) தேவர்கள் (தேவர்களும்) மூவர் (மும்மூர்த்திகளும்) பெருமையாய் (பெருமையுடன்)
அத்தன் (எங்களின் அப்பனான இறைவன்) இவன் (இவனே) என்றே (என்று கூறி) அன்பு (அவரோடு அன்பு) உறுவார்களே (கொண்டு இருப்பார்கள்).

விளக்கம்:

ஒன்றாக இருக்கும் செம்மையான கோலைப் போல வீற்றிருந்து அழிவு இல்லாத மாபெரும் தவத்தை புரிந்தவர்களில் எத்தனையோ ஆயிரம் பேர்கள் அதை தொடராமல் விட்டு விட்டதால் வீழ்ந்து போனவர்கள் என்று எண்ணிக்கை இல்லாமல் இருக்கின்றார்கள். அப்படி விட்டு விடாமல் தொடர்ந்து மாபெரும் தவத்தை புரிகின்றவர்களை சித்தர்களும் தேவர்களும் மும்மூர்த்திகளும் பெருமையுடன் எங்களின் அப்பனான இறைவன் இவனே என்று கூறி அவரோடு அன்பு கொண்டு இருப்பார்கள்.

பாடல் #1465

பாடல் #1465: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

யோகிக்கும் யோகாதி மூன்றுள தொன்றுற்றோ
ராகத் தகுகிரி யாதி சரிதாதி
யாகத்தை விட்ட சரிதை யொன்றொன்றுள
வாகித்தன் பத்தியு ளன்புவைத் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகிககும யொகாதி மூனறுள தொனறுறறொ
ராகத தகுகிரி யாதி சரிதாதி
யாகததை விடட சரிதை யொனறொனறுள
வாகிததன பததியு ளனபுவைத தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோகிக்கும் யோக ஆதி மூன்று உளது ஒன்று உற்றோர்
ஆக தகு கிரியை ஆதி சரிதை ஆதி
யாகத்தை விட்ட சரிதை ஒன்று ஒன்று உள
ஆகி தன் பத்தி உள் அன்பு வைத்தேனே.

பதப்பொருள்:

யோகிக்கும் (யோகத்தை புரிகின்ற யோகிக்கும்) யோக (யோக நெறிமுறைக்கும்) ஆதி (மூலமாக இருக்கின்ற) மூன்று (மூன்று விதமான வழிமுறைகள்) உளது (உள்ளது) ஒன்று (இவற்றோடு ஒன்றி) உற்றோர் (யோக முறையை கடை பிடிக்கின்ற யோகியர்கள்)
ஆக (யோகியாக ஆகுவதற்கு) தகு (தகுந்த) கிரியை (கிரியைகள்) ஆதி (மற்றும் அவற்றின் மூல முறைகள்) சரிதை (சரியைகள்) ஆதி (மற்றும் அவற்றின் மூல முறைகள்)
யாகத்தை (யாகம் செய்வதை) விட்ட (தவிர மற்ற அனைத்து செயல்களும்) சரிதை (அடங்கிய சரியை முறைகள்) ஒன்று (என்று ஒன்றும்) ஒன்று (ஒன்றும் ஆக) உள (உள்ள மூன்று விதமான முறைகளையும்)
ஆகி (தமக்கு ஏற்ற வழிமுறைகளாக எடுத்துக் கொண்டு அதன் வழியே புரிகின்ற யோகத்தில்) தன் (தாம் கொண்ட) பத்தி (பக்திக்கு) உள் (உள்ளேயே) அன்பு (இறைவன் மேல் உண்மையான அன்பை) வைத்தேனே (வைத்து இருப்பார்கள்).

விளக்கம்:

யோகத்தை புரிகின்ற யோகிக்கும் யோக நெறிமுறைக்கும் மூலமாக இருக்கின்ற மூன்று விதமான வழிமுறைகள் உள்ளது. இவற்றோடு ஒன்றி யோக முறையை கடை பிடிக்கின்ற யோகியர்கள் யோகியாக ஆகுவதற்கு தகுந்த கிரியைகள் மற்றும் அவற்றின் மூல முறைகள் சரியைகள் மற்றும் அவற்றின் மூல முறைகள் யாகம் செய்வதை தவிர மற்ற அனைத்து செயல்களும் அடங்கிய சரியை முறைகள் என்று ஒவ்வொன்றாக உள்ள மூன்று விதமான முறைகளையும் தமக்கு ஏற்ற வழிமுறைகளாக எடுத்துக் கொண்டு அதன் வழியே புரிகின்ற யோகத்தில் தாம் கொண்ட பக்திக்கு உள்ளேயே இறைவன் மேல் உண்மையான அன்பை வைத்து இருப்பார்கள்.

பாடல் #1466

பாடல் #1466: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

யோகச் சமையமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே யட்டாங்க யோகமாம்
யோக நிர்வாணமே யுற்ற பரோதையம்
யோக பிடேகமே யொண்சத்தி யுற்றலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகச சமையமெ யொகம பலவுனனல
யொக விசெடமெ யடடாஙக யொகமாம
யொக நிரவாணமெ யுறற பரொதையம
யொக பிடெகமெ யொணசததி யுறறலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோக சமையமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரா உதயம்
யோக அபிடேகமே ஒண் சத்தி உற்றலே.

பதப்பொருள்:

யோக (யோகத்தில்) சமையமே (சமயம் எனப்படுகின்ற சரியை என்பது) யோகம் (யோகத்தில் உள்ள) பல (பல விதமான நெறிமுறைகளை) உன்னல் (உள் வாங்கிக் கொண்டு அதை தவறாமல் கடைபிடித்தல் ஆகும்)
யோக (யோகத்தில்) விசேடமே (விசேடம் எனப்படுகின்ற கிரியை என்பது) அட்ட (எட்டு) அங்க (அங்கங்களைக் கொண்டு இருக்கின்ற) யோகம் (அட்டாங்க யோகம்) ஆம் (ஆகும்)
யோக (யோகத்தில்) நிர்வாணமே (நிர்வாணம் எனப்படுகின்ற யோகம் என்பது) உற்ற (தமக்கு கிடைக்கப் பெற்ற) பரா (அசையாத மனதோடு எண்ணங்கள் அற்ற) உதயம் (நிலை தோன்றுவது ஆகும்)
யோக (யோகத்தில்) அபிடேகமே (அபிடேகம் எனப்படுகின்ற ஞானம் என்பது) ஒண் (தம்மோடு ஒன்றாக கலந்து இருக்கின்ற) சத்தி (இறை சக்தியை) உற்றலே (உணர்வது ஆகும்).

விளக்கம்:

யோகத்தில் சமயம் எனப்படுகின்ற சரியை என்பது யோகத்தில் உள்ள பல விதமான நெறிமுறைகளை உள் வாங்கிக் கொண்டு அதை தவறாமல் கடைபிடித்தல் ஆகும். யோகத்தில் விசேடம் எனப்படுகின்ற கிரியை என்பது எட்டு அங்கங்களைக் கொண்டு இருக்கின்ற அட்டாங்க யோகம் ஆகும். யோகத்தில் நிர்வாணம் எனப்படுகின்ற யோகம் என்பது தமக்கு கிடைக்கப் பெற்ற அசையாத மனதோடு எண்ணங்கள் அற்ற நிலை தோன்றுவது ஆகும். யோகத்தில் அபிடேகம் எனப்படுகின்ற ஞானம் என்பது தம்மோடு ஒன்றாக கலந்து இருக்கின்ற இறை சக்தியை உணர்வது ஆகும்.