பாடல் #549: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)
உரைத்தன வற்கரி ஒன்று மூடிய நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப் பிரைச்சதம் எட்டையும் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.
விளக்கம்:
குருநாதராகிய சிவபெருமான் அட்டங்க யோகத்தை அருளத் திருவுள்ளங் கொண்டு தீமையைப் போக்குவதற்கும் (இயமம்) நன்மையைப் பெறுவதற்கும் (நியமம்) வழிவகை செய்தருளி பிராணாயாமம் மூலம் மூச்சுக் காற்றை இழுக்கவும் அடக்கி வைக்கவும் விடவும் வேண்டிய அளவு பன்னிரண்டங்குலம் முதலான பலவகைகளை முறைப்படுத்தி அவற்றை எட்டு அங்கங்களைக் கொண்ட யோகங்களாக அமைத்து அருளினான்.
கலை ஞானத்தில் சிறந்து இறைவனை அடையக்கூடிய அருமையை உணர்ந்தவர்கள் ஒரு நொடிப் பொழுதும் இறைவனை மறக்காமல் இருப்பதின் பயனால் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரைசேரும் பெருமையை உடையவர்கள், இறைவனைத் தனக்குள்ளே உணர்ந்து அதிலேயே ஆழ்ந்து அவனது திருவருளைப் பெற்றவர்கள் ஆகியவர்களோடு யாமும் சேர்ந்து இருக்கின்றோம்.
உள்கருத்து: 64 கலைகள் உள்ளது. அதில் ஏதேனும் ஒன்றோ பலவோ கற்று அதில் ஞானம் அடைந்தவர்கள். பக்தி மார்கத்தின் மூலமாக இறைவனை ஒரு நொடிப்பொழுதும் மறக்காமல் இருப்பவர்கள். யோக மார்கத்தின் மூலமாக இறைவனை தனக்குள் உணர்ந்தவர்களுடன் யாம் துணையாக இருக்கன்றோம் என்று அருளுகின்றார்.
அனைத்தையும் தனக்குள் உடைய இறைவனின் அடியவர்களான பெரியோர்களுக்கு அடியவர்களாகி தேவலோகப் படைகளை உடைய ஒளி உடம்போடு இருக்கும் சிவபெருமானின் திருக்கயிலாயத்திற்குச் செல்லுபவர்களை அங்கே வாயிற் காவலர்களாக இருக்கும் சிவகணங்கள் கண்டு இறைவனிடம் கூற அனைத்தும் அறிந்த இறைவன் உமக்கு அபயம் உள்ளே வருக என்று அருள் புரிந்தார்.
இறைவனின் அடியவர்கள் உலகத்தில் இருக்கும் மன்னர்களை பொய்யாக புகழாமல் கயிறு போல திரித்து விரிந்த சடையைக் கொண்டு வீற்றிருக்கும் எம் தந்தையான இறைவனை உண்மையான பக்தியோடு புகழ்ந்து அவரின் பொன்னான திருவடிகளை சேருவார்கள். இறைவனை வெறும் வார்த்தைகளால் போற்றி வணங்காமல் உண்மையான பக்தியோடு உள்ளம் உருக வேண்டினால் அந்த இறைவனின் அடியவர்களின் துணையைப்பெற்று அவர்களின் வழிசென்று இறைவனை அடையலாம்.
19-4-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: மோட்ச நிலைகள் என்பது என்ன?
பலரும் மோட்சம் என்பதைப் பலவகையில் சிந்தனை செய்கின்றனர். உதாரணமாக மோட்சத்தின் விளக்கத்தை ஒருவர் கூறும்போது கேட்டோம். மோட்சம் என்பது சொர்க்கவாசம் என்றும் அங்கு பேரானந்தம் காண்போம் என்றும் வேண்டியது கிடைக்கும் என்றும் ஓர் விளக்கத்தைக் கேட்டு வியப்படைந்தோம். இது குழந்தைகள் கூறுவது போல் எமக்குத் தோன்றியது. மற்றொருவர் மோட்சம் என்றால் பிறவி இல்லாமல் சொர்க்கவாசம் பிறவி இல்லாமை தெய்வ நிலை என்று கூறினார். இதுவும் தவறானது. உண்மையான மோட்ச நிலை என்னவென்றால் இதற்கு ஆங்கில வார்த்தையை யாம் உபயோகித்தல் வேண்டும். மோட்சம் என்பதற்கு எளிதாக யாம் கூறும் ஆங்கில வார்த்தை LIBERATION என்பதாகும். இதற்குச் சரியான தமிழாக்கம் விடுதலை என்கின்றதாகும். விடுதலை என்றால் எதிலிருந்து விடுபடுதல் என்று சிந்தித்தல் வேண்டும். விடுதலை என்றால் பொதுவாக உடலில் இருந்து விடுதலை பெறுதல் வேண்டும் என்கிற தவறான தத்துவம் உண்டு. உடலில் இருந்து விடுதலை கண்ட போதிலும் இந்த ஜென்மத்தில் கொண்ட ஆசாபாசங்களினால் மறு பிறவி எடுத்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. அப்பொழுது உடலில் இருந்து விடுபடுதல் மோட்சம் அல்ல.
மோட்சம் என்பது இந்த ஜென்மத்தில் தத்தளிக்கும் காரணங்களை நீக்குதல் வேண்டும் என்பதாகும். இவை யாவை என்றால் முதன்மையில் ஆசாபாசங்களாகும். இரண்டாவது பற்றுதல் (ஆசை) ஆகும். பற்றுதல் நீங்கிடவே மற்ற அனைத்தும் குறையும். சிந்தித்தோம் என்றால் நாம் பிறவி எடுத்தல் வேண்டும் ஏனெனில் இவையாவும் அனுபவித்தல் வேண்டும். இவ்வாறு விட்ட குறையும் நீக்குதல் வேண்டும் என்றெல்லாம் மானிடர்கள் எண்ணுவதுண்டு. இவை யாவும் மோட்ச நிலை அளிப்பதில்லை. யாதும் வேண்டாம் என்கின்றது மட்டும் மோட்ச நிலையை அளிக்குமா என்றால் அதுவும் இல்லை என்பதே எமது கருத்தாகின்றது. ஆத்மாவிற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நன்கு உணர்ந்தால் அதுவே மோட்சநிலை அளிக்கும் என்பது பொது கருத்தாகின்றது. ஆத்மாவிற்கும் நமக்கும் என்ன தொடர்பு என சிந்தித்து ஆழ்நிலை சென்று விட்டால் நம் ஆத்மாவே நாம் என்கிற ஒரு விளக்கம் கிடைக்கும். அகம் பிரம்மாஸ்மி என்கின்ற முழு விளக்கம் கிடைக்கும். இது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது கிரியைகள் செய்வது வேள்விகள் செய்வதினால் அனைத்தும் கிடைக்கப் போவதில்லை. ஆத்ம விசாரம் (நான் யார்) என்பது செய்தல் வேண்டும். இவ்விதம் செய்து வர ஆத்மாவுடன் ஒன்றிப் போகும். அதுவே உண்மையான விடுதலை. அத்தகைய நிலை நமக்குக் கிட்டினால் மோட்ச நிலை அடைந்தோம் என எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவ்வினாடி முதல் நமக்குப் பிறவியில்லா பெரும் வழி கிடைக்கும் என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.
3-6-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்
தேவையின்றி காரணமில்லாமல் பலர் சினம் (கோபம்) கொள்கின்றனர், இச்சினத்திற்கு காரணத்தை தேடினால் காரணமானது எதிர்பார்ப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோபம் பொங்குகிறது, தீர்வு கிடைக்காவிட்டால் ஏசுவதே (திட்டுவதே) நல்ல பொழுது போக்காகின்றது. இவையாவும் எதிர்பார்ப்புகளின் விளைவுகளே இதனை திருத்திட முயற்சிகள் வேண்டும். பணப்பையை விட்டுவிட்டால் எவருக்கேனும் உதவும். கோபத்தை விட்டுவிட்டால் எவருக்கும் உதவாது. இந்நிலையில் கோபத்தினால் பலப்பல வாய்ப்புகள் இழந்து நிற்கும் சூழ்நிலை உருவாகும்.
இந்த கோபத்தை நீக்காவிடில் மன அமைதி குறையும் என்பது மட்டுமல்லாமல் மன அமைதியோடு இறை நாட்டமும் குறையும் என்பது விதியாகும். ஏனெனில் அசையாமல் அளந்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் இரண்டு சிறு கற்கள் விழுந்தால் அந்த தண்ணீர் மொத்தமாக கலைந்து விடுகிறது. அந்த தண்ணீரின் அளவையும் காணமுடியாது என்பது பொது அறிவாகும். இத்தகைய நிலையில் கோபப்படுகின்றவர்கள் எமது வேண்டுகோளாக கோபத்தை குறைப்பீர்களாக மற்றவர்களை தீட்டுவதால் உங்களின் கர்ம நிலை ஏறுகிறது என்பது மட்டுமல்லாமல் மன நிம்மதியும் இழந்து விடுகின்றீர்கள். வாய்ப்புகள் சென்று விடுகிறது. கோபத்தின் விளைவாக அகங்காரம் அதிகமாகின்றது. ஆதலால் கோபத்தை உறுதியாக தவிர்த்தல் வேண்டும் அன்பர்களே.
தேவர்களின் தலைவனான சிவபெருமானை உணர்ந்த பெரியோர்களைத் தேடிச் சென்று அவர்களோடு இணைந்து இருப்பவர்கள் சிவதத்துவத்தைப் பெறுவார்கள். இறைவனை அடையத் தாம் எடுத்துக் கொண்ட நெறியிலிருந்து மாறாமல் நின்று அருள் செய்யும் பெரியாரோடு சேர்ந்திருப்பதே பேரின்பமாகும்.
மனமே நீ வருத்தப்படும் காலங்களில் படர்வதற்குப் பிடிமானம் இல்லாத செடிபோல வாடினாலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தது இல்லை. இப்படித் தனியாக வருத்தப்பட்டு என்ன செய்யப் போகின்றாய்? இறைவனை நோக்கி யாம் செல்லும்போது எம்மோடு வந்து உன் துன்பங்கள் போவதைக் காண்பாயாக.
ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப உடலிலும் உள்ளத்திலும் பலவகையில் இன்பங்களையும் துன்பங்களையும் கொடுத்து பக்குவம் செய்யும் சிவபெருமான் பொறுமையுடன் தவமிருப்பவர்களின் மூலாதாரத்தில் இருந்து திருக்கூத்து ஆடுவதின் பயனால் அவர்களின் மனம் இறைவனுடன் ஒன்றுபட்டு நிற்கும்.