12-4-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
பலர் தமக்குள் இருக்கும் குறைகள் தெரியாத நிலையில் இருக்கின்றனர் இத்தகைய குறைகளை மூடி மறைப்பதற்க்காக பெருமளவில் கோபம் கொண்டு சீறி எழுகின்றனர் இது அவர்களுடைய கீழ் நிலையை மறைப்பதற்க்கான ஓர் முயற்சியாகும் இத்தகைய நபர்கள் எவ்வாறு இதிலிருந்து மீள்வது?
முதலில் தம் குறைகளை உணர வேண்டும். குறைகளை உணர்ந்த பின் அக்குறைகளை நீக்கி குறையின்றி வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திட கோபங்கள் குறைவதோடு உண்மையான நிலையை உணர்ந்து பெருமளவில் அமைதி கிடைக்கும். ஆன்மீக பாதையில் செல்கின்ற பலருக்கும் குறிப்பாக சக்தி உபாசனையில் (அம்மனை வழிபடுபவர்கள்) ஈடுபடுகின்றவர்க்கும் தன்னை விட சிறந்த பக்தர் இல்லை என்கின்ற ஆணவம் அதிகமாக வரும். இது அகங்காரத்தை வளர்க்கும் தன் குறைகளை மறைத்து கோபப்படுவார்கள். ஆத்திரம் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவார்கள். சம்பந்தப்படாத மற்றவர்களையும் வார்த்தையால் தாக்கி பேசுவார்கள் இதனை தவிர்த்திடவே முதலில் நாம் நமக்குள் இருக்கும் குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் செய்தால் மட்டுமே முன்னேற்றங்கள் கிடைக்கும். குறைகளை கண்டால் என்ன செய்வது? அதை வளர விடக்கூடாது. அதை நீக்கும் வழியை தேட வேண்டும். இது ஒரு நாளில் முடியாத செயல் பல காலங்கள் செல்ல வேண்டும் என்ற விதி இருந்த போதிலும் படிப்படியாக குறைகளை நீக்குதல் வேண்டும். இல்லை என்றால் ஓர் விஷக் கொடியாக இது வளர்ந்து பின்பு இறைவனை நெருங்கும் தகுதியற்றவனாக மாற்றி விடும். ஏனெனில் அகங்காரத்திற்கும் கோபத்திற்கும் அப்பாற்பட்டவனாக நிற்கின்றான் அத்தெய்வம். பாசம் அன்பு இரண்டும் இரண்டு கால்களாக வைத்து நடமாடும் அந்த இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் பாசம் அன்பு என்ற இரண்டு தன்மைகளை நாம் வளர்த்தல் வேண்டும். அத்தன்மைகளை வளக்க வேண்டுமென்றால் அகங்காரமும் கோபமும் ஆகாது என்பதை நன்கு உணர வேண்டும். இது எவரையும் சுட்டிக்காட்டாமல் பொதுவாக ஆன்மீக பாதையில் செல்வோர்க்கு நேரிடக்கூடிய ஓர் கடினம் ஆகும். இது ஆன்மீக பருவத்தில் ஏற்படக்கூடிய ஓர் நிலை.