16-5-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
எல்லாம் வல்ல இறைவனாம், அனைத்தும் படைத்தவனாம், நல் எண்ணம் படைத்தவனாம், என்றெல்லாம் புகழ்த்தும் போது, ஏன் நலத்துடன் தீயதும் படைத்தான் என வினாவக் கண்டோம்.
இதற்கான விடை தீயது இல்லையேல் நலமறிய இயலாது என்பதேயாகும். நிழலின் அருமை தெரிதல் வேண்டுமென்றால் வெயிலின் கொடுமையும் காணுதல் வேண்டும் அறிதல் வேண்டும் என்றும் கூறுவோம். உங்களுக்கு யாம் ஒரு நாணயம் அளித்தோம் என்றால், அதில் இரு பக்கம் இருத்தல் வேண்டும் என்பது இயற்கையின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க, நல்லது எனக் கூறிக்கொண்டால் தீமையும் இருத்தல் வேண்டும். தீமையே இல்லாவிடின் தீயவன் இல்லாவிடின் எவனை நல்லவன் என அழைப்பீர்கள்?
இத்தகைய நிலையில் ஒருவனுக்குச் சர்வாங்க சூலத்தால் (உடல் முழுவதும் சூலத்தால் குத்துவது போன்ற வலி) பாதிக்கப்பாட்டால் அது இல்லா நிலையில் ஆனந்தம் கொள்ள இயலாது. இது இறைவனின் விதியாகின்றது. இவ்விதம் இருக்க நலம் இருந்தால் தீமையும் காணும் தீமையை அறிந்து அதிலிருந்து விலகி வருதல் வேண்டும் என்பது மனிதனின் சுய அறிவு ஆற்றலின் விளைவாகின்றது. இத்தகைய நிலையில் நமக்குத் துன்பம் தரும் அனைத்தும் நாம் விட்டு நீங்குகின்றோம். உதாரணமாக, அக்னியில் கையை விடுவதில்லை ஏனெனில், அது சுட்டு விடும். துன்பம் தரும் காரியங்களில் ஈடுபடுவதில்லை ஏனெனில் அது துன்பத்தை தரும். இவ்விதம் இவற்றையெல்லாம் விட்டு நீங்குகின்றோம். ஆயினும் ஆனந்தம் கொடுக்கும் பலவற்றை விட நாம் எண்ணுவதில்லை. அதுபோல் இதுவும் தீமையென தீயவற்றை உணர்ந்து படிப்படியாக இவைகளிலிருந்து விடுதலை பெற நல்வழியில் முன்னேற்றம் காண்பீர்கள்.