பாடல் #559

பாடல் #559: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.

விளக்கம்:

ஒரு பக்க காலை எடுத்து மறு பக்க காலின் மேல் அணைத்து வைத்து அது போலவே இன்னொரு பக்க காலையும் செய்து அமர்ந்து அழகாக கைகள் இரண்டையும் மேல் நோக்கி மலர்த்தி இரு தொடைகளின் மேல் வைத்து அமர்ந்திருப்பதே உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.

பாடலில் உள்ளவாறு பத்மாசனம் செய்யும் முறை:

  1. முதுகை நேராக வைத்துத் தரையில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
  2. இடது காலை மடக்கி இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைக்கவும்.
  3. வலது காலை மடக்கி வலது பாதத்தை இடது தொடையின் மேல் வைக்கவும்.
  4. இரண்டு கைகளையும் நேராக நீட்டி இரண்டு கால்களின் மடங்கிய முட்டியின் மேல் வைக்கவும்.
  5. உள்ளங்கைகள் இரண்டையும் மேல் நோக்கித் திருப்பி ஆட்காட்டி விரலை மடக்கி கட்டை விரலால் பிடித்துக்கொள்ளவும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.