அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #3

3-6-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

தேவையின்றி காரணமில்லாமல் பலர் சினம் (கோபம்) கொள்கின்றனர், இச்சினத்திற்கு காரணத்தை தேடினால் காரணமானது எதிர்பார்ப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோபம் பொங்குகிறது, தீர்வு கிடைக்காவிட்டால் ஏசுவதே (திட்டுவதே) நல்ல பொழுது போக்காகின்றது. இவையாவும் எதிர்பார்ப்புகளின் விளைவுகளே இதனை திருத்திட முயற்சிகள் வேண்டும். பணப்பையை விட்டுவிட்டால் எவருக்கேனும் உதவும். கோபத்தை விட்டுவிட்டால் எவருக்கும் உதவாது. இந்நிலையில் கோபத்தினால் பலப்பல வாய்ப்புகள் இழந்து நிற்கும் சூழ்நிலை உருவாகும்.

இந்த கோபத்தை நீக்காவிடில் மன அமைதி குறையும் என்பது மட்டுமல்லாமல் மன அமைதியோடு இறை நாட்டமும் குறையும் என்பது விதியாகும். ஏனெனில் அசையாமல் அளந்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் இரண்டு சிறு கற்கள் விழுந்தால் அந்த தண்ணீர் மொத்தமாக கலைந்து விடுகிறது. அந்த தண்ணீரின் அளவையும் காணமுடியாது என்பது பொது அறிவாகும். இத்தகைய நிலையில் கோபப்படுகின்றவர்கள் எமது வேண்டுகோளாக கோபத்தை குறைப்பீர்களாக மற்றவர்களை தீட்டுவதால் உங்களின் கர்ம நிலை ஏறுகிறது என்பது மட்டுமல்லாமல் மன நிம்மதியும் இழந்து விடுகின்றீர்கள். வாய்ப்புகள் சென்று விடுகிறது. கோபத்தின் விளைவாக அகங்காரம் அதிகமாகின்றது. ஆதலால் கோபத்தை உறுதியாக தவிர்த்தல் வேண்டும் அன்பர்களே.

பாடல் #545

பாடல் #545: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.

விளக்கம்:

தேவர்களின் தலைவனான சிவபெருமானை உணர்ந்த பெரியோர்களைத் தேடிச் சென்று அவர்களோடு இணைந்து இருப்பவர்கள் சிவதத்துவத்தைப் பெறுவார்கள். இறைவனை அடையத் தாம் எடுத்துக் கொண்ட நெறியிலிருந்து மாறாமல் நின்று அருள் செய்யும் பெரியாரோடு சேர்ந்திருப்பதே பேரின்பமாகும்.

பாடல் #544

பாடல் #544: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத்து என்னொடும் போதுகண் டாயே.

விளக்கம்:

மனமே நீ வருத்தப்படும் காலங்களில் படர்வதற்குப் பிடிமானம் இல்லாத செடிபோல வாடினாலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தது இல்லை. இப்படித் தனியாக வருத்தப்பட்டு என்ன செய்யப் போகின்றாய்? இறைவனை நோக்கி யாம் செல்லும்போது எம்மோடு வந்து உன் துன்பங்கள் போவதைக் காண்பாயாக.

பாடல் #543

பாடல் #543: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர்பி ரானொடுங்
கூடவல் லாரடியே கூடுவன் யானே.

விளக்கம்:

திருத்தலங்களில் யாத்திரை செய்பவர்களுடன் யானும் நடப்போம். இறைவனை பக்தியுடன் பாடக்கூடியவர்களின் பாடலைக் கேட்டு யானும் இன்புற்று இருப்போம். இறைவனைத் தனக்குள்ளே தேடி அடையக்கூடியவர்களுக்கு அருளுகின்ற மகாதேவனுடன் இணையக் கூடிய ஆற்றலுள்ள பெரியோர்களின் திருவடியோடு யானும் இணைந்து இருப்போம்.

உட்கருத்து: இறைவனை அடையக்கூடிய வழிகளில் செல்பவர்களுக்கு இறைவனே பெரியவராக உடன் இருந்து இறைவனை அடைய வழிகாட்டுவார்.

பாடல் #542

பாடல் #542: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யுங்
கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத விலயமுண் டாமே.

விளக்கம்:

ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப உடலிலும் உள்ளத்திலும் பலவகையில் இன்பங்களையும் துன்பங்களையும் கொடுத்து பக்குவம் செய்யும் சிவபெருமான் பொறுமையுடன் தவமிருப்பவர்களின் மூலாதாரத்தில் இருந்து திருக்கூத்து ஆடுவதின் பயனால் அவர்களின் மனம் இறைவனுடன் ஒன்றுபட்டு நிற்கும்.

பாடல் #541

பாடல் #541: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை வளைந்தருள் எட்டலு மாமே.

விளக்கம்:

உண்மை ஞானம் அடைந்தவர்கள் உலகத்தில் இருக்கும் உயிர்களுக்கு மன்னர்கள் ஆவார்கள். படைகள் எவ்வாறு மன்னரைச் சுற்றி நின்று கைகூப்பி வணங்குவார்களோ அதுபோல உண்மை ஞானம் அடைந்தவர்களை ஞானம் பெறவேண்டி பொறுமையுடன் வணங்கி நிற்பவர்கள் தேவர்களுக்குத் தலைவனும் உயிர்களின் உடலை வளர்ப்பவனுமாகிய ஆதி சிவபெருமானின் அருளை அடைவார்கள்.

பாடல் #540

பாடல் #540: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்
ஞாலத் திவன்மிக நல்லனென் றாரே.

விளக்கம்:

சிவபெருமானின் திருச்சபையைச் சுற்றி இருக்கும் அழிவில்லாத தேவர்கள் அவரின் பால் போன்ற வெண்ணிற உடலின் பாதத்தைப் பணிந்து தாங்கள் முக்தி பெற வேண்டி பொறுமையுடன் காத்திருப்பார்கள். அவ்வாறு பொறுமையுடன் இருக்கும் தேவர்களை திருமாலுக்கும் ஆதிபிரம்மனுக்கும் மன்னராக இருக்கின்ற சதாசிவமூர்த்தி உலகத்தில் மிகவும் நல்லவர்கள் என்று அருளினார்.

பாடல் #539

பாடல் #539: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

விளக்கம்:

உண்மை வழியைப் பற்றி அதிலிருந்து விலகாமல் நிற்கும் யோகியர்களின் நெஞ்சில் இறைவனோடு இரண்டறக் கலக்கவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கின்றது. பல்லி எப்படி தான் பற்றியதை விடாதோ அதுபோல எண்ணமும் தான் எண்ணியதை விடாது. இந்திரியங்களை (மூக்கின் வழியாக பிராணாயாமமும், நாக்கின் வழியாக மந்திரமும்) அடக்கி சிந்தனையை பல எண்ணங்களில் வீணாக சிதறவிடாமல் பொறுமையாக இருப்பவர்களுக்கு வற்றாத அமுதம் சுரக்கும்.

பாடல் #538

பாடல் #538: இரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

விளக்கம்:

சிவஞானியை நிந்தித்தலே (திட்டுதலே) நல்லது என்றுத் தவறாக நினைத்து நிந்திப்பவர்களுக்கு இருக்கும் நல்ல வினைகளும் தீய வினைகளாக மாறி துன்புறுவார்கள். சிவஞானியை வந்தித்தலே (வணங்குதலே) நல்லது என்று நினைத்து வணங்கியவர்களுக்கு இருக்கும் தீய வினைகளும் நல்ல வினைகளாக மாறி சிவஞானிகளின் அடியவர்களாக ஆகியவுடன் அவர்களின் அருளால் பேரின்பமான சிவபோகத்தை அடைவார்கள்.

பாடல் #537

பாடல் #537: இரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை

ஆண்டான் அடியவ ரார்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.

விளக்கம்:

உலகத்தவர்களிடம் எந்தப் பற்றும் இல்லாத சிவனடியார்கள் யாருக்கு விரோதிகள்? தங்கள் வயிற்றுப் பசிக்குப் பிச்சை எடுத்து உண்ணும் அந்த அடியவர்களை தான் கொண்ட வெறுப்பினால் இகழ்ந்து பேசுபவர்கள் தமக்குத் தாமே செய்துகொண்ட தீவினையால் நரகத்திலேயே மிகவும் கொடியதான கடைசி நிலை நரகத்தில் சென்று விழுவார்கள்.