26-1-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கர்ம வினை என்று சொல்கிறார்கள், கர்மம் என்றால் செயல், செயலுக்கு உண்டான வினை, அதற்குரிய விளைவு உடனடியாக இருக்கிறது இந்தக் கலிகாலத்தில். இருந்த போதிலும், வேதங்கள் சொல்லுவதாவது, நீங்கள் போன ஜென்மத்தில் செய்தது தான் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுகிறீர்கள் என்று. அது ஏன்? வேதம் சொல்வது சரியா? அல்லது நாம் பார்ப்பது சரியா?
ஒரே நேரத்தில் மூன்று விதைகள் விதைக்கின்றோம். ஒன்று கீரை, இரண்டாவது நெல், மூன்றாவது பனை. மூன்றும் ஒரே நேரத்தில் தான் விதைக்கின்றோம். கீரையானது பதினைந்து நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. நெல்லானது அதனுடைய பலனை ஆறு மாதத்தில் கொடுக்கிறது. ஆனால் பனையானது மூன்று தலைமுறைகள் கழித்துத் தான் அதனுடைய பலனைக் கொடுக்கிறது. அதனால் நாம் என்ன வினையைச் செய்கின்றோமோ அதனைப் பொறுத்துத்தான் அதனுடைய விளைவுகள் இருக்கும். ஆதலால் இந்த ஜென்மத்தில் செய்வது உடனடியாக கிடைக்கின்றது, ஜென்மாந்திரமாக வருவது பெரிய வினை. இக்காலத்தில் கிடைப்பது உடனடியாக மாற்றக்கூடிய வினைகள். இதை வைத்துத்தான் அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று வினையை வைத்துப் பொதுவாகச் சொல்லியிருக்கின்றார்கள். பெரும் வினையென்றால் தாமதித்துத்தான் விளைவுகள் இருக்கும்.