ஒரு பக்க காலை எடுத்து மறு பக்க காலின் மேல் அணைத்து வைத்து அது போலவே இன்னொரு பக்க காலையும் செய்து அமர்ந்து அழகாக கைகள் இரண்டையும் மேல் நோக்கி மலர்த்தி இரு தொடைகளின் மேல் வைத்து அமர்ந்திருப்பதே உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.
பாடலில் உள்ளவாறு பத்மாசனம் செய்யும் முறை:
முதுகை நேராக வைத்துத் தரையில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
இடது காலை மடக்கி இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைக்கவும்.
வலது காலை மடக்கி வலது பாதத்தை இடது தொடையின் மேல் வைக்கவும்.
இரண்டு கைகளையும் நேராக நீட்டி இரண்டு கால்களின் மடங்கிய முட்டியின் மேல் வைக்கவும்.
உள்ளங்கைகள் இரண்டையும் மேல் நோக்கித் திருப்பி ஆட்காட்டி விரலை மடக்கி கட்டை விரலால் பிடித்துக்கொள்ளவும்.
பத்மாசனம் முதல் பல ஆசனங்கள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசனங்கள் முக்கியமானவை ஆகும். அந்த எட்டில் முதலானது சுவத்திகாசனம் ஆகும் (இதை சுகாசனம் என்றும் கூறுவர்). இதைத் தவறாமல் தினம் செய்து உணர்ந்து இருப்பவர் எட்டு ஆசனங்களின் தலைவராவார்.
தவம் செய்தல், 2. ஜெபித்தல், 3. பேரின்பம் அடைதல், 4. தெய்வ நம்பிக்கையோடிருத்தல், 5. தானம் செய்தல், 6. சிவ விரதம் கடைபிடித்தல், 7. ஞானத்தைப் பற்றிய உண்மையைக் கேட்டறிதல், 8. யாகம் செய்தல், 9. சிவ பூஜை செய்தல், 10. எண்ணத்தையும் இறைவனையும் இரண்டறக் கலத்தல் ஆகிய பத்தையும் உணர்ந்து பிறருக்குக் அறியக் கூறவும் செய்பவனே நியமத்தின் வழி நடப்பவனாவான்.
தூய்மையாக இருத்தல் 2. இறையருளோடு இருத்தல் 3. அளவான உணவு 4. பொறுமையோடு இருத்தல் 5. நேர்மையுடன் இருத்தல் 6. பொய் பேசாது சத்தியத்தைக் கடைபிடித்தல் 7. சத்தியத்திற்காக வைராக்கியத்தை வளர்த்தல், 8. காமத்தை எண்ணாதிருத்தல் 9. களவு (திருடு) எண்ணாமலிருத்தல் 10. கொலை எண்ணாமலிருத்தல் ஆகிய பத்து குணங்களையும் கொண்டவரே நியமத்தின் வழியின்படி இருப்பவர்.
ஆதியை வேதத்தின் அகப்பொரு ளானைச் சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன் நீதியை உணர்ந்து நியமத்த னாமே.
விளக்கம்:
ஆதியாய் முதற் பொருளானவனை, வேதத்தின் பொருளாக உள்ளவனை, அக்கினி சொரூபமானவனை, அக்கினியின் வெப்பமானவனை, திருமேனியில் சரிபாதியாக பராசத்தியோடு இருக்கும் இறைவனை உணர்ந்து சத்தியத்தை கடைபிடிப்பவனே நியமத்தைக் கடைபிடிப்பவன் ஆவான்.
எவருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்காதவன், பொய் கூறாதவன், களவு (திருடு) செய்யாதவன், எட்டு குணங்களை கொண்டவன் (1. அன்பு, 2. அமைதி, 3. பொறாமையின்மை, 4. சுத்தமாக இருத்தல், 5. மனதினால் சிரமப்படாமல் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளுதல், 6. ஆனந்தத்தைக் கொடுப்பது, 7. தர்ம சிந்தனை, 8. ஆசையின்மை), நன்மை மட்டுமே நினைப்பவன், பணிவுடையவன், நீதி தவறாமல் இருக்கக் கூடியவன், பகிர்ந்து கொடுத்து உண்பவன், குற்றம் இல்லாதவன், கள், காமம் இல்லாத தன்மையுடையவன், ஆகிய இவர்கள் இயம ஒழுக்கத்தின்படி இருப்பவர்கள் ஆவார்கள்.
பவளம் போல் ஜொலிக்கும் குளிர்ந்த சடையுடைய இறைவனை முழுமையாக உணர்ந்த சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும் எட்டுத்திசையிலும் சூழ்ந்து மூழ்கும் அளவிற்கு பெருமழை பெய்தாலும் செழுமையான குளிர்ந்த இயமங்களை (பாடல் #552 இல் இயமத்தின் விளக்கம் காண்க) தவறாமல் செய்யுங்கள் என்று இறைவன் கூறினார்.
பாடல் #552: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)
இமயம், நியமம், மற்றும் பலவகையான ஆசனங்களும், நன்மையைத் தரும் பிராணாயாமமும், பிரத்தியாகாரம், வெற்றி மிக்க தாரணையும், தியானமும், சமாதியும், ஆகிய எட்டுவகைப் பகுதிகளைக் கொண்ட அட்டாங்க யோக வழி முறைகள் நல்வினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் நல்வழியாகும்.
எட்டுப் பகுதிகளைக் கொண்ட அட்டாங்க யோகத்தின் விளக்கம்:
முதலாவது இயமம்: தீமைகளைப் போக்குவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:
மனதாலும், பேச்சாலும், செயலினாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமை.
மனதாலும், பேச்சாலும், செயலினாலும் பிறர் பொருளைக் களவாடாமை.
மனதாலும், பேச்சாலும், செயலினாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்.
பிறர் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளாமை. (ஆசைப் படாமலிருத்தல்)
இதனைக் கடைபிடித்தால் நம்மிடமுள்ள அனைத்து தீமைகளும் விலகும்.
இரண்டாவது நியமம்: நன்மைகளைப் பெறுவது. தவம், ஜபம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, தானம், சிவ விரதம், சித்தாந்தக் கேள்வி, சிவ பூசை, ஞான அறிவு, நாணம், ஆகிய பத்துக் காரியங்களையும் தவறாது மேற்கொள்ளுதல் நியமம் ஆகும். இவற்றை மேற்கொள்ளும்போது ஒளியாகிய சிவத்தையும் அந்த ஒளியின் ஆற்றலாகிய சத்தியை தியானித்தலும் நியமம் ஆகும்.
மூன்றாவது ஆசனம்: உடலை அமர்த்தும் நிலை. இடுப்பு, தோள்கள், தலை இவற்றை நேராக வைத்து, முதுகுத் தண்டுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அதற்கு விடுதலை அளித்தல்.
நான்காவது பிராணாயாமம்: மூச்சைச் சரிவர அடக்கியாளுதல் (பிராணன் என்னும் உயிர்ச் சக்தியை அடக்கியாள்வது)
ஐந்தாவது பிரத்தியாகாரம்: மனதை வெளியே புலன்கள் வழி செல்லாது தடுத்து (கண்கள் வழியே தவறானவற்றைப் பார்க்காமலும், காது வழியே தவறானவற்றைக் கேட்காமலும், வாய் வழியாகத் தவறான வார்த்தைகளைப் பேசாமலும், நாக்கின் மூலம் பாதகமான உணவுகளை ருசிக்காமலும், உடல் வழியே தவறானவற்றைச் செய்யாமலும்), மனதை உள்முகமாகத் திருப்பி மனதில் உள்ள அரும்பொருளை அறியச் சிந்தித்தல்.
ஆறாவது தாரணை: ஒரு பொருளின் மீது மனத்தைக் குவித்தல். தன்னைத்தானே உணர்வது.
ஏழாவது தியானம்: மனதை ஒருமுகப்படுத்தி இடைவிடாது சிந்தித்தல்.
எட்டாவது சமாதி: நமது முயற்சிகள் அனைத்திற்கும் குறிக்கோளான ஞான ஒளியைப் பெறுதல். கடவுளை அடைய விரும்புகின்றவன் உடலாலும், மனத்தாலும், அறத்தாலும் (நற்குணங்களாலும்), ஞானத்தாலும் வலிமை பெற்று இருக்க வேண்டுவது.
பாடல் #551: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)
இறைவனை அடைய நாம் செல்லும் வழி நன்றானதா இல்லை வேறு வழி நன்றானதா என்று சந்தேகப் படாமல் எந்த வழிக்கும் தேவைப்படுகின்ற அட்டாங்க யோகங்களின் வழியிலே சென்று சமாதி நிலையில் (இறைவனை நினைத்து தன்னை மறந்திருக்கும் நிலை) இருங்கள். இத்தகைய நல்ல வழியில் செல்பவர்களுக்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு அடைவது மட்டுமில்லாமல் அந்த ஞானத்தின் பயனாக இனிப் பிறவி என்பது இல்லை.
பாடல் #550: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)
செய்த இயம நியமஞ் சமாதிசென் றுய்யப் பராசத்தி உத்தர பூருவ மெய்த கவச நியாசங்கள் முத்திரை எய்தவே உரைசெய்வன் இந்நிலை தானே.
விளக்கம்:
உயிர்கள் தீயவற்றை போக்கி நன்மை தரக்கூடியவற்றே செய்து இறை நினைப்பில் தன்னையே மறந்து சமாதி நிலையை அடைந்து ஆதியிலிருந்தே பரம்பொருளாக இருக்கும் இறைவனை அடைவதற்கு துணையாக கவசம், நியாசம், முத்திரை ஆகிய மூன்று யோகங்கள் முன்னும் பின்னும் பாதுகாப்பாக உடன் வரும். இந்த உயர்ந்த நிலையை உயிர்கள் அடைய வேண்டும் என்பதற்காக இந்த யோக வழிகளைப் பற்றி யாம் கூறுவோம்.
கவசம் – சமாதி நிலையில் உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலை மூடியிருக்கும் கோசங்களை மந்திர ஜபம் செய்து அடக்கியாள்வது.
நியாசம் – தமது உடல் உறுப்புகளையே இறைவனது உறுப்புகளாக பாவனை செய்வது.
முத்திரை – கை விரல்கள் மூலம் முத்திரைகளை (யோக நிலை எண்ணங்களை கை விரல்கள் மூலம் அபிநயம் செய்து காட்டுதல்) செய்யும் யோக நிலை.